ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு தினம் செப்டம்பர் 11,


மகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு தினம் செப்டம்பர் 11,

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள்குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சிப் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் . 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்குத் தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.


இலக்கியப் பணி

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
“ தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
சுயசரிதை (பாரதியார்)
தேசிய கீதங்கள்
பாரதி அறுபத்தாறு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
விநாயகர் நான்மணிமாலை
பாரதியார் பகவத் கீதை (பேருரை)
பதஞ்சலியோக சூத்திரம்
நவதந்திரக்கதைகள்
உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
சின்னஞ்சிறு கிளியே
ஞான ரதம்
பகவத் கீதை
சந்திரிகையின் கதை
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திசூடி
பொன் வால் நரி
ஆறில் ஒரு பங்கு
இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908- 17. மே 1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள்
பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச்சட்ட சபையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகியுள்ளன.
தேசியக் கவி
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் (caricature) எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.
பெண்ணுரிமைப் போராளி
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.


இறப்பு
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921ல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு இறந்தார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். யானை மிதித்து இறந்ததாகத் தகவல்கள் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்ததே உண்மை. அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.
வாய் பிளக்க வைத்த கவி மேதை
சுப்ரமணிய பாரதியின் அப்பா சின்னசாமி, அந்தக் காலத்திலேயே பருத்தி ஆலை வைச்சிருந்தாரு. எதிர்காலத்தில் தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கும் கனவோட இருந்தாரு. மகன் வளர்ந்தவுடன் அந்தத் தொழிற்பேட்டையை கவனித்துக் கொள்வான்னு நினைச்சாரு.
சுப்ரமணியனோட அம்மா ஐந்து வயசுலேயே இறந்து போயிட்டாங்க. அதோட சுப்ரமணியனுக்குப் படிப்புல பெரிசா ஆர்வம் இல்ல. பள்ளிக்கூடம் முடிஞ்ச ஒடனே தோப்பு, தோட்டம்னு சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவாரு. அப்புறம் அடிக்கடி தாத்தாவோட வீட்டுக்கும் போவாரு. அவரோட தாத்தா இலக்கியம், பாட்டெல்லாம் வாசிச்சுக் காட்டுவாரு. சுப்ரமணியனுக்குத் தமிழ் இலக்கணமும், தமிழ்க் காப்பியங்களும் ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு.
மற்றொரு பக்கம் பாடத்தைப் படிக்காமல், வீட்டுப் பாடம் செய்யாம பள்ளிக்கூடம் போன சுப்ரமணியனுக்குத் தண்டனை வழங்கினாங்க. “எனக்கு என்ன பிடிக்கிதோ, அதை யாரும் சொல்லித் தர மாட்டாங்களா”ன்னு சுப்ரமணியன் ஏங்கினான்.
சீக்கிரத்திலேயே பார்வையற்ற ஒரு படிப்பாளியைக் கண்டுபிடிச்சு, அவர்கிட்ட கம்ப ராமாயணத்தைக் கத்துக்கிட்டான். அதுக்கப்புறம் சொந்தமாகவே சுப்ரமணியன் தமிழ் இலக்கணம் கத்துக்க ஆரம்பிச்சான்.
ஒரு நாள் சுப்ரமணியனோட நண்பன் ஒருவன் எட்டயபுரம் ராஜாவோட அரண்மனைக்கு அழைச்சுட்டுப் போனான். ஏதாவது ஒரு குறளின் முதல் வார்த்தையையோ அல்லது ஒரு வெண்பாவின் ஒரு பகுதியையோ சொன்னால், சுப்ரமணியன் உடனடியா எஞ்சிய அடிகளைச் சொன்னான். சுப்ரமணியன் நகைச்சுவையா பேசுறதையும் கவிதை சொல்றதையும் எட்டயபுரம் ராஜா ரசிச்சார்.
“இவன் ஒரு குழந்தை மேதை. பெரிய கவிஞன் ஆவதற்கான அறிவு, உங்க மகன்ட்ட இருக்கு”ன்னு சுப்ரமணியனோட அப்பாகிட்ட சொன்னார் எட்டயபுரம் ராஜா.
ஏற்கெனவே சுப்ரமணியன் செஞ்ச விஷயங்கள் பிடிக்காம இருந்த அவனோட அப்பா, தன் மகன் இப்படிக் கவிதையே கதின்னு இருந்துறக்கூடாதுன்னு நினைச்சாரு. அதனால திருநெல்வேலில ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு சுப்ரமணியனை படிக்க அனுப்பினார். அப்படிச் செஞ்சா எல்லாம் மாறிடும்னு அவர் நினைச்சாரு.
அங்கேயும் சுப்ரமணியனோட நகைச்சுவை உணர்வும், கவிதை எழுதுற திறனும் சக மாணவர்கள்கிட்ட பிரபலமாச்சு.
ஒரு நாள் வகுப்பறையில சுப்ரமணியன் கொஞ்சம் கண் அசந்துட்டான். சுப்ரமணியனை எழுப்பி, நடத்துன பாடத்தில இருந்து ஆசிரியர் கேள்வி கேட்டார். சுப்ரமணியனுக்கோ பதில் தெரியல. கோபமடைஞ்ச ஆசிரியர், “மேகம் மழையைப் பொழியறது போல, நீ கவிதை சொல்வேன்னு கேள்விப்பட்டேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதிலே இல்லையே”ன்னு கேட்டாரு.
“மெத்தப் படித்த ஆசிரியரே, ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. மேகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் மழை பொழிகின்றன. நீங்க கேள்வி கேட்கிறதால இல்ல”ன்னு பட்டென்னு பதில் சொன்னான் சுப்ரமணியன். ஆனா, இறுதிப் பரீட்சைல ஃபெயிலான அவன் ஊருக்குத் திரும்பினான்.
இதனால் வருத்தப்பட்ட அவனுடைய அப்பா, எட்டயபுரம் ராஜாவைப் பார்த்து அரசவை பணியில சுப்ரமணியனைச் சேர்த்துவிட்டார். ராஜாவோட நண்பர்கள் சிலருக்கு சுப்ரமணியனைப் பிடிக்கல. அவர்கள்ல ஒருத்தர், “நீங்க பெரிய புத்திசாலி போலத் தெரியுது. ஆனா, பரீட்சைல தோத்துப் போயிருக்கீங்களே” என்று மறைமுகமாகக் கிண்டல் செய்ய ஆரம்பிச்சாரு.
இதனால ரெண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. கல்வியைப் பற்றி ஒரு விவாதம் நடத்தலாம்னு முடிவாச்சு. முதல்ல எதிர்த் தரப்பு ஆள் பேசினார். அடுத்ததாகப் பேச ஆரம்பிச்ச சுப்ரமணியன், எல்லோரும் ஆச்சரியப்படுற மாதிரி அற்புதமாகப் பேசினார். அவருடைய வாதம் எதிராளியையும் வசப்படுத்துச்சு.
அந்த விவாதம் முடிஞ்சதும், ஒரு முதிர்ந்த பண்டிதர் எழுந்து சுப்ரமணியன்கிட்ட போனாரு. “நீ உன் வயசை மீறுன புத்திசாலித்தனத்தோட இருக்கிறாய். அதனால், நீ ஒரு பாரதி (அனைத்தும் அறிந்த பண்டிதர்)”ன்னு பட்டம் சூட்டினார்.
அதுக்கப்புறம் சுப்ரமணியனை, எல்லோரும் பாரதின்னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. உலகம் போற்றும் கவிஞரா மாறின அவர், சுப்ரமணிய பாரதியாராக ஜொலித்தார்.



பாரதியின் பார்வையில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகள்...

பாரதி வறுமையில் வாடிய போதிலும் வீட்டை மறந்து நாட்டையே நினைத்து வாழ்ந்தவர். இவரது ஆற்றல் கவிதையில் மட்டுமல்லாது கலை, இலக்கியம், அரசியல், ஆன்மிகம், அறிவியல், பெண்கள் முன்னேற்றம், கைத்தொழில் பற்றிய விழிப்புணர்வு, தொழில்முறை, மருத்துவம் எனப் பல்துறைகளில் புலமை பெற்றவர். இப்பாரதியின் பல்நோக்குப் பார்வைகளில் நாம் பாரதியின் அறிவியல் நோக்கையும் அதன்மீது அவரது பார்வையின் பிரசுரங்களையும் கண்டுணரலாம்.
பாரதியின் குழந்தைப் பற்று
குழந்தைகளை ‘ராஜா’ வென்றே கூப்பிடுவார். நான் செய்வதைப் போல் செய்யாதீர்கள். சொல்வதையே செய்யுங்கள் என்பார் பாரதி. அதாவது தாம் செய்வதில் ஏதாவது கெடுதலிருக்கும். சொல்வதில் இராது என்பதே அர்த்தம். குழந்தைகளை பயமுறுத்தக்கூடாது, குழந்தைகளுக்குப் பருவத்திலேயே பயமுறுத்தி விட்டால் பிறகு அடிமை உணர்வு ஆழமாகப் பதிந்துவிடும் என்பார்.
பூனை என்று யாராவது குழந்தைகளைப் பயமுறுத்தினால் அவர்களைக் கோபிப்பார். குழந்தைகளைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு ‘பூனையும் இல்லை, பயமும் இல்லை’ என்று சொல்லித் தருவார். பாரதி ராத்திரி வேளையில் குழந்தைகள் மலஜலம் கழிக்க வேண்டும் என்றால் துணையில்லாமல் தனியாகப் போகும்படிச் சொல்வார். தாம் கூடவே இருப்பதாக நினைத்துத் தைரியத்தை வளர்க்க வேண்டும் என்றும், இருளைக் கண்டு பயப்படக்கூடாது என்றும் சொல்லித் தருவார்.
உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும் அமைந்திருக்கிறது. இந்த 3 பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக்கூடும் என்ற மகா நாத்திகக் கொள்கையை நவீன ஐரோப்பா சாஸ்திரிகள் தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்று அந்த மூடக் கொள்கையை நமது தேசத்திலும் இளஞ்சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்துவிட்டார்கள். சிறுபிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வளமை உடையன. அசைக்க முடியாதன. எனவே நமது நாட்டிலும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்கு ஆளாய் தீராத கவலை கொண்டு மடிகிறார்கள்; பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசியப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும்.
ஓர் சமயம் பாரதியின் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல். அது அவஸ்தைப்படுவதைக் காண இவரால் சகிக்க முடியவில்லை. தாய் தந்தையர் செய்யும் அக்கிரமம் அக்குழந்தையைப் பாதிக்கும் என்ற மூதுரை அவருக்கு ஞாபகம் வந்தது. உடனே அவர் தம்மிடம் பற்றிக் கொண்டிருந்த துர்க்குணமாகிய புகையிலை போடும் வழக்கத்தை நிறுத்தினார். புகையிலையினால் குழந்தைக்கு கேடு ஏற்படும் என்ற எண்ணம் தோன்றவே நிறுத்திவிட்டதாகக் கூறுவர்.
பாரதி ஒரு சமயம் ஹார்மோனியத்தின் கட்டைகளில் பலவற்றை ஒரே தடவையில் அழுத்த அவற்றை தாறுமாறாகச் சப்தித்தன. ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்? சப்தம் காதுக்கு ரொம்பவும் அறுவறுப்பாகயிருக்கிறது. இவ்வாறு செய்தால் ஹார்மோனியம் உடைந்து விடாதா? என்றனர் வீட்டிலுள்ளோர். அதற்கு அவர் எல்லாம் சரிதான். நீங்கள் குழந்தைகளைக் கோபிக்கும்போதும், பேசும் பேச்சுக்களினாலும் என் காதுக்கு எவ்வாறிருக்கிறதென்பதையும், அப்பேச்சுக்களினால் எவ்வாறு குழந்தைகளின் மனம் வேதனைப்படுகிறதென்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளத்தான் அவ்வாறு செய்தேன் என்றார்.
பொன், வெள்ளி, செம்பு, கந்தகம் இவை போல வழக்கத்திலுள்ள பொருள்கள் இவை. க்ரோமியம், தித்தானியம், யுரேனியம்-இவை போலச் சாதாரண பழக்கத்திலகப் படாதன இவை; கன ரூபமுடையன இவை, திரவ ரூபமுடையன இவை, வாயு ரூபமுடையன இவை, இவற்றுள் முக்கியமான மூல பதார்த்தங்களின் குணங்கள் முதலியவை எடுத்துக் காட்டவேண்டும் என்றும் ரசாயனச் சேர்க்கை பிரிவு, இவற்றின் இயல்புகள், விதிகள் இவற்றை பரிட்சைகளின் மூலமாக விளக்க வேண்டும் என்றும்,
ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மூல பதார்த்தங்களின் அற்புதக் குணங்கள்.
பரமாணுக்கள், அணுக்கள், அணுகணங்கள்-இவற்றின் இயல்பு, குணங்கள், செய்கைகள் முதலியன.
இயற்கை – Physics, ரசாயனம்-Chemistry
செடிநூல் சாஸ்திரம் இவையே முக்கியமாகப் போதிக்க வேண்டியனவாம்.
இயற்கையில் அறிவியல் மனம்
விஞ்ஞான சாஸ்திரத்தில் பிரீதி உடையவர். இயற்கை அழகில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் தனிமையையே விரும்புவார். மாலை ஞாயிறைக் கண்டு மகிழ்வதிலும் மனோஹரமான மாலைத் தோற்றங்களிலும் மெய்மறந்து நின்று விடுவார். இதற்காகவே கடையத்திற்கு அரை மைல் தூரத்திலுள்ள தட்டப்பாறை என்ற பாறை மீது மத்தியான நேரங்களில் போய் உட்கார்ந்து கொள்வார்.
இயற்கை வர்ணிப்பதில் அவர் மற்ற கவிகளுக்குப் பின் விளங்கியவரல்லர் என்பதை கீழ்வரும் வரிகளிலிருந்து அறியலாம்.
“புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிவந்து
. . . . . விந்தைசெயுஞ் சோதியினை (சூரியன்)
. . . . . . . கண்விழித்து நான் தொழுதேன்”
என்றார். இதேபோன்று சூரியன் எப்படி செயல்பட்டதாம் என்பதை,
“இடிவானத் தொளிமின்னல் பத்து கோடி
எடுத்தவற்றை யொன்றுபட வுருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளியாங்கே
மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்புகாணாய்”
சூரியனைப் பார்க்க பார்க்க உமாதேவி கவிதைகள் செய்வது போன்று இருக்கிறதாம். தீயின் குழம்புகள். செழும்பொன்னை காய்ச்சிவிட்ட ஓடைகள், வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள், இவையெல்லாம் சூரிய தரிசனத்தால் பாரதிக்குண்டான கற்பனை-இதன்மூலம் இவர் ஒரு வானவியல் ஆராய்ச்சியையே நிகழ்த்தியுள்ளார்.
சூர்ய வர்ணனையால் கம்பனும் இவ்வளவு தூரம் எட்டிப் பார்க்கவில்லை என்று சொன்னால் மிகையாகாது. பாண்டவர்கள் மிது துரியோதனனுக்கு ஏற்பட்ட பொறாமை எனுந் தீயை எரிமலைக்கு ஒப்பிட்டிருப்பதைக் காணலாம்.
“குன்ற மொன்று குழைவுற்றிளகிக்
காய்ந் தெழுந்து வெளிப்படல் போல்”
என்றும் சுட்டியுள்ளார். பாரதியின் உள்ளத்தை ஆவேசப்படுத்துவது இயற்கையின் அகத்தே ஒளிரும் எல்லையற்ற இன்பம்-கதிரழகு.
“புல்லை நகை யுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி. . . . . . .”
என்ற கவியில் விந்தை செய்யும் திறனில் பாரதியின் ஏக்கம் தவிர்த்து ஆக்கம் அடைவார். இயற்கையின்பத்தில் இறையொளியுடன் காதலுறவு கொண்டு இடி மின்னலுக்கு இடையே சுயேச்சையாகவும் மகிழ்வாகவும் உலவுவார். இயற்கைக் காட்சிகள் இவரது மனப்பான்மையினை உருவாக்கின. அந்த உருவில் தம் உள்ளதும் வாழ்வும், இயற்கை அன்னையாகிய கண்ணம்மானது விளைபுலம் எனக் கண்டு வியந்தார். இயற்கையன்னையோடு காதலுறவு முறுகி வளர, நீல வானையும், விண்மீனையும், வீறிடும் கடலையும், கண்ணம்மாளாகக் கண்டு இன்புற்ற பாரதியார் கோலவெறி கொண்டு மனமுருகும் வண்ணம் பின்வருமாறு இசைப்பாராயினர்.
“சுட்டும் விழிச்சுடர்தான்-கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி-கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங் களடி
சோலை மலரொளியோ-உனது
சுதந்திரப் புன்னகைதான்
நீலக் கடலலையோ உனது
நெஞ்சு லலைகளடி
கோலக் குயிலோசை-உனது
குர லினிமையடீ
வாலைக் குமரியடீ- கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்”
இத்தகைய காதலறத்து இன்பத்தோடு, பாரதியாரது வாழ்வின் உயிர்நாடிகளாகிய அன்பும் அழகும் கலை இன்பத்தில் திளைத்தது. இவரது மனம் மானிட இதயங்களுடன் ஒன்றி உறவாடுங்காலை, படைபபின் உண்மையினையும் வாழ்வின் உண்மையினையும் அவர் உணர்ந்தார். அனந்தத்தை புற இயற்கைக் பொருளிலும் கண்டு கொண்டார்.
“காக்கைக் குருவியெங்கள் சாதி- நீள்
கடலு மலையுமெங்கள் கூட்டம்
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”
என விளையாட அவாவுவார்.
பாரத நாடு தவத்தினாலும் ஞானக் காட்சியிலும் துறவுப் பேற்றிலும் கலையுணர்விலும் பிறவியை நலமுடையதாக்க வல்ல நாடென்பர்.
“வெள்ள பனிமலையின் மீதுலாவுவோம்-அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித்தல மனைத்தும் கோயில் செய்குவோம்-எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்”
என்ற வரிகளின் வழி மலையையும், கடலையும், கப்பலையுமாக அறிவியல் சார்ந்த பார்வையைப் பதித்துள்ளார்.
பாரதியின் உணவுப் பழக்கம்
பாரதி சாப்பிடும் முறையிலும் கண்டிப்பானவராகவே இருந்தார். சாதம் மல்லிகைப் பூவைப் போன்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்குப் பிடிக்காது. தயிருடன் சேர்ந்தால் சுண்ணாம்பு நீர் மாதிரித்தோன்ற வேண்டும் என்பாராம். களிமண் உருண்டை ஒன்றும் சாதத்தில் இருக்கக்கூடாது. வீசம்படி நெய் அளந்து பக்கத்தில் வைத்துவிடவேண்டும். கெட்டியான தயிர், நல்லெண்ணெய், உருக்கிய நெய், தேங்காய் தொகையல், பொரித்த அப்பளம், ஊறுகாய், இவைகளே அவருக்கு விருப்பம். ஓட்டல் சாப்பாடு ஒருபோதும் சாப்பிட மாட்டார்.
வெற்றிலையை முதலில் குளிர்ந்த நீரிலும் பிறகு வெந்நீரிலும் நன்றாய் அலம்பிய பிறகே உபயோகிப்பார். தினமும் 15 தடவை தாம்பூலம் போடுவார்.
மருத்துவத்துறையில் பாரதியின் பார்வை
ஒளவையார் வெறுமனே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராச நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ்நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராசாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்ம ஞானி. யோக சித்தியால் உடம்மை முதுமை நோவு சாவுகளுக்கு இரையாக்காமல் காப்பாற்றி வந்தார்.
“மாசற்ற கொள்கை மனந்தமைத் தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு”
அதாவது, இருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக்கொண்டால் உடம்பில், தெய்வத்தன்மை, அதாவது சாகாத் தன்மை (அமரத்தன்மை) விளங்கும் என்னும் பொருள்படுவது. இந்தக் குறள் பாடியவர் ஒளவையார். இவர் தாமே நெடுந்தூரம் இக்கொள்கைப்படி ஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது.
“ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம்; பரனை நினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு”
இவ்வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல், அல்லது கொடுத்தல் என்னும் பொருள்படும். அதாவது உலகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் பண்ணிவிடுதல்; நமது பொருளாலும், வாக்காலும், மனத்தாலும் உடற்செய்கையாலும், பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கினியன செய்தல்; பொருள் கொடுப்பது மாத்திரமே ஈகையென்று பலர் தவறாகப் பொருள் கொள்ளுகிறார்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக் கொடுத்தல் கொடையன்றோ? வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்குப் பிரதானம் செய்தல் ஈகையன்றோ?

பாரதியின் தொழில்நுட்பச் செய்திகள்
இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும் விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும், நன்செய் புன்செய் பயிர்த்தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும் சிறு வியாபாரங்களிலும், தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று. இதற்கு மேற்கூறிய மூன்று உபாத்தியாயர்களைத் தவிர தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப் படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லௌகிகப் பயிற்சியுடையவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விடயமாகும்.
வியாபார விடயத்தில் கூட்டு வியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்கு எடுத்துகாட்டவேண்டும். மிகவும் சரசமான இடத்தில் விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் எப்போதும் பிரமாணமாகக் கொள்ளக் கூடாது. விளைபொருளும் செய்பொருளும் மிஞ்சிக்கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி அவை வேண்டியிருக்குமிடத்தில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.
வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந்ததோ அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத்தொழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளியொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச்செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும்.
ஆகாயவிமானமும், அவை பற்றிய செய்தியும்
1903 டிசம்பர் 17ம் நாளில் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டறிந்து அமெரிக்காவில் பறக்கவிட்டனர்.
உலகத்தின் முதல் ஆகாய விமானம் பறந்ததற்கு 6 வருடத்தில் 30.12.1909 அன்று இந்தியாவின் முதல் விமானம் ஆகாயத்தில் பறந்ததென்பது ஆச்சர்யமான செய்தி. இதை பஞ்சாபி ஒருவர் தயாரித்து கல்கத்தாவில் பறக்கவிட்டாரென்று ‘இந்தியா’ பத்திரிகையின் 1910 ஜனவரி 8ஆம் தேதி இதழ் தெரிவிக்கிறது.
ஆனால் இந்தியாவின் விமான சகாப்தத்தை உண்டாக்குவதில் சென்னையும் ஆரம்பகாலத்திலேயே பங்குகொண்டதென்று பெருமையான செய்தி நம்மில் பலருக்குத் தெரியாது. ஏன் இதைச் சாதித்துக் கொடுத்த சென்னை ஸிம்ஸன் கம்பெனிக்குக் கூட இச்செய்தி மறந்துபோய் விட்டது. தங்கள் நூறாண்டு சாதனை என்ற பாசுரத்தில் அதைச் சேர்க்கத் தவறிவிட்டார்கள்.
சென்னையில் செய்து பறக்கவிடப்பட்ட முதன் ஆகாய விமானத்தைப் பற்றிய செய்தியும் படமும் ‘இந்தியா’ பத்திரிகையின் 1910 பிப்ரவரி 19ந்தேதி இதழின் விசேச அனுபித்தத்தில் வெளியிட்டிருக்கின்றன. இந்த விமானம் பறந்தது உலகின் முதல் விமானம் பறந்ததற்கு ஆறேகால் வருடத்துக்குள்ளாகும். இதைப் பற்றிய செய்திகள் அக்காலத்திய சென்னைப் பத்திரிகையிலும் வெளிவந்தன.
யானைக்குத் தன் பலம் தெரியாதென்பர். அதேபோல் தமிழ்நாட்டினரான நாம் நம்முடைய பெருமையை மறந்துவிட்டோம். அதுவும் பாரதியின் பத்திரிகை குறிப்பிடுவதுபோல, இந்தச் சென்னை விமானம் ‘தமிழ் வேலைக்காரர்களால் செய்யப்பட்டது என்பதை மறந்துவிட்டோம். இதை நினைவூட்ட நமக்கு ஒரு பாரதி தேவையாக இருக்கிறார்.
தீயும் பாரதியும்
தீ எங்கும் நிறைந்த பொருள். அஃதில்லாத இடமில்லை, சூரியன் பெரிய தீக்கோளமேயன்றி வேறில்லை. நட்சத்திரங்களும் அப்படியே பூமி முதலிய கிரகங்களும், தீயின்றி இருக்கவில்லை. பூமியே மேல் தோடு, சுமார் 10 அல்லது 12 மைல்தான், மண்ணும் நீருமென்றும், அதற்குள் எல்லையற்ற வெள்ளமாகத் தீக்குழம்பு ததும்பிக் கொண்டிருக்கிறதென்றும் (பூதத்வ) சாத்திரங்கள் சொல்கிறார்கள்.
இங்ஙனம் எரிகின்ற தீயைத் தவிர எரியாமல் எங்கும் அடங்கிக் கிடக்கும் தீயே அரந்தம். கல்லைப் பார்த்தால் அதில் தீ இல்லையென்று தோன்றுகிறது. அதை மற்றொரு கல்லுடன் உராய்த்துப் பார். குபீரென்று தீ வெளியேறும். மனிதனுக்குள்ளேயும் தீ நிரம்பியிருக்கிறது . வயிற்றுக்குள்ளே போட்டதெல்லாம் சீரணமாவதற்கு நம் முன்னே இருக்கும் தீயே காரணம்.
தீ தான் மழை பெய்விக்கிறது. சூரியனென்ற தீ வட்டத்தினின்று பிறக்கும் கதிர்களின் உஷ்ணத்தால் கடல் நீர் முதலியன நீராவியாகி மேகங்களாகின்றன. பூர்வகாலத்து மகரிசிகள் காலையில் எழுந்தவுடன் சூரியனை வணங்கிவிட்டு அடுத்தபடியாக ஹோமத்தில் வளர்க்கும் தீயை வணங்கினர். வேதங்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தின் முதல் மந்திரம் தீயைக் குறித்தது. ‘அக்னி மீளே புரோஹிதம்’ என்று தொடங்குகிறது. (தேவர்களின் அணியில்) முதல் வைக்கப்பட்டவனாகிய அக்னியை வேண்டுகிறேன் என்பது பொருள்.
‘தீயே மருந்து’ என்று கீர்த்தி பெற்ற கிரேக்க வைத்தியனொருவன் சொல்லுகிறான். எந்தப் பொருளையும் நன்றாகக் கொதிக்க வைத்துத்தின்றால் அதுவே பத்தியம். நீரைக் கொதிக்க வைத்தால் அதன் அசுத்தங்களெல்லாம் நீங்கிவிடும்.
தீ தான் மின் சக்தி. மின் சக்திதான் காந்த சக்தி; சலன சக்தி உஷ்ணமாக மாறும்; உஷ்ணம் மின்சக்தியாக மாறும்; அதுவே காந்த சக்தியாக மாறுவது, ப்ரக்குருதியின் சக்திகளெல்லாம் ஒரே ரூபமுடையன. அதாவது அக்னி ரூபன் அதன் ஆதி ரூபம் வேகம். யுத்த சக்திகளெல்லாம் அக்னி சக்திகளே. துப்பாக்கிகளிலிருந்தும் பீரங்கிகளிலிருந்தும் உஷ்ணத்தின் வேகத்தாலேதான் குண்டு முன் சென்று தாக்குகிறது.
அக்னியிருந்தால் மரணம் கிடையாது. மனிதர் உயிரைப் பாதுகாக்க விரும்பினால் அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். யந்திரத்தைப் போன்றே சரீரத்தை நாம் யந்திரத்தின் காவலாளி போல் நடத்தாமல் மமகாரத்தின் மிகுதியால் இயக்கமின்றிக் காக்க விரும்புகிறோம். வெட்டிகூடக் கட்டாயத்துக்காக உழைக்கிறானே யொழிய, உயிரை அறிவயால் ஒழுங்குப்படி சோர்வின்றி இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்ற தீர்மானப்படி செய்யவில்லை. புஸ்தக மெழுதுகிறவன்கூட ஆரம்பத்தில் ஓரிரண்டு வருடம் சுகத்துக்காக எழுதுகிறான். பிறகு போகப்போகக் கடனுக்குச் செய்வதுபோல் ரூபாய் சம்பாதிக்கும் பொருட்டு மாத்திரமே எழுதத் தொடங்குகிறான். நாம் தண்டத்துக்காகச் செய்யாமல் யதார்த்தமான மகிழ்ச்சியுடன் உயிரை இயக்கிக் கொண்டிருப்போமானால் அதிக இலக்கியங்கள் தோன்றும்.
முடிவுரை
பாரதி கவிதையையும், கட்டுரையையும் அலசி ஆராய்ந்ததில் அவர் அரசியல் துறையில் மாத்திரமல்லாமல், தொழில், சமுதாயம், ஞானம், மதம், அறிவியல் வாழ்விற்கு அவசியமான சகல துறைகளிலும் செலுத்தியுள்ளார். கம்பீரத் தோற்றம், செய்கை, அஞ்சாநெஞ்சம் அனைத்தும் அவரது வீரத்தைக் காட்டும். அவரது வீரச்சொல்லே தமிழ்நாட்டில் தற்போது ததும்பி வழியும் தேசபக்திக்கு விதையாகும். எஞ்சின் ஓடுவதற்கு நீராவி முக்கியம் போல் தேசபக்தி பரப்புவதற்குத் தேசியப் பாட்டுக்கள் என்று இங்கேயும் அறிவியலைச் சுட்டிக்காட்டி அனைத்து துறையிலும் பாரதியின் பார்வை அமைந்துள்ள நோக்கை நன்குணரலாம்.
நன்றி -விக்கிப்பீடியா ,தி இந்து தமிழ்.சிறகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக