செவ்வாய், 14 ஜூன், 2016

உலக முதியோர் வதைப்பு விழிப்புணர்வு நாள் ஜூன் 15



உலக  முதியோர்  வதைப்பு விழிப்புணர்வு நாள் ஜூன் 15

ஆசிரியர் பணியுடன் மாலை நேரத்தில் நெசவு தொழில், ஏலச்சீட்டு நடத்துதல் என 30 ஆண்டுக்கு முன் வரை ராமைய்யாவின் அரவணைப்பில் மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் என குடும்பமே சந்தோஷத்தில் மிதந்தது. பிள்ளைகள் எதை கேட்டாலும் வாங்கி கொடுத்த ராமைய்யாவுக்கு இப்போது அவர்களை பற்றி பேசினாலே வெறுப்பு. நான் இறந்த பின்னர் உடலைக் கூட மருத்துவ கல்லூரிக்கு தானமாக தான் தரவேண்டும் என்கிறார். தனது பென்சன் பணத்தில் முதியோர் இல்லத்தில் 86 வயதை கடந்து நாட்களை ஓட்டி வருகிறார். தனது முதல் மனைவி இறப்புக்கு பின்னர் குடும்ப சொத்துக்களை வழக்கு போட்டு வாங்கிக்கொண்டு பிள்ளைகள் அனுப்பி விட்டதால் இப்போது சேலத்தில் போதிமரம் என்ற முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.

பென்சன் வாங்கும் ராமய்யாவின் நிலையே இப்படி என்றால் எந்த வருமானமும் இல்லாத லட்சக்கணக்கான முதியோரின் நிலை இன்னும் கொடூரமானது. பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு நிராதரவாக சாலையோரங்கள், புன்னிய ஸ்தலங்களில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்துவோர் ஏராளம். அதைக்காட்டிலும் கொடூரம் வயது முதிர்ந்த முதியோரை சத்தமில்லாமல் மறைமுகமாக கொலை செய்யும் அவலங்களும் நடக்கின்றன.
அடுத்த 30 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஈடாக,  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கின்றன ஆய்வுகள்.  உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு.
முதியோருக்கு எதிரான கொடுமைகளை கட்டுப்படுத்தவேண்டும். அதற்கேற்ற திட்டங்களை வகுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் ஆண்டு தோறும் ஜூன்  14ம் தேதி ஐ.நா மன்றம் கடந்த 2006 முதல் அனுசரித்து வருகிறது.  விழிப்புணர்வு தினத்தில் உடல் ரீதியாகவும், மனம் மற்றும் பொருளாதார ரீதியாகவும் முதியோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காண வலியுறுத்துகிறது.

முதியோரைப் பாதுகாக்க பொருளாதாரச் சார்பின்மையை அதிகப்படுத்துதல், தலைமுறை இடைவெளியைக்  குறைக்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,  முதியோருக்கு உதவ சுய உதவிக் குழுக்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்தியாவில் முதியோர் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் நடைமுறையில் இருந்தபோதிலும், அதைப்பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. பொதுவாக காவல் நிலையங்களில் கூட முதியோர் கொடுக்கும் புகார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. சமரசம் என்ற பெயரில் பஞ்சாயத்து பேசி அனுப்பி வைக்கும் சம்பவங்களே அதிகம். எனவே சட்டரீதியான பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.

கடந்த காலங்களில் இளைய தலைமுறையினர் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும், கல்வியறிவில் சிறந்தவர்களாகவும் விளங்க முதியோர்களின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் கிடைக்கப்பெற்றதனால் தான். இந்நிலையை இன்றைய தலைமுறையினருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்றைய சீர்குலைவுக்குக் காரணம் முதியோர் புறக்கணிக்கப்பட்டது தெரியவரும். ஒரு சமுதாயத்தையே நல்வழிப்பாதைக்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் முதியோரை போற்றி பாதுகாப்பது அவசியம்.முதியோர்கள் நீண்ட நாள்கள் வாழ்ந்தார்கள் என்பதுடன் பாதுகாப்பாக, கண்ணியமாக வாழ்ந்தார்கள் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது தான் வேர்களுக்கு விழுதுகள் ஆற்றவேண்டிய நன்றிக்கடன்.  நன்றி -தினகரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக