வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

உலக தேனீக்கள் தினம் ஆகஸ்ட் 17.


உலக தேனீக்கள் தினம் ஆகஸ்ட் 17.

கலப்படத் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி... வீட்டிலே தேனீ வளர்க்கும் எளியமுறை! #HoneyBeeDay

செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத் திறனை மழுங்கடித்துவிடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்துவிடுகிறது.
கலப்படத் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி... வீட்டிலே தேனீ வளர்க்கும் எளியமுறை! #HoneyBeeDay

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி  சொல்லும் உதாரணம், தேனீ மாதிரி உழைக்கணும் என்பதே. அப்படிப்பட்ட தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்துவருகின்றன. அப்படி அழிந்து வரும் தேனிக்களைப் பாதுகாக்கவும், அதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை 'உலக தேனீக்கள் தினம்' கொண்டாடப்படுகிறது.

பல்வேறு உயிரினங்களில் தலைவனாக இருப்பது ஆண்கள்தான். ஆனால், இங்கு பெண் அதாவது, ராணித் தேனீதான் தலைவன். அனைத்து தேனீக்களும் இதன் கட்டுப்பாட்டுக்குள்தான். பல்வேறு கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவதே ராணித்தேனீயின் முக்கிய வேலை. வேலைக்காரத் தேனீக்கள் காலம் முழுவதும், ராணித்தேனீக்கு அடிமையாக வேலை செய்யும். அது மட்டுமல்லாமல் ஆண் தேனீக்களும் ராணித் தேனீக்களுக்கு அடிபணியும். பார்ப்பதற்குக்கூட ஆண் தேனீயைவிட ராணித் தேனீ பெரியதாகவே இருக்கும். ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை டீ-ஸ்பூன் தேனை மட்டுமே சேகரிக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான இடங்களுக்குப் பயணம் செய்து தேன் சேகரிக்கும். தேனீக்கள் தன்னுடைய கூடு இருக்கின்ற இடத்திலிருந்து 12 கி.மீ தூரம் வரை சென்று தேனைச் சேகரிக்கும். உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளராக தேனீக்கள் இருக்கின்றன. உயிரினங்களின் யானை, ஆமைதான் அதிக ஞாபகசக்தி கொண்டவை. ஆனால், அவர்களைக் காட்டிலும் கூர்மையான ஞாபகசக்தியைக் கொண்டது தேனீக்கள். தேனீக்கள் மிக அதிகமாகச் சுத்தம் பார்ப்பவை.

உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுவது தேன். ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டும்தான் இருக்கும். 250-க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாள்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால், ராணித் தேனீ  2 லிருந்து 7 வருடம் வரை உயிருடன் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் அதிகபட்சமாக 42 நாள்கள் உயிருடன் இருக்கும். ராணித் தேனீ ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும். வருடத்துக்கு 5 முதல் 7 லட்சம் முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும். இவற்றுக்கு 6 கால்கள் உண்டு. தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும். நிமிடத்துக்கு 190 முறை அடிக்கும். ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும்.

தேனீக்கள் தேன்

உலகம் முழுவதும் தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு 42% அதிகரித்திருக்கிறது. தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவையே. செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்துவிடுகிறது. அதேபோல், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குவதால் தேனீக்கள் இறந்துவிடுகிறது. தேனீக்களை அழிக்காமலே தேன் எடுக்கும் எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், நெருப்பு மூட்டித் தேன் எடுக்கும் பழங்கால முறையையே இன்றைக்கும் பலர் பின்பற்றி வருவதும் தேனீக்கள் அழிய ஒரு காரணமாக இருக்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. பலர் வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து வயல்களில் மகரந்தச் சேர்க்கை உண்டாக்கவும் முயல்கிறார்கள். தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர் என்று பலர் தேனீக்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர்.

குடும்பத்தின் தேவைக்காகவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும், மருத்துவத்துக்கும் அதிகளவில் பயன்படும் தேனீக்களை, கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றாம்பாளையம் அருகேயுள்ள இயேசுராஜப்புரம் கிராமத்தைச் சேர்ந்த 82 வயதான சந்தியாகு என்பவர் பல்வேறு வருடங்களாக வளர்த்து வருகிறார்.

சந்தியாகு

தேன் வளர்ப்பு முறையும், தேனினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அவர் கூறுகையில், தேனீ வளர்ப்பு ஊரறிந்த விஷயம், ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை. தேனீக்களை மிக எளிதாக வீட்டின் அருகிலேயே வளர்க்கலாம். தேனீக்கள் வளருவதற்குப் பாதுகாப்பு முக்கியம். முக்கியமாக எறும்புகள் இருக்கும் இடத்தில் அவற்றை வளர்க்கவே கூடாது. தேன் கூடு வைத்த பிறகு அடிக்கடி அந்த இடத்தைப் பார்வையிட வேண்டும். பெட்டியில், எலி, பல்லி, பாம்பு, பூச்சிகள், கரிச்சான் குருவி, மெழுகு பட்டுப்பூச்சி, குளவி, கதம்ப வண்டு போன்றவை உயிரினங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில்தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். பெட்டிகளில் வெடிப்புகள் பிளவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். பெட்டியை ஆடாமல் வைக்க மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துக்குள் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், தேன் கிடைக்காது. காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில் பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும்.

தேனீ வளர்பு

தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தேனீப் பெட்டிகள், தேன் பிரிக்கும் இயந்திரம் என்று அனைத்தும் கடைகளிலும் வந்து விட்டன. தேனீப் பெட்டிகள் 6,500 ரூபாய் வரை கிடைக்கிறது. எந்தக் கலப்படமும் இல்லாதத் தூய்மையான தேனில் உயிர் காக்கும் நன்மைகள் உள்ளன. இயற்கை முறையில் உடலைப் பருமனாக மாற்றவும், உடல் பருமனை குறைப்பதிலும் அதிக பங்குவகிக்கிறது. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வந்தால், குமட்டல் மற்றும் தலைவலி குணமாகும். தேனையும் மாதுளம் பழரசத்தை கலந்து தினமும் குடித்து வந்தால், இதய நோய்கள் தீரும். கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி, அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் குணமாகும். வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றித் தேன் தடவ வேதனைக் குறையும். இவை, கிராமப்புறங்களில்  கண்டுணர்ந்த இயற்கை வைத்திய முறைகள். அதுமட்டுமின்றி ரத்தம் சுத்திகரிப்பு செய்யவும், நல்ல தூக்கம் வருவதற்கும், குடல் புண், வாய்ப்புண், ரத்த சோகை போன்ற பல்வேறு நோய்களையும் தேன் குணமாக்குகிறது என்கிறார்.

தேனீ

மேலும், தொடர்ந்த அவர், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். தற்போது பயன்பாட்டில் இருப்பவை சுத்தமான தேன்களாக இருப்பதில்லை. வியாபாரத்துக்காகக் கலப்படம் செய்யப்படுகிறது. அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

தேன் கலப்படத்தைக் கண்டறியும் சில முறைகள்!

சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விட்டால், தண்ணீரில் கரையாமல் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.
சுத்தமான காட்டன் துணியைத் தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாகச் சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமான தேன்.
சுத்தமான தேனை வாணலியில் சூடு செய்தாலும் அதன் அடர்த்தி குறையாது.
சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் வைத்திருக்கும்போது அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும்.
சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும்.

சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து  மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக  உடனே ஒட்டாமல் குமிழ் போலப் பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போலப் பாத்திரத்தில்  சமநிலையில் இருக்கும். இது போன்று பல்வேறு வழிமுறைகளில் கலப்படத்தை கண்டறியலாம் என்கிறார்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களாலும் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் எதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கின்றன. நம் வாழ்வின் உணவு உற்பத்திக்குப் பெரும்பங்கு வகிப்பதும், நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்களைப் பாதுகாக்க நாம் தேனீக்களை வளர்க்க வேண்டும் என்பதில்லை. இருக்கும் சிறிதளவு தேனீக்களையும் அழிக்காமல் இருக்க, அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவற்றின் பயன்பாடுகளை முடிந்தளவு குறைக்கலாம். இயற்கையைப் பாதுகாக்கலாம். இயற்கைக்குத் துரோகம் இழைக்காமல் இருந்தாலே போதும்.

உலகில் தேனீக்கள் இல்லையென்றால், நான்கு வருடத்தில் மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!


உலக தேனீக்கள் தினம் : அழிந்து வரும் தேனீக்கள்... காப்பாற்ற என்ன வழி...?

தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் .

ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக அறிவித்தனர். அந்தவகையில் 17-ம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர். இந்த நாளில் தேனீக்களின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.

தேனீக்களை எப்படி பாதுகாப்பது என்பதைக் இங்கே காணலாம்.....

பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணியுங்கள் : பூச்சிக்கொல்லிகளால் நீங்கள் அழிக்க நினைக்கும் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறையை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு , சோப், சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.

தேனீக்களின் விருப்பமான மலர்கள் : தேனீக்கள் நுகர்வதற்கு ஏற்ற பூச்செடிகளை வளர்க்க முற்படுங்கள். இதனால் அவை பெருக ஆரம்பிக்கும். தேனீக்களின் வேலையும் இடைவிடாது நடக்கும்.

தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வு : வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அதன் வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியதுவத்தை உணர்த்துங்கள். இதனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் இதைக் கற்றுக்கொண்டு வளர்க்க , பாதுகாக்க முன்வருவார்கள்.

தேனீக்களின் காப்பானாக இருங்கள் : பல இடங்களில் தேனீக்கள் கூடு கட்ட அதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தருகின்றார்கள். அப்படி நீங்களும் தேனீக்கள் சூழ உதவுங்கள். இதற்காக உலகம் முழுவதும் பல அமைப்புகள், குழுக்கள் இருக்கின்றன. நீங்களும் குழு அமைத்து தேனீக்களை பாதுகாக்கலாம். அதனால் நன்மையும் அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக