மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள்... "உலக மாணவர் தினம்" அக்டோபர் 15 .
டெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று. ஐநா சபையால் இந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய விண்வெளித் துறையில் மிகவும் சிறப்பாக பங்காற்றிய அப்துல் கலாம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராகவும் திகழ்ந்தார்.
வாழ்நாள் முழுக்க மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய இவரது பிறந்த நாளை ஐநா சபை 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.
விண்வெளித் துறையில் சாதனை
ராமேஸ்வரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் அவருக்கு கல்வியின் மீது அதீத ஈடுபாடு இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு படித்த இவர், இந்திய விண்வெளித் துறையான ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் பணிக்கு சேர்ந்தார். அங்கு மிகவும் சிறப்பாக பணியாற்றிய இவர் , இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக கருதப்படும் அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டார். அதன் பின்பாக வந்த அனைத்து அக்னி ஏவுகணை வரிசைகளுக்கும் இதுதான் முன்னோடியாகும். இந்தத் திட்டத்தில் இவரது செயல்பாடு இந்தியா முழுக்க அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்திய குடியரசுத் தலைவரானார்
இந்த நிலையில் இவர் இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக பாஜக அரசால் முன்னிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர் இந்தியாவின் மிக முக்கியமான குடியரசுத் தலைவர்களின் வரிசையில் இடம்பெற்றது அனைவரும் அறிந்த வரலாறு. அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது , ஒருமுறை ஸ்விட்சர்லாந்த் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவர் பயணம் செய்த அந்த மே 26 ஆம் நாளை அந்த நாடு அறிவியல் தினமாக கொண்டாடுகிறது. அவர் இந்தியா மட்டும் இல்லாமல் பல நாட்டு மக்களாலும் விரும்பப்பட்டார்.
வாங்கிய விருதுகளும் பெற்ற புத்தகங்களும்
இவர் இதுவரை நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். எனது பயணம், அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 ஆகியவை இவர் எழுதியதில் மிகவும் புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும். அதே போல் இவர் நிறைய விருதுகளும் வாங்கியுள்ளார். பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா என இந்தியாவின் மிக உயரிய விருதுகள் அனைத்தையும் இவர் வாங்கியுள்ளார்.
அப்துல் கலாம் மரணம்
அறிவியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கிய அப்துல் கலாமிற்கு ஆசிரியர் பணியே மிகவும் பிடித்தமான பணியாகும். 2015 ஜூலை 27ல் ஐஐஎம் ஷில்லாங்கில் இவர் மாணவர்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். இவரது மரணம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படும் இவரது பிறந்த நாள் மிகவும் முக்கியமான நாளாகும். இவரது பிறந்த நாள் அன்று மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலும் இவரது பொன் மொழிகளே இணையத்தில் அதிகமாக தேடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக