வெள்ளி, 24 ஜூன், 2016

சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாள் -ஜூன் 26


 சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாள் -ஜூன் 26

சர்வதேசத் தொழில் வர்த்தகம் இந்தியாவில் நுழைந்த பிறகு 22 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த  மகாராஷ்டிரா மாநில தொழில்துறை வளர்ச்சி 2008 முதல் வெகுவேகமாக சரிவை நோக்கி சென்றது.

பொருளாதார நிபுணர் களுக்கு இதன் காரணம் புரியவில்லை. ஆனால் வெகுவிரைவிலேயே ஒரு உண்மை தெரிந்தது. உதிரி பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மனித உழைப்பு வெகுவேகமாக சரியத்துவங்கியது. இதன் சங்கிலித்தொடர் பாதிப்பு இந்தியப் பொருளா தாரத்தையே புரட்டிப்போட்டது.

காரணம் குட்கா என்னும் போதைப்பொருள் 9 வயதில் இருந்து 27 வயதிற்குள்ளானவர்களை பாதித்தது, இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 23 விழுக்காடு இளம் தலைமுறையினர் அடிமையானார்கள். 2012 மாத்திரம் மராட்டிய மாநில சுகாதாரத்துறை புகையிலை போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க பல கோடிகளை செலவு செய்தது. உடனடியாக ஆபத்துகால நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிர மாநிலம் குட்கா என்னும் போதைப்பொருளைத் தடை செய்தது மட்டுமல்லாமல் விற்பவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சிறைக்கு அனுப்பியது. இதனை அடுத்து மிகவும் அபாயகரமான இந்த போதைப்பொருளின் ஆபத்தை உணர்ந்த பல மாநிலங்கள் தடைசெய்தது.

இன்றும் போதைப்பொருள் இந்திய பொருளாதாரத்திற்கு ஓர் அச்சுறுத்தும் பொருளாகவே திகழ்கிறது, இப்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் போதை ஒழிப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  1987-ஆம் ஆண்டு அய்.நா தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டு ஜூன் 26-ஆம் நாள் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் உபயோகிப்பவர்களாக உள்ளனர் என்று அய்.நா அறிக்கையில் கூறுகிறது. போதை என்றாலே பொரும்பாலானோர் மது மற்றும் புகையிலைத்தொடர்பானவைகள் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இதையும் தாண்டி உலகம் முழுவதும் மற்ற போதைப்பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அநேகமாக நடக்கிறது, எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருட்கள் கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் ஊக்க மருந்து ஒயிட்னர் மற்றும் சிலவகைப் பெயிண்டுகள் கூட போதை வஸ்துக்களாக பயன்படுத்தப்படுகின்ற்ன. இவை உடல்மனது இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் கேடாக அமைந்து விடுகிறது,

அறியாமை விரக்தி உளவியல் குறைபாடுகள் பொழுதுபோக்கு தற்காலிக உற்சாகம் தேவைப் பாடுகள் முதலிய காரணிகளாலேயே போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது, இதுவே பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது.  சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவருமே போதைப்பொருள் உபயோகித்து வருகின்றனர். .  ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகிறது ஒரு ஆயுதம் போதைப் பொருளாகும். உலகில் வர்த்தகத்தில் இராணுவத் தளவாடம் மற்றும் எரிஎண்ணெய் வர்த்தகத்திற்கு இணையாக போதைப்பொருள் வணிகம் உள்ளது. மற்ற இரண்டும் சட்டரீதியாக என்றால் போதைப்பொருள் சட்டவிரோத வணிகமாக உள்ளது. போதைப்பொருள் கடத்துதல் விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு வகையில் முயற்சிக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை, தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது,  ஆகவே போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி மறுவாழ்வு அளிக்கவேண்டும். விற்பனையை தடைசெய்தால் மாத்திரமே இதனைத் தடுக்கமுடியும்.

இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985_இன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ஆம் தேதி, தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் டில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல் படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.
நன்றி-விடுதலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக