ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

அன்னை தெரசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26.


அன்னை தெரசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26.1910.

அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு

புனிதர் அன்னை தெரசா!
அன்னை தெரசாவிற்கு இன்று வாட்டிக்கனில் புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. அதன் வீடியோ

'அன்னை தெரசா'  எனும் பெயரை 'அன்னை' எனும் சொல் இல்லாமல் யாரும் சொல்வதில்லை. அந்தளவுக்கு நம் மனதில் வாழும் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் . அவரது வாழ்விலிருந்து சில துளிகள்...

இளமைப் பருவம்!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. தந்தை நிக்கல் நிகோலா, தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் மூன்றாவது மகளாக பிறந்தவரின் சகோதரி பெயர் அகா, சகோதரர் பெயர் லாகஸ். தெரசாவின் எட்டு வயதில், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதன் பிறகு இவரது தாயால், நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார். குறிப்பாக ஐந்து வயதிலேயே பள்ளி பாடங்களை எப்போது கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவிற்கு படிப்பில் திறமையானவராக இருந்தார். தவிர தன் நகைச்சுவை உணர்வால், சிறுவயதிலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரிக்கும் திறனும் பெற்றிருந்தார். தனது இளமை பருவத்தில், கிருஸ்தவ மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தனது பன்னிரண்டு வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன்படி ஏழை எளியவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு, பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்துவந்ததோடு, தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல், மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுதல், மருத்து வைத்து விடுதல் ஆகிய பணிகளைச் செய்ததும், அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளையே பேசுவார்.


இந்திய வருகையும், 'தெரசா' பெயர் மாற்றமும்!

சிறுவயதில் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்த தெரசா, தனது 18 வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்தார். அதன்படி தாய், சகோதரி மற்றும் ராணுவத்தில் பணியாற்றி வந்த அண்ணனிடமும் சம்மதம் பெற்றார். வீட்டிலிருந்து விடுபட்டு 'Sodality of children of Mary' என்ற அமைப்பைச் சேர்ந்த லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக தன்னை இணைத்துக்கொண்டார்.  ஒருமுறை இந்தியாவின் மேற்கு வங்கம் பயணம் முடித்து திரும்பிய அச்சகோதரிகளின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் ஏழ்மை நிலையினரை பற்றி தெரிந்துகொண்டார். பின்னர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக, துறவறம் செல்ல முடிவெடுத்தார். அதன்படி 1928-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி ராத் ஃபர்ன்ஹாம் (Rathfarnham) எனப்படும் அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார். ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அப்போதுதான் 'ஒரே தேவை, சேவை'. அதுவும் குழந்தைகள், பெரியவர்கள், ஏழைகள், நோயாளிகள் என பாரபட்சம் இன்றி எல்லோருக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்தார். பிறகு 1929-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். சட்ட விதிகளின்படி புதிதாக வந்து அங்கு சேருபவர், பெயரை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். பிரான்ஸ் நாட்டின் சகோதரி 'தெரசா மார்டின்' ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவையாற்றவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கு அவரது உடல்நிலை இடம்தராததால், 'காசநோயால்' தனது 24 வயதில் மரணித்தார். அவரது நினைவாக தனது பெயரை 'தெரசா' என மாற்றிக் கொண்டார்.

சேவையில் ஈடுபாடு!

* கொல்கத்தாவில் தங்கியிருந்த தெரசா, அங்கு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், தொழிலாளர்களின் நிலை, வேலையில்லா திண்டாட்டம், பசியுடன் திரிந்த குழந்தைகள், சுகாதரமற்ற குடியிருப்புகள், வியாதியுடன் கூடிய மக்களைக் கண்டு வருத்தம் கொண்டார். அச்சூழலில் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார். குழந்தைகளிடம் அன்பு காட்டி பாடம் கற்பித்தார். சில காலங்களிலேயே 'இந்தியாதான் இனி என் தாய்நாடு' என முடிவெடுத்தார். இந்தி மொழியும் கற்றுக் கொண்டார். மீண்டும் கொல்கத்தாவிற்கே பணிமாறுதல் செய்யப்பட்டார். அங்கு கல்வியுடன், சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. அப்படி குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதைத் தவிர, குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டினார். ஏழை மக்களையும் தேடிச் சென்று சேவைகள் செய்தார். ஆசிரியையாக இருந்த தெராசா, பின்நாளில் பள்ளி முதல்வரானார். பதினேழு ஆண்டுகள் கல்வி பணியில் இருந்து, ஏராளமான நல்ல அனுபவங்களைக் கற்றுக்கொண்டார்.


* 1942-43 -ம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரும், விடுதலைப் போராட்டங்களும் உச்சத்தில் இருந்தது. மக்கள் பஞ்சத்தில் தவிப்பதைக் கண்டு அவர்களுக்கு அதிக நேரம் உதவி செய்ய நினைத்தார் தெரசா. ஆனால் லொரேட்டாவின் விதிமுறைகள் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், கல்வி பணியில் இருந்து விலக முடிவெடுத்தார். 1948-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி தன் விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அன்றுமுதல் முழு நேரமாக தன் சேவை பணியைத் தொடங்கினார். அன்றைய தினத்தில் ஐந்து ரூபாய் பணம், மூன்று நீல நிற சேலைகள்தான் அவரது சொத்தாக இருந்தது. குடிசையில் வசித்த மக்களைச் சந்தித்து, ஆறுதலாக பேசினார். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக உறுதி கூறினார். பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனைக்குச் சென்று தன் செவிலியர் பணியை மேம்படுத்திக் கொள்ள போதிய பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். பல விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவ பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். அப்போது மருத்துவத் துறைக்குத் தேவையான 'உற்சாகம்', 'ஆர்வம்', 'பொறுப்பு' ஆகிய மூன்று நற்குணங்களையும் தெளிவுற கற்றுக்கொண்டார்.

* தெரசாவுடன் லொரேட்டாவின் முன்னாள் மாணவியர்கள் பத்து பேர் கொண்ட முதல்கட்ட சேவைக்குழு உருவாகி, மக்களுக்காக பணிசெய்ய தொடங்கியது. 1949-ல் கொல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்த மக்களின் முக்கியத் தேவை 'பள்ளிக்கூடம்' என்பதைத் தெரிந்துகொண்டார். சில காலங்களிலேயே ஐந்து மாணவர்களுடன் பள்ளியைத் தொடங்கினார். மாணவர்களின் எண்ணிக்கையும் சீக்கிரமே அதிகரித்தது. சில காலங்களிலேயே நோயுற்று மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த பெண்மணியை கண்டு மனம் உருகினார். உடனே, சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்குச் சென்று உபரி மருத்துவ பொருட்களைத் தாருங்கள். பல ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டார். பல தரப்பிலும் இருந்து உதவிகள் கிடைத்தன.

* 1950-ம் ஆண்டு 'பிறர் அன்பின் பணியாளர்' என்ற சபையைத் துவங்கி, பசியால் வாடும், வீடின்றி தவிக்கும், மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தால் புறக்கணிப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்தார். இருந்தும் ஆதரவற்றும் அடைகலம் இன்றியும் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கருணை இல்லம் ஒன்றை உருவாக்க ஆசைபட்டார். அரசின் உதவியுடன் 'காளிகட்' என்ற இடத்தில் 'நிர்மல் ஹ்ருதய்' என்ற முதியோர் கருணை இல்லத்தை ஆரம்பித்தார். பின்னாளில் அது, 'காளிகட் இல்லமானது'. அதே ஆண்டு ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்ற சேவை அறக்கட்டளையைத் தொடங்கி, நோய்வாய்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

* 1955-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் சிசுபவன் என்ற இல்லத்தைத் தொடங்கி, ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கத் தொடங்கினார்.

* தொழுநோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கி, அதே ஆண்டு 'காந்தி பிரேம் நிவாஸ்' பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார். பல நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தொழுநோய், காசநோய், எஸ்.ஐ.வி பாதித்தவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், அவர்களை மற்றவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

* சிறை கைதிகளுக்கும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் போதிய உதவிகளுடன், ஆலோசனை மையங்கள் மூலமாக உதவிகள் செய்து வந்தார்.


* உடலில் பல காயங்களுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தானே கைப்பட மருந்து வைத்துவிடுவதும், உறவினர்களே பார்த்துக்கொள்ளாத நிலையில் சீல் வடிந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகளின் சீழைத் தானே சுத்தம் செய்து, மருத்துவம் செய்து பராமரித்தார். அதனைக் கண்ட பலரும் 'ச்சீ' என சொல்லியதும் உண்டு. பதிலுக்கு 'ச்சீ' எனச் சொல்லி ஒதுங்கினால் காயம் குணமாகாது. அவர்களுக்கு பணிவிடை செய்வதுமட்டுமே தீர்வு என்பதையே பதிலாக கூறுவார்.

* இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளுக்கும் 'பிறர் அன்பின் பணியாளர்' சபையினை சேவைகளை விரிவுபடுத்தினார். அதன்படி 1965-ம் ஆண்டு வெனிசூலாவிலும், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் சேவை மையங்களை நிறுவினார். சுதந்திரப் போராட்டங்கள், போர், உள்நாட்டு கலவரங்கள் என எந்த நாட்டில் மக்கள் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டு அங்கெல்லாம் சென்று உதவிகள் செய்துவந்தார்.


சோதனைகளும் சாதனைகளும்!

* தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தனது குழுவினருடன் வீதி,வீதியாக யாசகம் கேட்டுச் செல்வார். அப்படி ஒருமுறை சென்றபோது, ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டார். அவர் தெரசாவை கண்டும் காணாமலும் இருந்தார். தெரசா மீண்டும் கை நீட்டி உதவி கேட்டார். கோபமுற்ற கடைக்காரர் மென்றுகொண்டிருந்த வெற்றிலை பாக்கினை,  தெரசாவின் கையில் துப்பினார். சற்றும் பொறுமையை இலக்காத தெரசா, இது நீங்கள், எனக்கு கொடுத்தது. பசியில் வாடும் குழந்தைகளுக்கு எதாவது உதவி செய்யுங்கள் எனக் கூறியதும், அந்தக் கடைக்காரர் குறுகிப்போய் தன்னால் இயன்ற பண உதவிக்ச் செய்தார். இப்படி ஒவ்வொரு நாளும், பல வழிகளில் அவமானங்களையும், சங்கடங்களையும் சந்தித்துக்கொண்டுதான் சேவையாற்றி வந்தார். ஆனால் அவரது ஒரே நோக்கம், இவ்வுலகில் ஏழைகளாகவும், நோயாளிகளாகவும் துன்பங்களைச் சந்திப்போர் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அவர்களில் என்னால் இயன்றவர்களுக்கு உதவி செய்யவே கடவுள் என்னைப் படைத்திருக்கிறார் எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.


* தெரசா உலகம் முழுக்க பலராலும் 'சிறந்த சேவகர்' எனப் பாராட்டப்பட்டாலும், விமர்சனக் கணைகளையும் சுமக்காமல் இல்லை. கருக்கலைப்பிற்கான எதிர்ப்பு, கொல்கத்தா நகரின் புகழையும் குலைத்து விட்டார் என ஏராளாமான விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். இது போதாத குறையாக இவரின் மருத்துவ சேவையின் தரம் மற்றும் நன்கொடையாக வரும் பணத்தை செலவு செய்யும் விதம் பற்றி ஊடகங்களுக்கும் பல விமர்சனங்களை தெரசாவின் மீது சுமத்தினார்கள். இவற்றை எல்லாம் தகுந்த முறையில் எதிர்கொண்டு, நேர்மையான முறையிலும், அகிம்சை முறையிலும் தன் சேவைப் பணியைச் செய்துகொண்டிருந்தார். குறிப்பாக, 1969-ல் இவரது வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஆவணப்படம் வெளிவந்த பிறகு, உலகம் முழுக்க பிரபலமானார்.

இறப்பு!


1983-ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை ரோம் நகரில் சந்தித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் 1989-ம் ஆண்டு இரண்டாவது முறையாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பலமுறை இருதயக் கோளாறுகளால் அவதிபட்டு வந்தார். அதனால் 1991-ம் ஆண்டு 'பிறர் அன்பின் பணியாளர்' சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனாலும் அந்த அமைப்பின் மற்ற அருட்சகோதரிகள் இவரைத் தலைமைப் பொறுப்பில் இருக்க வற்புறுத்தினர். ஆனால் கால் முறிவு, மலேரியா, இருதயக் கோளாறு என இவரது உடல்நிலை மோசமாகவே, 1997-ல் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து விலகினார். 45 வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், ஆதரவற்றோர் எனப் பலதரப்பட்ட மனிதர்களுக்கும் சேவை புரிந்து வந்த தெரசா, 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.  தெரசாவை, இந்தியர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களும் 'அன்னை தெரசா'வாக அழைத்தனர்; அவரது சேவையைப் போற்றினர். அன்னை தெரசா மரணமடைந்த போது, உலகின் பல தரப்பட்ட மக்களின் கண்ணீர் சிந்தினர். குறிப்பாக அவர் மரணமடைந்த போது, அவரது 'பிறர் அன்பின் பணியாளர் சபை' 123 நாடுகளில் 610 சேவை மையங்களை இயங்கி வந்ததுடன், 4 ஆயிரத்தும் அதிகமான அருட்சகோதரிகளையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டும் இருந்தது.

பெற்ற விருதுகள்!


1962-ல் பத்மஶ்ரீ விருது.

1972 -ல் பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது.

1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு.

1980- இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது.

1996- அமெரிக்காவின் கெளரவ பிரஜை.

தவிர பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகள்.

இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்கள்.
2003-ல் 'அருளாளர்' பட்டம் பெற்றார்.

* 2002-ம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த மோனிகா பெர்ஸ் என்ற பெண் புற்றுநோய் கட்டியால் துன்பப்பட்டு வந்துள்ளார். அன்னை தெரசாவின் உருவம் பதித்த பதக்கத்தை அணிந்து, அவரை வணங்கியதால் அவரது உடல் பூரணமாக குணமடைந்துள்ளது. இந்த நிகழ்விற்காக 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு 'அருளாளர்' பட்டம் வழங்கப்பட்டது.

* பிரேசில் நாட்டில் மூளை பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர், அன்னை தெரசாவை மனம் உருக பிரார்த்தனை செய்து வந்ததாகவும், அதனால் அவரது உடல் பூரண குணம் பெற்றதாகவும் கூறினர். இந்த இரண்டு நிகழ்வுகளையும் அங்கீகரித்துதான், அன்னை தேராசின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளான இன்று (செப்டம்பர் 4-ம் தேதி) அவருக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியுள்ளார், போப் பிரான்சிஸ்.

அன்னை தெரசாவிற்கு அவர் வாழ்ந்த மதம் வழங்கும் உயரிய அங்கீகாரம், 'புனிதர் பட்டம்'. மக்களின் மனதில் அன்போடும், கருணையோடும் போற்றப்படுபவார். இவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும்.

புனிதர் பட்டம்!

இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான தேர்வுகள் தொடங்கும். நான்கு நிலைகளைக் கடந்து, அப்பட்டத்தினைப் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் 'புனிதர்' என நம்பப்படுவோர், திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் முதல் நிலையான 'இறை ஊழியர்' (servant of god) என்ற பட்டம் வழங்கப்படும்.

* பிஷப்பினால் நியமிக்கப்பட்ட குழுவானது, இறந்த ஒரு நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்யும். அவர் நற்பண்புகளுடன் இருக்கிறார் என்று பரிந்துரை செய்யும் பட்சத்தில், அவருக்கு இரண்டாம் நிலையான 'வணக்கத்திற்குரியவர்'(venerable) என்ற பட்டம் வழங்கப்படும்.

* கிறிஸ்தவ நம்பிக்கையினைப் பின்பற்றி, சிறப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் எனவும், மற்றவர்களின் நலனுக்காக கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராகவும், அற்புதம் (miracle) செய்பவராக இருக்கிறார் எனவும் உறுதி செய்து, மூன்றாம் நிலையான 'அருளாளர்' (முக்திப் பேறு) (blessed) பட்டம் வழங்கப்படும்.

* மேற்கண்ட மூன்று நிலைகளும் முடிந்த பின்னர் மீண்டும் ஓர் அற்புத நிகழ்வு நடந்தால் நான்காம் மற்றும் இறுதி நிலையான 'புனிதர் பட்டம்' (saint) வழங்கப்படும். இவ்விருது வழங்கப்படும் இறந்த மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியிலில் சேர்க்கப்படுவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக