புதன், 22 ஜூன், 2016

திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர் சர் பி. தியாகராயர் நினைவு நாள் ஜூன் 23


திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர் சர் பி. தியாகராயர் நினைவு நாள் ஜூன் 23 
வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் (ஏப்ரல் 27, 1852 - ஜூன் 23, 1925) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தொழிலதிபராகவும் பெயர்பெற்றிருந்தார். 1916 இல் பிராமணரல்லாத சாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் டி. எம். நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். சென்னை சட்டமன்றத்துக்கு முதன் முதலாக 1920இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று, முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆனால் அதனை ஏற்காமல் கட்சித்தலைவராகவே நீடித்தார். இவர் நீதிக்கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தனர். 1925 இல் இவர் இறந்த போது இவரது நினைவாக சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட தியாகராய நகருக்கு (டி. நகர்) இவரது பெயர் சூட்டப்பட்டது. பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் உள்ளது.[1][2]

இளமை
நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும் செல்வம் உடையவர்களாக, சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவர், 1876 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி அம்மாள். அவருக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள்களும் பிறந்தனர்.

தொழில்
தியாகராயருக்கு நெசவுத் தொழிலைத் தவிர தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்புக் காளவாசல் போன்ற தொழில்களும் இருந்தன. அதில் ஏராளமானவர்கள் வேலை செய்தனர். இந்தத் தொழில்களுக்கு உதவியாக நூறு படகுகளைக் கொண்ட சொந்தப் போக்குவரத்துத் துறையையே வைத்திருந்தார். நெசவாளர்கள் மாநாடு, மற்றும் கண்காட்சிகளை நடத்தி அதில் நடந்த போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பல பெற்றார்.

தமது வீட்டருகே பிட்டி நெசவு ஆலை என்ற பெயரில் சுமார் நூறு தறிகளைக் கொண்ட நெசவாலையை ஏற்படுத்தினார். தற்போது நம் கைத்தறி நெசவில் குஞ்சம் இழுத்து நெய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே. அதற்கு முன் நாடாவை கைகளில் தள்ளி தான் நெய்தார்கள். இங்கு தயாரிக்கப்பட்ட பிட்டி மார்க் கைக்குட்டைகள் உலகப் புகழ் பெற்றவை.

அரசியல்
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. தியாகராயர் அம்மாநாட்டை முன்னின்று நடத்தினார். காந்தியடிகள் சென்னை வந்த போது அவருக்குச் சிறப்பானதொரு வரவேற்பைத் தந்தார். 1882 ஆம் ஆண்டு “சென்னை உள் நாட்டினர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்தினார். இந்தச் சங்கம் பிற்காலத்தில் “சென்னை மகாஜன சபை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இச்சபை அவ்வப்போது சென்னையில் கூடி விவாதித்துக் கோரிக்கைகளை ஆங்கிலேயே அரசுக்குச் சமர்பித்து வந்தது. 1916 ஆம் ஆண்டு வரை அவர் ஒரு தீவிர காங்கிரஸ்காரராகவே செயல்பட்டார். தந்தை பெரியாருக்கும் முன்னரே சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தவர் இவரே. தமிழகக் காங்கிரஸில் ஆதிக்க வெறி கண்டு மனம் வெதும்பிய இவர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அப்போது அவரைக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட பெரியார்,பின்னாளில் அதே காரணத்திற்காகக் காங்கிரஸை விட்டு விலகி, தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார். 1916 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திராவிடத் தலைவர்கள் டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர், இராம நியங்கர், கே.வி. ரெட்டி நாயுடு மற்றும் சர். பி. தியாகராயர் ஆகியோர் காங்கிரசுக் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

பல கட்சிகளிலும் இருந்த தலைவர்கள் இவரிடம் கொள்கை ரீதியாக வேற்றுமை கொண்டிருந்தாலும் உளப்பூர்வமாக இவரிடம் பேரன்பு கொண்டிருந்தனர். ஒரு சமயம் இவரின் நிர்வாகத்தை எதிர்த்து தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் மிக ஆவேசமாக உரையாற்றினார். அவரிடமும் தியாகராயர் நட்புணர்வு பாராட்டினார். சர்.சி.பி. ராமசாமி அய்யர் தேர்தலின் போது தியாகராயரை எதிர்த்துப் போட்டியிட்டார். துப்பாக்கியைக் காட்டி அவருக்கு எதிராக வாக்கு சேகரித்தார். ஆனால் மிகவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தியாகராயர். அவர் மறைந்த போது அதே சி.பி.ராமசாமி அய்யர், "ஒரு தன்னலமற்ற மனிதாபிமானியை இழந்தோமே" என்று சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

நீதிக்கட்சி

1920களில் நீதிக்கட்சித் தலைவர்கள் - முன்வரிசையில் சிறுகுழந்தைக்கு வலப்புறம் தியாகராய செட்டி அமர்ந்திருக்கிறார்
1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னை, வேப்பேரியில் எத்திராசு முதலியார் இல்லத்தில் சர். பி. தியாகராயர் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் “தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடர்ந்து நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் “நீதி (Justice) என்ற பெயரில் ஒரு இதழையும் நடத்தினார். இந்த அமைப்பு நடத்தி வந்த "நீதி' என்ற இதழின் பெயரைக் கொண்டே, அந்த அமைப்பை நீதிக்கட்சி (Justice Party) என்ற பரவலாக அழைக்கப்பட்டது.

சர்.பி. தியாகராயர் நீதிக்கட்சியின் தலைவராக சிறப்பாக கட்சியை நடத்தி வந்தார். தியாகராயர் வெளியிட்ட கொள்கை விளக்க அறிக்கை, மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை பெருமளவுக்குத் தட்டி எழுப்பியது. அவர்கள் நீதிகட்சியின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் பேராதரவு தந்தனர். நீதிக்கட்சி இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வேண்டும் என்று கோரியது.

சர்.பி. தியாகராயரின் அவர்களின் தன்னலமற்ற விடாமுயற்சிகள் நீதிக்கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த அரும் பணிகளுக்கு இடையே 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் வெலிங்டன் பிரபு அவர்கள்,நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய தியாகராயரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க தான் விரும்பவில்லை என்று கூறி, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராக பொறுப்பேற்கச் செய்தார்.

காந்தியும் தியாகராயரும்
தியாகராயர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்த போதிலும் பார்ப்பனீய ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார். அதனால் அவர் மகாத்மா காந்தியிடமும், முரண்பட நேர்ந்தது. காந்திஜியின் கதர் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பழைய முறையிலான கைத்தறி நெசவு நம் இந்திய முன்னேற்றத்திற்கு ஏற்றதல்ல.அதில் புதுமையைப் புகுத்தி தொழில் புரட்சி புரிய வேண்டும் என்பது தியாகராயரின் எண்ணம். அதில் தீவிரமும் காட்டினார். காந்தியடிகள் இவரிடம் முரண்பட்ட போதும், அவர் சென்னைக்கு வந்த போது பிட்டி நெசவாலைக்கு வருகை தந்து அதை பார்வையிட்டார். அதில் ஒரு தறியில் அமர்ந்து நெய்தும் பார்த்தார். அதில் கண்டிருந்த நவீன உத்திகளைக் கற்றுக் கொள்வதற்காகத் தன்னுடைய புதல்வர்களான மணிலால், மதன்லால் ஆகிய இருவரையும் ஆறு மாத கலைப் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்.

சமயப் பணிகள்
தியாகராயரை எல்லோரும் நாத்திகர் என்றே நம்பியிருந்தனர். ஆனால் அவர் சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் கடவுள் திருப்பணிகளிலும் நிகரற்று விளங்கினார். சென்னையிலுள்ள மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தை ரூபாய் பத்தாயிரம் செலவு செய்து திருப்பணி செய்து குடமுழுக்கிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் கோவிலைச் சேர்ந்தோர் இவரைக் கோபுரத்திலேறி கும்பநீரை ஊற்றஅனுமதிக்கவில்லை. பார்த்தசாரதி கோவிலுக்கும் திருப்பணி செய்வித்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் உற்சவ சிம்ம வாகனத்தில் கண்களில் பதிப்பதற்காக இரண்டு கண்ணாடிக் கண் விழிகளை லண்டனிலிருந்து தருவித்தார். இன்றும் அந்த வாகனத்தில் தான் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

பதவியும் தொண்டும்
1920 ஆம் ஆண்டு மாண்டேடு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி நகராண்மைத் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தலைவர் (மேயர்) சர்.பிட்டி. தியாகராயர் ஆவார்.
1905 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் 5 ஆம் ஜார்ஜ் சென்னை வந்தபோது, நகராண்மை தலைவராக (மாநகராட்சி மேயர்) இருந்த சர். பிட்டி. தியாகராயர், இளவரசரை வெள்ளுடை அணிந்து வரவேற்க அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
1882 முதல் 1923 வரை சுமார் 41 ஆண்டுகள் சென்னை நகராண்மை கழகத்துடன் தொடர்புடையவராக திகழ்ந்த தியாகராயர், 1081 கூட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி கூட்டத்தின் பின்புறம் உள்ள மக்கள் பூங்காவையும் , பெண்களுக்கென்று தனியாக ஒரு பூங்காவை பேரக் நெய்டன் என்னும் இடத்தில் நிறுவினார்
1920 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சிப் பள்ளியில் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
1919 முதல் 1923 வரை நகராண்மை தலைவராகப் பதவி வகித்தார். அந்நேரத்தில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க வருமாறு கவனர் கோரினார். அதனை ஏற்க மறுத்தார்.
1909 – 12 ஆம் ஆண்டு சென்னை ஆளுநர் குழுவிற்கு நகராண்மை குழுவிலிருந்து அனுப்பப்படும் ஒரு நகரசபை உறுப்பினராக திகழ்ந்தார்.
பார்ப்பன எதிர்ப்பும் உதவிகளும்[தொகு]
பார்ப்பனீயத்தை எதிர்த்தாரே தவிர, பார்ப்பனர்களைத் தியாகராயர் வெறுத்ததில்லை. நம் வழக்குகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பார்ப்பன வக்கீல்களைக் கொண்டு வழக்கு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.ஆனால், ஏழைப் பார்ப்பனர்களுக்கு உதவிகள் செய்தார்.

தியாகராயரின் நீண்ட தாழ்வாரத்தில் ஏராளமான பார்ப்பன சிறுவர்கள் அமர்ந்து வடமொழியும், மந்திரங்களும் கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் அவர் செய்வார். சில நண்பர்கள் அவரைப் பார்த்து பார்ப்பனருக்கு எதிரான இயக்கம் நடத்துகிறீர்கள். ஆனால் உங்கள் இல்லத்திலேயே இத்தகைய உதவியைச் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு நான் பிராமணர்களை வெறுக்கவில்லை. பிராமணர்கள் தங்கள் குலத் தொழிலை செய்யட்டும். நாடாள்வது அரசப் பரம்பரையினரான நமதுப் பணி. அவர்களை அவர்களுடைய தொழிலை நாம் செய்ய வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் வேறு எங்கு போவார்கள் என்று கூறினார். யஞ்யராமன் என்ற பிராமணர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய் தங்கினார். அதனால், அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டு வேலையையும் இழந்தார். அப்போது தியாகராயர் தலையிட்டு அவரைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்தார்.

கல்விப்பணி
சர்.பிட்டி. தியாகராயர் தமது சொந்தப் பணத்தில் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார். சென்னையில் உள்ள தியாகராயர் கல்லூரி இவர் நிறுவியதே. சென்னை மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகங்களை நிறுவப் பெரும் தொண்டாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக வழி ஏதும் செய்யப்படாமையால் செட்டிநாடு அரசர் அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். பாடசாலைகளைப் போலவே தொழில் நுட்பப் பயிற்சி பள்ளிகளைத் தொடங்கினார். முஸ்லீம் கல்வி அறக்கட்டளையிலும் உறுப்பினராகவும்,தலைவராகவும் இருந்து ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்தார். பச்சையப்பர் கல்வி அறக்கட்டளையை சீரமைத்து அனைத்து தரப்பினரும் உறுப்பினராகும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.

சிறப்புகள்
தியாகராயரின் நினைவாக இன்றும் சென்னையிலுள்ள ஒரு கல்லூரிக்கும இவரது பெயர் உள்ளது. மேலும் சென்னை தியாகராயர் நகர் என்பது இவரைக் குறிப்பதுவே. பெங்களூரிலும் தியாகராயர் நகர் என்ற பகுதி உள்ளது. இந்திய அரசு அண்மையில் இவரினுருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. அஞ்சல் தலையின் பின்னணியில் தறி நெய்யும் நெசவாளியின் உருவம் காணப்படுகிறது.

ரிப்பன் மாளிகை எனப்படும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் இவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற தி.மு.க வினர் நகர மன்றத்தில் நுழையும் முன் வளாகத்தின் எதிரில் அமைந்திருந்த தியாகராயர் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நூல்கள்
தியாகராயர் பற்றிப் பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில :
ஜி.ஜெயவேல் என்பவர் எழுதிய "வள்ளுவர் வகுத்த நெறிமுறையில் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் வாழ்க்கை',
நன்றி-விக்கிப்பீடியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக