சனி, 30 செப்டம்பர், 2017

போராளி வீரமங்கை குயிலி நினைவு தினம்




போராளி வீரமங்கை குயிலி நினைவு தினம் 

குயிலி பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி. இவர் சிவகங்கை சீமை சேர்ந்த பெண்போராளி ஆவார்.
மெய்க்காப்பாளர்
முதன்மை கட்டுரை: வேலு நாச்சியார்
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை
ஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்றது. 8 ஆண்டுகள் அவர் மனைவி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி என்றபெண் குத்திக் கொன்றார். அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.
1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார். மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார்.
முதல் தற்கொலைப் போராளி
சிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்ததால் அப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில்
நவராத்திரி விழாவிற்காக விஜயதசமி அன்று கொலு தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது.
இதைப் பயன்படுத்தி பெண்கள் படையில் இருந்த குயிலி தன் உடம்பில் எரி நெய்யை ஊற்றி தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்து தற்கொலை தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அழித்தாள்.


முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..!

இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.
தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது.
அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி.
1776ம் ஆண்டு
வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.
குயிலி. அதுதான் அவள் பெயர்.
வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.
வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்..ஒருநாள். குயிலியிடம் வந்தார்,
"குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?"
"சொல்லுங்கள் ஐயா!''
"நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''
"சரி.'' என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.
அன்றிரவு.
குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.
குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.
நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.
ஒருநாள். நள்ளிரவு.
வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.
நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.''
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். "பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?'' என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!'' ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.
ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.
பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. "எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!'' என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!'' என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
"சார்ஜ்!..'' என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, "வீரவேல், வெற்றிவேல்'' என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.
நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.
இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.
குயிலி என்ன ஆனார்.
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!
(நடந்து முடிந்த சட்டசசபையில் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார், யார் அந்த குயிலி என்ற தேடுதலின் அடிப்படையில் சுருக்கமாக எழுதப்பட்டதே இந்த கட்டுரை, நன்றி- விஜயபாரதம், தமிழ்தேசம், மகளிர் வரலாறு கட்டுரையாளர்களுக்கு)



உலகின் முதல் தற்கொலைப் படை போராளி வீரத்தாய் குயிலி...

: இந்திய விடுதலை வரலாற்றில் ஜான்சிராணியைப் பற்றி பேசுகிற பக்கங்கள் அதிகமாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கும் முன்பாக தமிழ் மண்ணில் தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து பெரும் புரட்சியையே நடத்தியவர் வீரமங்கை வேலுநாச்சியார்..அவரது பெருமைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் வீரத்தாய் குயிலி...
இலங்கையில் தமிழீழம் கோரி விடுதலைப் போர் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போர்க்களங்களில் பங்கேற்றனர். அதற்கு முன்பாக 1750களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள்...வேலுநாச்சியாரின் வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தவை... வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலில்..
வேலுநாச்சியார் வரலாறு
1730ம் ஆண்டு பிறந்தவர் வேலுநாச்சியார். இளம்பிராயத்திலேயே அனைத்து போர் பயிற்சிகளையும் பிற மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் வேலு நாச்சியார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் மகன் முத்துவடுகநாதரை திருமணம் செய்து கொண்டார். 1772ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி ஆற்காடு நவாப்பின் படையெடுப்பின் போது சூழ்ச்சியால் முத்துவநடுகநாதர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடன் இளைய மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகின்றனர். இதனால் மகள் வெள்ளச்சி நாச்சியார், தளபதிகள் மருது பாண்டியர்கள் துணையோடு திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி என்ற பாளையத்தில் தஞ்சம் அடைந்தார் வேலுநாச்சியார்,...
விருப்பாட்சி பாளையம் கோபால் நாயக்கர்
விருப்பாட்சி பாளையமானது ஹைதர் அலியின் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக இருந்தது. ஹைதர் அலி உதவியுடன் நவாப்- ஆங்கிலேயர் படைகளை வீழ்த்தி சிவகங்கையை மீட்க படை திரட்டிக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.
துரோகிகளை கருவறுத்த வீரத்தாய் குயிலி
விருப்பாட்சி பாளையத்தில் வேலுநாச்சியார் தங்கியிருந்த காலத்தில் அவருடன் அவரது சிலம்பு வாத்தியாரான வெற்றிவேலுவும் உடன் இருந்தார். அவரை மிகவும் நம்பிக்கைக்குரியவராகவே நம்பிவந்தார் வேலுநாச்சியார். ஆனால் வெற்றிவேலு வாத்தியாரோ, வேலுநாச்சியாரின் போர் திட்டங்களை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்து வந்தார். விருப்பாட்சியில் இருந்து சிவகங்கையில் இருக்கும் தாயாரைப் பார்க்க குயிலி செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது வெற்றிவேலு வாத்தியார், குயிலியிடம் எழுதப் படிக்கத் தெரியுமா எனக் கேட்க தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார். அப்போது வெற்றி வேலு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மை அருகே இருக்கும் மல்லாரிராயன் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலு வாத்தியாரின் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார் குயிலி. சந்தேகப்பட்டு அக்கடிதத்தைப் பிரித்துப் படிக்க வெற்றிவேலுவாத்தியாரின் துரோகம் தெரியவருகிறது. வெற்றிவேலு வாத்தியாரின் குடிசைக்கு ஆக்ரோஷத்துடன் சென்று அவரைக் குத்தி படுகொலை செய்து விடுகிறார்.
மெய்க்காப்பாளரான குயிலி
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக இருந்தாலும் நம்பிக்கைக்குரியவராக வீரத்துடன் செயல்படுகிறவராக இருந்ததால் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை சிலர் எதிர்த்த போது சாதி பார்க்காதவர்கள்தான் என் படையணியில் இருக்க வேண்டும் பிரகடனமே செய்தவர் வேலுநாச்சியார்.

போர்க்களத்தில் குயிலி..
மருது சகோதரர்கள் துணையுடன் 8 ஆண்டுகாலத்துக்குப் பின் 1780ஆம் ஆண்டு விருப்பாட்சி பாளையத்தில் இருந்து சிவகங்கை நோக்கி வேலுநாச்சியாரின் படை அணி புறப்பட்டது. அதில் பெண்கள் படையான உடையாள் படை அணிக்கு தலைமை வகித்தவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியார் படை திண்டுக்கல் தொடங்கி ஒவ்வொரு தடையையும் தகர்த்துக் கொண்டு சிவகங்கை நோக்கி சீறியது.
ஒற்றர் குயிலி
ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் வரிசையாக படை அணியை நிறுத்தியிருந்தான். அரண்மனைக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தன. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, நாளை விஜயதசமி திருவிழா.. அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர்.. அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டார். அற்புதமான யோசனையை சொன்ன நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் கூற அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போதுதான் தெரிந்தது அது குயிலி என.. தாம் அனுமதியின்றி வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார் குயிலி.
தற்கொலைப்படையான குயிலி
குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் வேலுநாச்சியார் படையணி நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது...இதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கில தளபதி பாஞ்சோர் சிவகங்கையைவிட்டு வெளியேறினான்... வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர்தான் வீரத்தாய் குயிலி... ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின் பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி.. இந்த வீரத்தாய் குயிலிக்குத்தான் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக