செவ்வாய், 5 டிசம்பர், 2017

உலக மண் தினம் டிசம்பர் 05.



உலக மண் தினம் டிசம்பர் 05.

பன்னாட்டு மண் ஆண்டு, 2015 ( International Year of Soils, 2015 ) என்பது உலக நாடுகளின் பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். மண்ணின் முக்கியத்துவத்தை மக்கள் உணரச் செய்யும் வகையிலும் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2015ஆம் ஆண்டை சர்வதேச மண் ஆண்டாக ஐநா பொதுச் சபை 2013 டிசம்பர் 20 இல் இடம்பெற்ற தனது 66ஆவது அமர்வில் அறிவித்தது. ஐ.நா. சபையின் ஓர் அங்கமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக நாடுகளில் இந்த ஆண்டு முழுவதும் செயற்படுத்த பல செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
வரும் தலைமுறையினர்க்கு மண்ணின் முக்கியத்துவத்தை அறியச் செய்வது நமது தலையாய கடமை. நம் நாடு விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு, கிராமங்கள் நிறைந்த நாடு என்று கூறினாலும் வளர்ந்து வரும் தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பம் நம்மை நமது மண்ணோடு நம் முன்னோர்கள் கொண்டிருந்த உறவை முழுவதுமாக அறுக்கும் வேலையையே செய்து வந்துள்ளது.


மண் வளம் காக்க உறுதி ஏற்போம்!இன்று உலக மண் தினம்

ஆனைமலை:மண் வளம் காத்தால், மகசூல் அதிகரிக்கும்; மனித குலத்துக்கும் நன்மைகள் பல பயக்கும். உலக மண் தினமான இன்று, மண் வளம் காக்க அனைவரும் உறுதியேற்போம்.உலகளாவிய அளவில் மண்ணின் மகத்துவத்தை அனைவரும் அறியும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச., 5ல் சர்வதேச அளவில், உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் மண் வளத்தை காக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
மண் என்பது, உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான முக்கிய அங்கமாக விளங்குகிறது. முக்கியத்துவம் வாய்ந்த மண்ணின் வளத்தை சமீப காலமாக அழித்துக்கொண்டு வருகிறோம்; மண்ணின் வளத்தை பாழாக்கி அதை மலடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.விவசாயத்தில், பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மண்ணிலுள்ள வளங்களை முழுமையாக பாதிக்கிறது. மண்ணிலுள்ள சத்துக்கள் குறைந்து, நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமின்றி, மண் மலட்டுத் தன்மையை பெறுகிறது. மண் வளம் குறைவதால் வேளாண்துறை அதிகாரிகள் மண்ணில், பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மாங்கனீஸ், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை அதிகரிக்கச் செய்ய பல வழிமுறைகளை விவசாயிகளிடையே புகுத்துகின்றனர்.ரசாயன உரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் பாலித்தீன் கவர்கள், மண்ணுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகிறது.
மண்ணில் மக்கிப்போகாமல் இருக்கும் பாலித்தீன் கழிவு, மழைநீரை மண்ணுக்குள் இறங்க விடாமல் தடுத்து, மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும் மாசடையச் செய்கிறது.இந்நிலையில், சொற்பமான அளவிலான விவசாயிகள், ரசாயன உரத்தை முற்றிலும் புறந்தள்ளி, மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மை பயக்கும், இயற்கை மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.
விவசாயிகளின் இந்த முயற்சி மண் வளத்தை காப்பதற்கான அச்சாரமாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் ரசாயன உரங்களையே பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் ரசாயன உரத்தின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை கைவிட வேண்டும்.
உலக மண் தினமாக இன்று, மண்ணை மலடாக்காமல், அதன் வளத்தை காக்க வேண்டுமென அனைவரும் உறுதியேற்று, மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில், ''விவசாயிகள் ரசாயன உரத்துக்கு பதிலாக அங்கக மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தினால், மண் வளத்தை காக்கலாம்; செலவும் குறையும். இயற்கை உரப்பயன்பாட்டால், மண்ணில் மண்புழு உள்ளிட்ட உயிரினங்கள், நுண்ணுயிர்கள் அழியாமல் மண் வளத்தை காக்கும்.மேலும், நைட்ரஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களுக்கு ரசாயன உரங்களை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதற்கு பதிலாக, நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை பயன்படுத்தினால், போதிய சத்துக்கள் கிடைக்கும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக