செவ்வாய், 1 நவம்பர், 2016

தமிழ்நாடு வயது 60ஐ கடந்தது 01-11-2016:

தமிழ்நாடு  வயது 60ஐ கடந்தது 01-11-2016:

தமிழ்நாடு தெற்கே கன்னியாகுமரி
மாவட்டம், செங்கோட்டை,  வடக்கே
திருத்தணி என்ற எல்லைகள் அமைந்து இன்றோடு
60-ம் ஆண்டு  உதயமாகிறது. நவம்பர்
1-1956அன்று இன்றைய எல்லைப்பகுதிகள்
அமைந்த தமிழ்நாடாகும்.
கன்னியாகுமரி மாவட்டம்
களியக்காவிளையிலிருந்து, தமிழ்நாட்டோடு
இணைந்ததும், நெல்லைமாவட்டம்
செங்கோட்டைப் பகுதிகள் அமைய பல்வேறு
தியாகங்கள்
செய்த தியாக சீலர்களை இன்றைக்கு
நினைத்துப் பார்க்கவேண்டிய நாளாகும்.
குமரி மாவட்டம் இணைய பல போராட்டங்களை
முன்னெடுத்த  மார்ஷல் நேசமணி,
பி.எஸ்.மணி, பி.சிதம்பரம் பிள்ளை, அப்பாவு,
ஜீவா, நத்தானியல், குஞ்சன் நாடார்,
ரசாக், வேலாயுதப் பெருமாள்,
வி.தாஸ், ராமசுப்பையர் ஆகியோரை
வரலாற்றில் மறக்கமுடியாது.
மார்த்தாண்டம் புதுக்கடையில், 11-08-1954
அன்று, தென் குமரிப் பகுதிகளை
கேரளாவிடமிருந்து தமிழகத்தோடு இணைக்க
நடந்த போராட்டத்தில் 11 தமிழர்கள்
துப்பாக்கிச் சூட்டில் மடிந்தனர். 61
ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த கோரச்
சம்பவத்தில் உயிரிழந்த குமரி மாவட்டத்
தளபதிகளுக்கு வீரவணக்கம்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை
அதை ஒட்டியப்பகுதிகளைச் சேர்க்க கரையாளர்
அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி,
அவர் திருவனந்தபுரம் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டார். அவரையும்
எண்ணிப்பார்க்கவேண்டும் இந்த
சமயத்தில்.
திருத்தணி மற்றும் வடக்கு எல்லைகள் மீட்புப்
போராட்டத்தில் பெரும்பங்காற்றிய
ம.பொ.சி.,  கே.வினாயகம், மங்கள
கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன்,
வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார்,
திருவாலங்காடு திருமலை பிள்ளை,
நா.அ.ரசீத், சடகோபாச்சாரியார்,
செங்கல்வராயன், திருமதி. சரசுவதி
பாண்டுரங்கன், குருபாதம் போன்ற பல
தியாகசீலர்கள் திருப்பதி சித்தூர், புத்தூர்,
திருகாளத்தி, பல்லவநேரி போன்ற
வடக்குப்பகுதிகளை தமிழகத்தோடு
இணைக்கவேண்டுமென்று எண்ணற்றப்
போராட்டங்கள் நடத்தி சிறைசென்றனர்.
இவர்களின் போராட்டங்களின்
விளைவாகத்தான் தமிழகத்தின் வடக்கு
எல்லையாக திருத்தணி கிடைத்தது.
இவ்வளவு தியாகங்கள் செய்து
பெற்ற மண் இணைந்து 60ஆண்டுகளைக்
கொண்டாடுவதைத் தமிழக அரசும்
கண்டுகொள்ளவில்லை. வேறு
யாருக்கும் நினைவும் வரவில்லை. இதே
ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை,
“தமிழ்நாடு 50” என்று கடந்த 1-11-2006ல்
மையிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்,
பல்வேறு தமிழகத் தலைவர்கள், முக்கிய
ஆளுமைகள் கலந்துகொள்ள நான்
தனிமனிதனாக விழா எடுத்தேன்.
அதற்குப்பிறகுதான் பலர்
விழித்துக்கொண்டு விழா
எடுத்தார்கள். ஆனந்தவிகடனில் அன்றைக்கு
நான் எழுதிய சிறப்புக்கட்டுரைக்குப்
பிறகுதான் இந்த செய்தியே அப்போது
வெளியே தெரியவந்தது.
அந்த விழாவில், தியாக சீலர்களான
ம.பொ.சி, நேசமணி, பி.எஸ்.மணி,
கரையாளர், தமிழ்நாடு என்று பெயர்
வைக்க தன்னையே வருத்திக்கொண்டு
மாண்ட சங்கரலிங்கனார் போன்றோருடைய
படங்களும் திறந்து வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அமைந்த வரலாற்றை, “தமிழ்நாடு
50” என்ற நூலையும், நான் எழுதி அந்த
விழாவில் வெளியிட்டேன்.
இப்படியான தமிழக வரலாற்றின்
முக்கியமான நிகழ்வு யாரும்
கண்டுகொள்ளவில்லை என்பது
வேதனையான விடயம். மானமுள்ள
தமிழர்கள் இதை ஒருகணம்
நினைத்துப்பாருங்கள். ஏற்கனவே கேரளாவில்
நெடுமாங்காடு,
நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு,
பாலக்காடு பகுதியில் சிலகிராமங்கள்,
கர்நாடகாவில் மாண்டியா,
கொள்ளேகால், கோலார்,
ஆந்திரத்தில் திருப்பதி, சித்தூர், காளகத்தி
போன்றவைகளை இழந்துள்ளோம். இழப்பும்
வேதனைக்குரியதுதான்.
குறைந்தபட்சம் தமிழ்நாடு அமைந்த 60 ஆண்டு
நிறைவில் சாதித்தவைகளையும், சாதிக்கத்
தவறியவைகளைப் பற்றிய நிகழ்வுகளை
நடத்தக்கூடத் தவறிவிட்டோம். பிறகு எப்படி
காவிரி, முல்லைப்பெரியார், கச்சத்தீவு,
சேதுக்கால்வாய், நதிநீர் சிக்கல்கள் என்ற
தமிழகத்தின் பல உரிமைகளை மீட்டெடுக்கப்
போகின்றோம். நம்முடைய அடையாளங்களைப் பற்றிப்
பேசவே தயாரில்லாத நேரத்தில்  பம்மாத்து
வேலைகளைப் பார்த்துக்கொண்டு நம்மை
நாமே ஏமாற்றிக்கொண்டு
வருகிறோம்.
தினமும் அவருக்குத் தலைவலி, இவருக்குக்
கால்வலி என்று விவாதிக்கும்
தொலைக்காட்சிகள் கூட, தமிழ் நாடு
60-ஐக் கண்டுகொள்ளவில்லை.
பத்திரிகைகளிலும் இதைக்குறித்தான
ஈர்க்கக்கூடிய அளவில் செய்திகளும்
வரவில்லை. இதேப்போல ஐ.நா. மன்றம் அமைந்த
70வது ஆண்டு (October 24th 1945. ) நிறைவை
ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை
என்ற குற்றச்சாட்டை வைத்தேன்.
நான் சொன்ன இந்தக் கருத்துகளைப்
பரிசீலனை செய்யுங்கள். நியாயங்கள்
இருந்தால் தமிழக மக்களே ஒரு கணம்
எண்ணிப்பாருங்கள். இப்படி நமது
உரிமைகளையும், நிகழ்வுகளையும்
எண்ணிப்பார்க்காமல் இருந்தால் நாம்
எப்படி விழிப்புணர்வு பெறுவோம்.
அறுபதாண்டு நிறைவு விழாவில், இதுகுறித்து
உரிய ஆய்வுகளோடு கட்டுரைகளடங்கிய நூலும்,
ஆவணப்படமும் குசேலன் பானியில்
வெளியிட்டு ஒரு கருத்தரங்கத்தை அடுத்த
ஆண்டு  2016ல் இதே நாளில் நடத்த
திட்டமிட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் தங்கள்
ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.
பொதிகை- பொருநை-கரிசல்
சார்பில் இந்த வரலாற்று ஆவணங்கள்
வெளியிடப்படும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன் .

**********************************
பல்வேறு மாகாணங்களாக
பிரிந்து கிடந்த இந்தியத்
துணைக்கண்டம்,
மொழிவாரி
மாநிலங்களாக பிரிக்கபட்டு
இன்றுடன் 60 ஆண்டுகள்
ஆகின்றன. மொழிவாரி
மாநிலமாக பிரிக்கப்பட்ட தினம்
இன்று
கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு (Tamil
Nadu) இந்தியாவின் 29
மாநிலங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாடு, தமிழகம் என்றும்
பரவலாக அழைக்கப்படுகிறது.
இதன் தலைநகராக
சென்னை உள்ளது.
தமிழ்நாடு இந்தியத்
துணைக்கண்டத்தின் தென் முனையில்
அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி
எல்லைகளாக மேற்கிலும், வடக்கிலும்,
கேரளா, கர்நாடகம்
மற்றும் ஆந்திர மாநிலங்கள்
உள்ளன.
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி,
காரைக்கால்பகுதிகளைச் சுற்றிலும்
தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக்
கொண்டுள்ளது.
புவியியல் எல்லைகளாக
வடக்கே கிழக்குத் தொடர்ச்சி
மலைத்தொடரும், மேற்கே மேற்குத்
தொடர்ச்சி
மலைத்தொடரின் நீலமலை
வீச்செல்லை, ஆனை
மலை வீச்செல்லை, பாலக்காடு
கணவாய் ஆகியவையும்
கிழக்கில் வங்காள
விரிகுடாக் கடலும்,
தென்கிழக்கில் மன்னார்
வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும்
தெற்கில் இந்தியப்
பெருங்கடலும் உள்ளன.
தமிழகம்
ஆங்கிலத்தில் மெட்ராஸ்
ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை
மாகாணம் என்றும்
அழைக்கப்பெற்றது. இதனைத்
தமிழ்நாடு என்று மாற்றக்கோரி
போராட்டங்கள் நடைபெற்றன.
சங்கரலிங்கனார் என்பவர் 76
நாட்கள் உண்ணாவிரதம்
இருந்து உயிர்துறந்தார். பின்னர்
மதராசு ஸ்டேட் என்று இருந்த
பெயர் 1969 ம் ஆண்டு
தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில்
பரப்பளவில் 11வதாகவும்
மக்கள்தொகை யில்
ஏழாவதாகவும் விளங்குகிறது.
இந்திய மொத்த உள்நாட்டு
உற்பத்திக்குப் பங்களிப்பதில்
நான்காவதாகவும் (2010ல்)
உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித
வளர்ச்சிச்
சுட்டெண்ணில் பத்தாமிடத்தில்
(ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும்
சேர்த்தால் பதினாறாவது இடத்தில்)
இருந்தது. மேலும் இந்தியாவிலேயே
அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட
மாநிலமாகத் திகழ்கிறது.
இந்தியாவின் 6%
மக்கள்தொகையே
கொண்டிருந்தும் மிகக்
கூடுதலான வணிக நிறுவனங்கள்
கொண்ட மாநிலமாகவும்
விளங்குகிறது.
கி.மு. 500க்கும் முன்பிருந்தே
இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து
வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும்
மேலாகப் பழமை வாய்ந்த தமிழ்
மொழி கல்வெட்டுக்களும்
இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.
பாரம்பரியத்தின்படி தமிழ்
மொழியானது சிவ
பெருமானால் அகத்தியருக்கு
கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
தமிழ்நாட்டில் பல இயற்கை
வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை
சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள்,
கடலோர ஓய்விடங்கள், பல
சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள்
நிறைந்துள்ளன; எட்டு உலக
பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில்
உள்ளன.
சங்ககாலம் தொட்டே சேர சோழ
பாண்டிய நாடு என பல்வேறு
பகுதிகளாக தமிழகம் பல
கூறுகளாக பிரிந்தே இருந்து
வந்திருக்கிறது.
1920 ம் ஆண்டு நடைபெற்ற
காங்கிரஸ் மாநாட்டில் ‌தான்
தமிழ்நாடு காங்கிரஸ் என்பதைப் போல
மாநில வாரியாக காங்கிரஸ்
கமிட்டிகள் பிரிக்கப்பட்டது. நாடு
விடுதலையான உடனே
மொழிவாரி மாநிலங்கள்
பிரிக்கப்படும் என்ற காங்கிரஸ்
கட்சியின் உத்திரவாதம், கிடப்பில்
போடப்பட்டதால் போராட்டங்கள்
வெடித்தது. அதன் விளைவாக
1956 ம் ஆண்டு இதே நாளில்
மொழிவாரி மாநிலங்கள்
பிரிக்கப்பட்டது.
பல்வேறு மொழி பேசும் மக்கள்
வெவ்வேறு மாநிலங்ளில்
இருந்ததால் வளர்ச்சி
பாதிக்கப்பட்டது. இதனால் கட்சி
பாகுபாடின்றி அன்றைய
காலகட்டத்தில் போராட்டங்கள்
நடைபெற்றது. மொழிவாரி
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தில்
தமிழகம் சில பகுதிகளை இழந்தும், சில
பகுதிகளை பெற்றும் இருக்கிறது.
மொழி வாரி மாநிலங்கள்
பிரிக்கப்பட்ட நாளை கேரள, கர்நாடக
உள்ளிட்ட மாநிலங்கள்
கொண்டாடி வரும் நிலையில்,
தமிழக அரசும்
கொண்டாடினால்
அதற்காக போராடிய தலைவர்களுக்கு
மரியாதை செலுத்துவதாக
அமையும் என்பது தமிழ்
உணர்வாளர்களின் கருத்தாக
இருக்கிறது.
இதனிடையே தமிழ்நாடு தனி
மாநிலமாக உருவாகி இன்றுடன்
60 ஆண்டுகள் நிறைவு
பெறுவதையொட்டி,
அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி
தி.மு.க தலைவர் கருணாநிதி
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மொழிவழி மாநிலம் அமைய,
பெரியார், அண்ணா,
காமராஜர், ஜீவா, சிலம்புச்
செல்வர், சங்கரலிங்கனார்,
நேசமணி போன்ற தலைவர்கள் பெரும்
பாடுபட்டவர்கள் என
தெரிவித்துள்ளார்.
மொழிவழி மாநிலங்கள்
பிரிந்த பிறகு, 1967ம் ஆண்டு ஜூலை
18ம் தேதி, தமிழ்நாடு என பெயர்
சூட்டும் தீர்மானத்தை பேரவையில்
அண்ணா முன்மொழிய,
ஒருமனதாக தீர்மானம்
நிறைவேறியதாக கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
வைகோ
ம.தி.மு.க
பொதுச்செயலாளர் வைகோ
வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956–
ம் ஆண்டு, மொழிவழி
மாநில பிரிவிணையின்போது இன்றைய
வரைபடம் கொண்ட தமிழ்நாடு
அமைந்தது. சங்ககால தமிழகத்தின்
பல பகுதிகளை நாம் இழந்து விட்டோம்.
தமிழக நிலப்பகுதிகளை
காப்பதற்காக தமிழரசுக் கழக
தலைவர் ம.பொ.சி. வட
எல்லையில் களம் அமைத்தார்.
தெற்கு குமரி மாவட்டத்தின்
பகுதிகளை காக்க மார்சல் நேசமணி,
குஞ்சன் நாடார், பி.எஸ்.மணி,
தினமலர் ராமசுப்பு ஐயர் உள்ளிட்டோர்
போராடினார்கள்.
குமரி மாவட்டத்தில் தமிழர் பகுதிகளை
மீட்பதற்காக நடந்த போராட்டக்
களத்தில், 18 தமிழர்கள் சுட்டுக்
கொல்லப்பட்டதை நினைவு
கூர்ந்துள்ளார். தமிழர் பகுதிகளைப்
பாதுகாத்து, தமிழ்நாடு என்று
அமைக்க உயிர் நீத்தவர்களுக்கு வீர
வணக்கம் செலுத்தி, போராடிய
தலைவர்களை போற்றுவோம் என்றும் வைகோ
கூறியுள்ளார்.
ராமதாஸ்
மொழி அடிப்படையில்
மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்ததையடுத்து, இந்தியாவின்
ஒட்டுமொத்த நிலப்பரப்பும் 14
மாநிலங்களாகவும், 6 ஒன்றிய
பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டன.
தமிழகத்தின் நிலப்பகுதியை
பாதுகாப்பதற்காக போராடிய
தலைவர்கள் அனைவருக்கும் இந்த
நேரத்தில் நாம் நன்றி செலுத்த
வேண்டும். அவர்கள் எதற்காக
போராடினார்களோ, அதை சாதிக்க
நாம் பாடுபட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமையை
வளர்க்கவும், தமிழகத்தின் வரலாற்றை
இளைய தலைமுறை
அறிந்துகொள்ளவும்
வசதியாக நவம்பர் முதல் நாளை
தமிழ்நாடு நாளாக அரசு
கொண்டாட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறி
உள்ளார்.
திருநாவுக்கரசர்
மொழிவழி
மாநிலங்களுக்காக
பாடுபட்டவர்களுக்கு நன்றி
தெரிவிக்கும் விதமாக, அவர்களை
இந்நாளில் போற்ற வேண்டும் என,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் திருநாவுக்கரசர்
தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்
மொழிவழி மாநிலமாக
பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகள்
நிறைவுபெறும் தருவாயில்,
இந்தியாவில் தமிழை ஆட்சி
மொழியாக ஆக்க மத்திய
மாநில அரசுகள் முயற்சி எடுக்க
வேண்டுமென்றும், தமிழ் மாநில
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக