திங்கள், 23 அக்டோபர், 2017

ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24.


ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24.

1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.
1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.
ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் ஐநா நாளன்று குடியரசுத் தலைவர் அரசு அறிவிப்பினை வெளியிடுகின்றார்;அண்மையில் பராக் ஒபாமா இத்தகைய அறிவிப்பொன்றை வெளியிட்டார் [3] .
உலக மேம்பாட்டுத் தகவல் நாள்
1972ஆம் ஆண்டு முதல் ஐநாவின் உலக மேம்பாட்டுத் தகவல் நாளும் அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் தினம்

முதலாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919 ஆண்டு ஜுன் மாதம் 28 ம் தேதி உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.
ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனைவிட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலக மகாயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே 2ம் உலக மகா யுத்தமாகும்.
2ம் உலக மகா யுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945ல் தோற்றுவிக்கப்பட்டது. 2ம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவு செய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர்.
ஆரம்பத்தில் இந்த அமைப்பு 1 ஜனவரி 1942 முதல் போர்க்கால கூட்டணியாக செயற்பட்டது.
இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனி நிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.
இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சான்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது.
இம் மாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 அக்டோபர் 24ம் தேதி இந்த சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திடப்பட்ட பின்பே அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றும் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகிறது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946ல், லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960ல் 100 நாடுகளும், 1980ம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்த இவ்வமைப்பில் 2009 ஆண்டு தரவுகளின் படி தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளாக அரபி, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எஸ்ப்பானிய ஆகியவை உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவைகளே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
பொதுச் சபை (General Assabbly),
பாதுகாப்புச் சபை (Security Council),
பொருளாதார, சமூக சபை (Socio Economic Council),
நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council),
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice),
செயலகம் (The Secretariat)

பொதுச்சபை:
192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும், எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.
இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் அவையாவன:
அரசியல் பாதுகாப்பு,
பொருளாதாரம், சமூகம்,
கலாசாரம்,
தர்மகர்த்தா,
நீதி, நிர்வாகம்,
சிறப்பு அரசியல் குழு
என்பனவாகும்.
பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச் சபையே தேர்வு செய்யும்.
பாதுகாப்புச் சபை:
இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15. நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தேர்வு செய்யும். பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்துவதற்கும் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரம் இந்தியாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெற முயன்று வருகிறது.
பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் 'வீட்டோ" எனப்படும். இந்த 'வீட்டோ" அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதே நேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஷ்யா, சீனாவிடம் இல்லாவிடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்து விட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்
ஐ.நாவின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல், இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்
இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக்கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப்படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா. மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.
பொருளாதார சமூக சபை:
அங்கத்துவ நாடுகள் 54யைக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயேர்க்கிலும், ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும்).
இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு, புள்ளி விபரக் குழு, ஜனத் தொகைக் குழு, சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு, பெண்கள் நல பாதுகாப்புக் குழு மேலும் ஐரோப்பிய ஆசிய, லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
நம்பிக்கைப் பொறுப்புச்சபை:
சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கிறது.


சர்வதேச நீதிமன்றம்:
இது ஹேக் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்).
செயலகம்:
ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் 'பன்-கீ மூன்" ஆவார்.
செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும்ää பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.
ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.
சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது.
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
1967ம் ஆண்டு ஐ.நாவின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, 1968ம் ஆண்டில் சோவியத்- செக்லோஸ்லவியா பிரச்சனை, 1974ம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991ம் ஆண்டு அமெரிக்க- ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க- ஈராக், அமெரிக்க- ஆப்கான் யுத்தம்... இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பேணவில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
பிரச்சனை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. வல்லரசுகள் ஐ.நா. சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல் அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐ.நா. சபை செயற்பாடு; சிக்கல்களை எதிர் நோக்குகின்றன.
எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா. சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரிட்டன் 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரிட்டனின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம், பொருளாதாரச் சுரண்டல், ராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர மறைமுகமாக ஐ.நா. சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா?.
இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான செயல்களை இந்த சபை ஆற்றி வருவதை நம்மால் மறுக்க முடியாது.



24ம் தேதி ஐக்கிய நாடுகள் தினம்: 2ம் உலகப்போரை நிறுத்த உருவானது ஐ.நா.

‘ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்கிறோம். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம்தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. அமைப்புக்கு முன்னதாக இதுபோன்ற பல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தை பேணுதல் என்ற பிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே 2ம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது. 2ம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.
ஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது. 2ம் உலகப்போரின்போது எதிரி நாடுகளுடன் போரை தொடர்ந்து நடத்துவதற்கு 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி தந்தார்கள். பிறகு 1945ம் ஆண்டு 50 நாடுகள் அடங்கிய மாநாடு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைப்பெற்றது. அமெரிக்க, இங்கிலாந்து, சோவியத் யூனியன் மற்றும் சீன நாட்டு பிரதிநிதிகள் கொடுத்த ஆலோசனையின்பேரில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் டம்பார்ட்டன் ஓக்ஸ் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தின் உள்ளடக்கங்கள் முடிவு செய்யப்பட்டது. 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி 50 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த போலந்து நாடு பிறகு தன்னுடைய கையெழுத்தை இடத்தின் மூலமாக அவற்றின் எண்ணிக்கை 51ஆனது. 1945ம் ஆண்டு இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராக ஆனது.
1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகம் 39 மாடிகளை கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று 3 முக்கியமான கட்டிடங்கள் உள்ளன.
ஐ.நா.சபை சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம் போன்ற சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம்தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்‘தான் ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதிமன்றம் தவிர மற்ற 5 அமைப்புகளும் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகிறது.
1. ஐ.நா. பொதுச்சபை: இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்பு சபைக்கு தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களை பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.
2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற அதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.
3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் 2ம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.
5. ஐ.நா. செயலகம்: ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.
6. சர்வதேச நீதிமன்றம்: ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும்.
ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன. உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. எனினும் ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவி மக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. எல்லா நாடுகளின் மக்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்கு உண்டு என்பது அனைத்து நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.
ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள்
* உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது.
* நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது.
* ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்.
* குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக