செவ்வாய், 24 அக்டோபர், 2017

மருதுபாண்டியர்கள் நினைவு நாள் அக்டோபர் 24 .



மருதுபாண்டியர்கள் நினைவு நாள் அக்டோபர் 24 .

*மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு.*


இன்று உலகமயமாக்களின் காலத்தில் அந்நிய நாட்டு ஊடுருவல்கள் சமூக, பொருளாதார, ராணுவ, பண்பாட்டு ரீதியான, சந்தை ரீதியான உறவுகளில் உள்ளே நுழையும் சூழலில், கடந்த காலங்களில் தமிழன் அஞ்சாமல் அந்நியரை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

*குழந்தை பருவம் : -*

*1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.*


*அரச சேவை :-*

சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

அரசி வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சியை கொடுத்தவர் சின்ன மருது என்றும் சொல்வார்கள். விஜயரகுநாத சேதுபதி மன்னன் சேது நாட்டை வென்றான். நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.

*முத்து வடுகநாதர் மரணம் :-*

ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாப் சூழ்ச்சி செய்தான். முத்து வடுகநாதர் போரில் மரணமடைந்தார். வேலு நாச்சியாரை காப்பாற்ற மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

*படை திரட்டல் :-*

திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில், ஹைதர் அலியை சந்திக்கிறார்கள். அவரது பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்கவைக்கிறார்கள். 1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி,  மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

ஆற்காடு நவாப்பிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டும் மருது சகோதரர்கள் கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஹைதர் அலியின் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. ஊமத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மருது சகோதரர்கள், சுதந்திரப் படையைத் திரட்ட முடிகிறது.

*ஆட்சி மீட்பு :-*

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது.

வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்து கூறினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார். காளையார்கோவிலை சீரமைத்ததிலும், குன்றக்குடிய முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி சேவக பெருமாள் கோவில் ஆகியவற்றின் சீரமைப்புகளையும் மருது சகோதரர்கள் செய்கின்றனர்.

*மக்கள் பணி :-*

குன்றக்குடியில் அரண்மனை ஒன்ற'' கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெரிய மருது பிறந்த நரிக்குடியில் அவர்கள் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப்பட்டுள்ளது. சகோதரர்கள் கலைகளை வளர்த்தனர். நாடகக் கலை வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

*போர் :-*

1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17 ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகிறார். அதற்கு பிறகு,  வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர்.

முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்று செய்தி உண்டு. காளையார் கோவிலில் ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி வளைத்தனர். ஆனால் மருது சகோதரர்கள் தப்பிவிட்டனர்.

விருப்பாச்சியில் ஆங்கிலேய படையுடன் மோதி, சகோதரர்கள் வென்றிருக்கிறார்கள் என்றும் சரித்திரம் இருக்கிறது. போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையைதிறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள்.இன்றும் கூட அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன.

ஆனால், இன்றைய நிர்வாகத்தினர், அவற்றை சரியாகப் பராமரிக்காத காரணத்தினாலும், தூர்வாரி ஆழப்படுத்தாத காரணங்களினாலும், அவை நீரை தேக்கி நிறுத்தி, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லாமல் ஆகிவிட்டன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்று கூறுகிறார்கள். மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24 ஆம் தேதி தூக்கிலிடப்படுகிறார்கள்.

*போர் களம்:-*

அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களலம் போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.

*மரணம் :-*

அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக அவர்கள் வழங்கப்படுகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

*முதல் சுதந்திர போர்::-*

1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது.

*ஆனால்,*

அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வு.

மேற்கண்ட நினைவு தினம், மருது சகோதரர்களை கதாநாயகர்ளாக்குவதற்கோ, அவர்களை வீரர்களாக்கிவிட்டு, நாம் கோழைகளாக நிற்பதற்கோ எடுத்துக்கொள்வது நியாயமான நினைவேந்தலாக இருக்காது.

மாறாக, நமது மூதாதையர்கள், தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசித்தவர்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த கதைகள், நமக்கு இன்றும் கூட அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் இருக்கின்ற சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நினைவேந்தி தொடர்ந்து போராட உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

*விவசாயத்தில், நிதி மூலதனத்தில், ராணுவத்தில் நுழைகின்ற அந்நிய கரங்களை, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளுடன் கணக்கு பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்று அந்த நினைவு நாள் நம்மைக் கேட்கிறது.*


*மாமன்னர்,*
*மருதுபாண்டியர்கள்*

*1801- ஆம் ஆண்டு அக்டோபர் 24- ஆம் நாள் சிவகங்கை திருப்பத்தூரின் மையப்பகுதியில் தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர் அந்த சகோதரர்கள். தூக்குகயிற்றை மாட்ட வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.???*

*தங்கள் கட்டியாண்ட சிவங்கைச் சீமை மண்ணிலே கைதியாக நின்ற மருது சகோதரர்கள் “ எங்களுக்கு நீங்கள் எந்த தயவும் காட்டவேண்டாம். நான் என் நாட்டைக் காப்பாற்ற போரிட்டு உங்களிடம் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். என் உயிரை பறிக்கும் உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.*

*ஆனால் என் உயிரோடு எதற்காக, இந்த சின்னஞ்சிறு உயிர்களையும் சேர்த்து பறிக்கின்றீர்கள்?... இந்த சிறுவர்களா உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள் என்று நினைக்கீன்றீர்கள்?*

*எங்கள் உயிரை பறித்ததும், எங்கள் உடலை காளையார் கோவிலில் நாங்கள் கட்டிய கோபுரத்துக்கு எதிரில் புதைத்துவிடுங்கள். இது எங்கள் மரண சாசனமாக கூட நீங்கள் எடுத்துகொள்ளலாம்” என்று சிறிதும் தயக்கமின்றி தங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் போகப்போகின்றது என்பதை அறிந்தும் எந்த பதட்டமும் இல்லாம் ஆங்கிலேயர்களிடம் கூறினார்கள்.*

*வீரத்தின் விளைநிலமாக இனமான தமிழர்களாக விளங்கிய மருது சகோதரர்கள்தான் அவர்கள்.*

*அவருக்கு உதவியாக இருந்தார்கள் என்று ஐநுாறு பேரையும் துாக்கில் ஏற்றினார்கள் ஆங்கிலேயர்கள்.*

*மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டு பிணமாக கயிற்றில் தொங்கிய நிலையில்கூட ஆங்கிலேயர்கள் அவர்கள் அருகில் செல்ல அச்சமடைந்தனர் என்றால், ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்கு மருது சகோதரர்கள் மீது பயம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்!*

*உயிர் போகும் நிலையில் கூட ஜாதி, மதம் பார்க்காமல் நாங்கள் கொடுத்த அனைவரது சொத்துக்களையும் அவரவரிடமே கொடுக்கப்படவேண்டும்.*

*என்ற கடைசி ஆசை கண்ட!!*

*மாமன்னர் மருதுபாண்டியர்களின் 216- வது நினைவு நாளான இன்று அந்த இனமான தமிழர்களின் செயற்கரிய புகழ்மிக்க வாழ்க்கை முறையை நினைத்து வீரவணக்கம் செய்வோம்.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக