வியாழன், 23 ஜூன், 2016

தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் அகிலன் பிறந்த நாள் ஜூன் 27.


 தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் அகிலன் பிறந்த நாள் ஜூன் 27.
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

படைப்புகள்
நிகழ்காலப் புதினங்கள்
அவளுக்கு
இன்ப நினைவு
எங்கே போகிறோம் ?
கொம்புத்தேன்
கொள்ளைக்காரன்
சித்திரப்பாவை
சிநேகிதி
துணைவி
நெஞ்சின் அலைகள்
பால்மரக்காட்டினிலே
பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
புதுவெள்ளம்
பெண்
பொன்மலர்
வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
வானமா பூமியா
வரலாற்றுப் புதினங்கள்
வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை)
கயல்விழி (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) (சுந்தரபாண்டியன் கதை)
வெற்றித் திருநகர் (விசுவநாத நாயக்கன் கதை)
கலை
கதைக் கலை
புதிய விழிப்பு
சுயசரிதை
எழுத்தும் வாழ்க்கையும்
மொழிபெயர்ப்பு நூல்கள்
தாகம் - ஆஸ்கார் வைல்ட்
சிறுகதை தொகுதிகள்
சத்ய ஆவேசம்
ஊர்வலம்
எரிமலை
பசியும் ருசியும்
வேலியும் பயிரும்
குழந்தை சிரித்தது
சக்திவேல்
நிலவினிலே
ஆண் பெண்
மின்னுவதெல்லாம்
வழி பிறந்தது
சகோதரர் அன்றோ
ஒரு வெள்ளை சோறு
விடுதலை
நெல்லூர் அரசி
செங்கரும்பு
அகிலன் சிறுகதை - அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுப்பு
சிறுவர் நூல்கள்
தங்க நகரம்
கண்ணான கண்ணன்
நல்ல பையன்
பயண நூல்கள்
நான்கண்ட ரஷ்யா
சோவியத் நாட்டில்
மலேசியா சிங்கப்பூரில் அகிலன்
கட்டுரை தொகுப்புகள்
நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000)
வெற்றியின் ரகசியங்கள்
நாடகம்[தொகு]
வாழ்வில் இன்பம்
திரைக்கதை வசனம்
காசுமரம்
ஒலித்தகடு
நாடும் நமது பணியும் - அகிலன் உரை
விருதுகள்
1963 - சாகித்ய அகாதமி விருது (வேங்கையின் மைந்தன்)
1975 - ஞான பீட விருது (சித்திரப்பாவை)
1975 - ராஜா சர் அண்ணாமலை விருது (எங்கே போகிறோம்?)


நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக்  கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே. ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்'' என்று கூறியுள்ளார் அகிலன்.

1922-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி  புதுக்கோட்டைக்கு அருகே உள்ள பெருங்களூர் எனும் கிராமத்தில் பிறந்தார். அகிலனின் தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை, சமஸ்தான அரசின் காட்டிலாகா அதிகாரி. தாய் அமிர்தம் அம்மாள்.

அகிலனின் இளமைக்காலக் கல்வி  புதுக்கோட்டை, கரூர் மற்றும் பெருங்களூரில் கழிந்தது.

மாணவப்பருவத்தில் - 1938  முதலே அகிலன் எழுதத் தொடங்கினார். பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய  "அவன் ஏழை' எனும் அவரது முதல் சிறுகதை, அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது. இதை அவரே தனது "எழுத்தும் வாழ்க்கையும்' என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.

அகிலன், பள்ளிப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார், அவரைச் சுற்றி நிகழ்ந்த தேசியப் போராட்டங்களும், காந்திஜியின் கரூர் வருகையும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் சர்தார் வல்லபாய் படேலைச் சந்தித்ததும், அகிலனின் சுதந்திரப் போராட்ட வேட்கையைத் தூண்டின.

நாட்டு விடுதலை ஆர்வத்தில் தமது மேற்படிப்பை உதறி விட்டு, 1940-இல் வெளிவந்த இவர், தமிழகத்தின் சிறுபத்திரிகைகள் முதல் பிரபல இதழ்கள் வரை சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். 1944-இல் தட்டம்மாள் என்பவரை மணந்துகொண்டார்.

தனிமனித உணர்வுச் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் என்று பற்பல தளங்களில் சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி, தமிழ் வாசகரிடையே தனித்த அடையாளத்துடன் வரவேற்கப்பெற்றார். முழுநேர எழுதுப்பணிக்காகத் தமது ரயில்வே அஞ்சலகப் பணியை 1958-இல்  விட்டு விலகி வந்தார்.

சில காலம் முழு நேர எழுத்துப்பணி என்ற இலக்கிய வாழ்வுச் சோதனையை நடத்திய பின், 1966-லிருந்து  சென்னை அகில இந்திய வானொலியில் சொற்பொழிவுத் துறை அமைப்பாளராகப் பணியாற்றி 1982-இல் ஓய்வு பெற்றார்.

அகிலனின் சிறுகதைகள், வாழ்வின் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை. எளிய நடையில், வலிமையான கருத்துகளை சுவாரசியமான தனது எழுத்து நடையால் வாசகரின் மனதில் பதிய வைப்பதே காலத்தை வென்ற படைப்பாளியான அகிலனின் தனித்துவம்.

ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ அதே உணர்வை, படிக்கும்போது வாசகரும் பெறுவதே அந்தப்  படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி அகிலன்.

200 சிறுகதைகளை எழுதியுள்ளார் அகிலன். அவை  அனைத்தும் ஒன்றாக "அகிலன் சிறுகதைகள்' என்ற தலைப்பில் கால வரிசைப்படி இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அகிலனின் சிறுகதைகள் அடிமை இந்தியா முதல் இன்று வரை உள்ள 50 ஆண்டு கால தமிழக வரலாற்றின் மனசாட்சியாகவே படைக்கப்பட்டுள்ளன.

இவரது சிறுகதைகள், தனி மனித உணர்வுகள் மூலம் சமூகப் பிரச்னைகளை அச்சமின்றி  தோலுரித்துக் காட்டுகின்றன. வீடும் நாடும் ஒன்றை ஒன்று எப்படிப் பாதிக்கின்றன என்பதைத்    துல்லியமாகப் பேசும் கதைகள் - அகிலனின்

சிறுகதைகள்.

இவரது நிலவினிலே, எரிமலை, சக்திவேல் ஆகிய சிறுகதைத்  தொகுப்புகள் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றவை. அகிலனின் காசு மரம், மகிழம்பூ, பொங்கலோ பொங்கல் ஆகிய சிறுகதைகள் தொலைக்காட்சியில் நாடகமாக்கப்பட்டன.

 பொதுவாக இலக்கியவாதிகள் ஒரு குறிப்பிட்ட வகைப்  படைப்புகளிலேயே மிளிருவார்கள். ஆனால் அகிலன், பன்முகத் தன்மைகொண்டவர் என்பதை  அவரது நாவல்கள் மூலம் அறியலாம். அகிலனின் 20 நாவல்களும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றதோடு, பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றன. "கலைமகள்' இதழ் நாராயணசாமி அய்யர் நாவல் போட்டி துவங்கிய முதல் ஆண்டிலேயே 1946-இல் தனது முதல் நாவலான "பெண்'ணுக்கு  முதற் பரிசு பெற்றார். இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம் முதலிய இந்திய மொழிகளிலும், சீன மொழியிலும் பல அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்துள்ளது.

அகிலனின், "வேங்கையின் மைந்தன்' சரித்திர நாவல் 21 பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல்லான "வேங்கையின் மைந்தன்' 1963-இல் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றது. இந்நாவல் சிவாஜி கணேசன் குழுவினரால் நாடகமாக்கப்பட்டு நடிக்கப்பட்டது. அகில இந்திய வானொலியிலும் நாடகமாக்கப்பட்டது.

பாண்டிய சாம்ராஜ்யத்தைக் கதைக் களமாகக் கொண்ட அகிலனின் "கயல்விழி' எனும் சரித்திர நாவல், 1964-65-இல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த தமிழ் நாவல் பரிசைப் பெற்றது. கயல்விழி, எம்.ஜி.ஆரால்  மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாகத் திரைப்படமாக்கப்பட்டது.

1975-இல் தமிழுக்கு முதல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்தது அகிலனின் "சித்திரப்பாவை' நாவல். அது ஆங்கிலம் மற்றும் பெரும்பாலான இந்திய மொழிகளில் புத்தகமாகவும், வானொலி, தொலைக்காட்சிகளில் தொடராகவும் வெளி வந்துள்ள இந் நாவல், பல்கலைக்கழகங்களிலும், ஐ .ஏ .எஸ். தேர்வுக்கும் பாட நூலாக உள்ளது.

அகிலனின் "பாவை விளக்கு' அவரது சுய வாழ்வின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஓர் இலக்கிய வாதியின் போராட்ட  வாழ்வை மிக இயல்பாகக்  கூறிச் செல்லும் இந் நாவல், திரைப்படமாக்கப்பட்டு சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டது. கலப்புமணப் பிரச்னையை "வாழ்வு எங்கே?' நாவல் அலசுகிறது. இது "குலமகள் ராதை' - என்ற பெயரில் திரைப்படமானது.

"பொன்மலர்' நாவலின் பாடுபொருள் இன்றளவும் பொருந்தி வருவதால் பல்கலைகளிலும், கல்லூரிகளிலும் பாட நூலாகப் பயிற்றுவிக்கப் பெறுகிறது.

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு (1973) பெற்ற  "எங்கேபோகிறோம்?' என்ற நாவல், காந்திய யதார்த்தத்தின் வெளிப்பாடாய் அமைந்தது. எரிமலை சிறுகதை வெளிவந்து பரபரப்பான விமர்சனங்களுக்கு உட்பட்டது.

கலைமகள் இதழில் 1982 ஜனவரியில் அகிலனின் கடைசி நாவலான "வானமா பூமியா?' தொடங்கியது. தனது உடல் நிலை காரணமாக கடைசி அத்தியாயத்தை அவரால் நிறைவு செய்ய இயலாமல் போனது. அகிலனின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த  கி.வா.ஜ. வின் உதவியுடன், அகிலன் கண்ணன் இந் நாவலின் கடைசி அத்தியாயங்களை நிறைவு செய்தார். இது சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் வந்தது.

காமராஜர், சி.எஸ்., ஜீவா,

மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, கே.முத்தையா ஆகிய தலைவர்களுடனான அகிலனின் நட்பு குறிப்பிடத்தக்கது.

அகிலனின் நட்பு மு.வ., கண.முத்தையா, கல்கி, தகழி சிவசங்கரன் பிள்ளை, சிவராம் கரந்த் என பல தளங்களில் விரிந்திருந்தது. சாகித்திய அகாதெமி தேர்வுக் குழு, தமிழ்நாடு அரசு தேர்வுக்குழுக்கள் போன்ற அமைப்புகளில் நடுவராக இருந்து மற்ற படைப்பாளிகளை, படைப்புகளைத் தேர்வு செய்து அடையாளம் காட்டிய பெருமை அகிலனுக்கு உண்டு.

காந்தியத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அகிலன், மூன்று முறை அரசு அழைப்பை ஏற்று ரஷ்யா சென்றார். தமது பயண அனுபவங்களை "நான் கண்ட ரஷ்யா', "சோவியத்  நாட்டில்' என்ற புத்தகங்களில்  பதிவு செய்தார்.

அகிலனின் மலேசிய, சிங்கப்பூர் பயணம் "பால்மரக்காட்டினிலே' நாவலாக உருப்பெற்றபோது,  கடல் கடந்த தமிழர்களின் போராட்ட வாழ்க்கை நமக்குப்  புரியத்தொடங்கியது.

தமிழ் இலக்கிய விருந்தினராக இலங்கைக்குப் பயணித்த அகிலன், பிகார், ஒரிசா, வங்க தேசம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் போன்ற அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் பயணித்து, தமது அனுபவங்களையும், அரசியல், சமுதாயப் போக்குகளையும் தமது படைப்புகளின் மூலம் பதிவு செய்துள்ளார்.

அகிலனின் தங்க நகரம், கண்ணான  கண்ணன், நல்ல பையன் ஆகிய சிறுவர் கதைகள், குழந்தைகளையும் சிந்திக்கவைக்கக் கூடியதாய் அமைகின்றன.

எளிமை, உண்மை, மனித நேயம், கலைத்தன்மை, நேர்மை, அஞ்சாமை, என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து, கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி - தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த படைப்பாளி அகிலன்,


நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும் தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் (1922) பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மாதான் கஷ்டப்பட்டு இவரைப் படிக்கவைத்தார்.

*பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.

*இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார். 1938-ல் பள்ளியின் காலாண்டு சஞ்சிகைக்காக ‘அவன் ஏழை’ என்ற கதையை முதன்முதலாக எழுதினார். கதை நடையைப் பார்த்து சந்தேகம் அடைந்த தமிழ் ஆசிரியர், ‘எங்கு திருடினாய்?’ என்றார். இவர் கோபத்துடன், ‘என் கதையை திருப்பிக் கொடுத்துடுங்க. பிரசுரிக்க வேண்டாம்’ என்றார். உண்மையை அறிந்த ஆசிரியர், அவரை தட்டிக்கொடுத்தாராம்.

*முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ 1944-ல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய, எளிய நடை இவரது படைப்புகளின் சிறப்பம்சங்கள்.
* இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன.

*இவரது ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், தினமணி ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 2 பாகங்களாக வெளிவந்தன.

*‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள், ‘சத்ய ஆவேசம்’, ‘ஊர்வலம்’, ‘எரிமலை’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

*‘வேங்கையின் மைந்தன்’ நாவல் 1963-ல் சாகித்ய அகாடமி விருதையும் ‘சித்திரப்பாவை’ 1975-ல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார்.

*மு.வரதராசனார், கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம் என பல துறைகளின் ஜாம்பவான்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.

*கொள்கைப் பிடிப்பும் அதனை அடைய உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான உழைப்பும் கொண்டவர். தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியவரும், தமிழில் முதல் ஞானபீட விருதைப் பெற்றவருமான அகிலன், 66 வயதில் (1988) மறைந்தார்.

நன்றி-விக்கிப்பீடியா , தின மணி ,தி இந்து தமிழ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக