ஞாயிறு, 10 டிசம்பர், 2017

இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11 , 1969.



இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11 , 1969.

விஸ்வநாதன் ஆனந்த் ( Viswanathan Anand , பிறப்பு: டிசெம்பர் 11 , 1969 ,
மயிலாடுதுறை, இந்தியா ), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார் .

சதுரங்கமும் ஆனந்தும்
இந்திய சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் இந்திய சதுரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில்
1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி மின்னல் பையன் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை வாகையாளர் ( 1987 -இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே. விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
2008
இவர் முன்னாள் உலக வெற்றிவீரர்
விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
உலக சதுரங்க வாகையாளர் 2010
பல்கேரியாவின் தலைநகர் சோபியா உலகச் சதுரங்க வெற்றிவீரர்
பீடே உலக சதுரங்க வாகையாளர் 2000
வெல்வதற்கான வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த், இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற எசுப்பானிய வீரரை 3.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், 2002 -இல் நடந்த அரை இறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார்.
உலக சதுரங்க வாகையாளர் 2007
ஆனந்த் மெக்சிகோ நகரில் செப்டம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். செப்டம்பர் 29 ,
2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.
உலக சதுரங்க வாகையாளர் 2010
ஏப்ரல் - மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலோ வை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது.
உலக சதுரங்க வாகையாளர் 2012
உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின்
போரிசு கெல்பண்டை ( Boris Gelfand ) சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றார் .
உலக சதுரங்க வாகையாளர் 2013
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை எதிர்கொண்ட நார்வேயின் கார்ல்சனிடம் சாம்பியன்ஷிப் பட்டத்தை தோற்றார்.

உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்

அக்டோபர் 2003 இல் FIDE ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.
சதுரங்க பதக்கங்கள்
2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
2000 சதுரங்க வெற்றிவீரர்
1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்
1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்
1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்
1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்
விருதுகள்
அர்ஜுனா விருது - 1985
தேசியக் குடிமகனுக்கான விருது,
பத்மசிறீ விருது - (1987)
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ( 1991 - 1992 )
பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998.
பத்மபூஷண் (2000)
சதுரங்க ஆஸ்கார் - ( 1997 , 1998 , 2003, 2004, 2007, 2008)
பதும விபூசன் - 2007.


ஆனந்த்-40 – ஒரு ரசிகானுபவம்

 -லலிதா ராம்


விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்று (11, டிசம்பர்) 40 வயது! மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு 25-ஐ தாண்டி வயசாகி பல வருடங்கள் ஓடிவிட்டன என்றால் நம்பக் கஷ்டமாயிருப்பது போல, ஆனந்துக்கு வயசாகி விட்டதென்றாலும் நம்புவது கடினம். இதற்கு அர்த்தம், அவர்கள் உருவத்தில் இளைஞர்களாய் தெரிகிறார்கள் என்பதல்ல. என் சிறு வயது முதலே prodigy-ஆக இவர்களைப் பார்த்துப் பழகிவிட்டு,  திடீர் என்று இவர்களுக்கும் வயதாகிவிட்டது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கிறது. நண்பர் பிரகாஷ், சுஜாதா மறைந்த போது, “இவர் எல்லாம் செத்து போவார் என்று கனவில் கூட நினைக்கவில்லையே” என்று சொன்னது போலத்தான் இதுவும்.

பதினேழு வயதில் உலக ஜூனியர் சாம்பியன், பதினெட்டு வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமை என்று, 1980-களின் கடைசியிலிருந்து வெற்றிகளைக் குவிக்கத் துவங்கிய ஆனந்தால் சதுரங்கத்தின் பக்கம் உந்தப்பட்டோர் ஏராளம். சசிகிரண், ஹரிகிருஷ்ணா, ஹம்பி, நெகி என்று உலக அரங்கில் வெளுத்து வாங்கும் எண்ணற்ற இந்தியர்களின் ஆதர்ச புருஷர் ஆனந்த். எந்த அரங்கிலும் எதுவும் வாங்காத எனக்கும் ஆனந்த்தான் ஆதர்ச புருஷன். 1990-களில், இண்டர்நெட்டில் செஸ் ஆட்டங்களை நேரடியாகப் பார்க்க முடியாத காலங்களில் கூட பேப்பரில் வரும் ஆட்ட நகர்த்தல்களை மணிக்கணக்காய் வைத்துப் பார்த்த எண்ணற்ற பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன்.

1991-ல் காஸ்பரோவ், கார்போவ் இருவரும் (மற்றும் பலரும்) பங்கு பெற்ற போட்டியில் நிச்சயமான வெற்றியாளராக ஆனந்த் ஜெயித்ததிலிருந்து ஆனந்தின் ஒவ்வொரு ஆட்டத் தொடரையும் தவறாமல், புரிந்தும் புரியாமலும், தொடர்ந்து வருகிறேன். 18 வருடங்களில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்! அவர் ஜெயித்தபோது மகிழ்ந்து, தோற்றபோது துவண்ட கணங்கள் கணக்கிலடங்கா. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் துவளாமல் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் ஆனந்தின் வாழ்க்கையில் சதுரங்கத்தைத் தாண்டியும் படிப்பினைகள் உண்டு.

young-anand1எட்டு வயதிலிருந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆனந்தின் முதல் செஸ் குரு அவரது தாய் சுசீலா. இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறிய ஆனந்த், “எனக்கு ஆறு வயதான போது என் அம்மா சதுரங்கம் ஆடச் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அந்த ஆட்டம் நன்றாக வருவதை உணர்ந்த்தும், தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். கொஞ்ச நாளில், என் அப்பாவின் பணி நிமித்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சில வருடங்கள் தங்க நேர்ந்தது. அப்போதுதான் பிலிப்பைன்ஸில் ‘Karpov-Korchnoi’ சாம்பியன்ஷிப் ஆட்டம் நடந்து முடிந்திருந்தது. அந்த ஆட்டம் நடந்த இடத்தை நாங்கள் சென்று பார்த்தோம். பின்னாளில் அங்குதான் எனக்கு உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்று நான் அப்போது உணரவில்லை. செஸ் அலை அப்போது அங்கு வீசிக் கொண்டிருந்தது. டிவி-யில் மத்தியான நேரத்தில் சதுரங்கப் புதிர்களை ஒளிபரப்புவார்கள். என் அம்மா அந்தப் புதிர்களைக் குறித்து வைத்துக் கொள்வார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், நானும் அம்மாவும் சேர்ந்து விடை கண்டுபிடிப்போம். சரியான விடை சொல்பவருக்கு ஒரு புத்தகம் வழங்குவார்கள். நாங்கள் பல முறை அந்தப் பரிசை வென்றோம். ஒரு நாள், என்னை போட்டி நடத்துபவர்கள் அழைத்து, எங்களிடம் இருக்கும் புத்தகங்களில் உனக்கு வேண்டியவற்றை எல்லாம் எடுத்துக் கொள். ஆனால், இனி போட்டியில் கலந்து கொள்ளாதே. வேறு யாராவது ஜெயிக்கவும் வாய்ப்பு கொடு என்றனர்.”, என்று நினைவு கூர்கிறார்.

தனது பத்தாவது வயதில் இந்தியா திரும்பிய ஆனந்தின் சதுரங்கப் பசிக்கு ‘Tal Chess Club’ தீனி போட்டது. Blitz எனப்படும் வேகமாக விளையாடக்கூடிய ஆட்டங்கள் அங்கு நடை பெற்றன. ஐந்து நிமிடத்துக்குள் ஒரு ஆட்டம் முடிந்து விடும். அந்த கிளப்பின் வழக்கப்படி ஜெயித்தவர் தொடர்ந்து ஆடலாம். பத்து வயது சிறுவனிடம் ஒருவர் மாற்றி ஒருவர் தோல்வியைத் தழுவுவது வழக்கமானது. ஆனந்தின் ஆட்டத்தில் முக்கியமான அம்சம் அவரது வேகம். நொடிப் பொழுதில் காய்களை நகர்த்தும் சாமர்த்தியம், அவர் இள வயதில் ஆடிய Blitz ஆட்டங்கள் மூலமே கிடைத்ததென்று ஆனந்த் கூறியுள்ளார்.

1983 நடந்த தேசிய அளவில் நடந்த போட்டியில், சப்-ஜூனியர் பிரிவில் ஆடிய ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றியைப் பெற்று பட்டத்தை வென்றதன் பின், International Master பட்டம், தேசிய சாம்பியன் பட்டம் (மூன்று முறை) என்று அடுத்தடுத்து பல வெற்றிகள். Manuel Aaron, Max Euwe என்ற கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்ததே இந்தியாவின் அதிக பட்ச சாதனையாக இருந்த காலகட்டமது. “கிராண்ட்மாஸ்டர் ஆவதில் உள்ள கஷ்டங்கள் நமக்குத் தெரியும் சமயத்தில், நாம் ஒரு கிராண்ட்மாஸ்டரை எதிர்த்து விளையாடும் போது அவர்களை ஒரு பிரமிப்போடு பார்க்கிறோம். அதனாலேயே ஒரு மனத்தடை உருவாகிவிடுவதுண்டு”, என்கிறார் ஆனந்த். 1985-ல் Mestel என்ற கிராண்மாஸ்டரை வென்றபின், வரிசையாகப் பல கிராண்ட்மாஸ்டர்கள் ஆனந்தின் சூராவளி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்தனர். இந்தியா கிராண்ட்மாஸ்டரையே பார்த்திராத வேளையில் ஆனந்தின் வெற்றிகள் நம்பிக்கையளித்தன. கல்கத்தாவில் ஒரு முறையும், லண்டனில் ஒரு முறையும், கடைசி ஆட்டத்தை வென்றால் தகுதிக்குத் தேவையான புள்ளிகள் கிடைக்கும் என்ற நிலையில், அரைப் புள்ளி வித்தியாசத்தில் கிராண்ட்மாஸ்டர் தகுதி கிடைக்காமல் போனது. 1987-ல் பிலிப்பைன்ஸில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றபோது, சர்வதேச சதுரங்க உலகம் அவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. ஸ்பாஸ்கி, கார்போவ், காஸ்பரோவ் போன்ற உலக சாம்பியன்கள் எல்லாம் ஒரு காலத்தில் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடம், தன் பதினெட்டாவது வயதில் பத்மஸ்ரீ விருதினை ஆனந்த் பெற்றார்.

உலக செஸ் என்றாலே ரஷ்யாதான் என்ற நிலை பத்து வருடங்களுக்கு முன் வரை கூட இருந்தது. கார்ல்ஸன், டொபலோவ், ஆனந்த் என்று ரஷ்யர் அல்லாதவர் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருக்கும் இந்நாளில் கூட ரஷ்யா ஒரு வலுவான செஸ் நாடாகத்தான் திகழ்கிறது. இள வயதிலேயே திறமை வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி தரக்கூடிய நல்லதொரு அமைப்பு ரஷ்யாவில் இருந்தது. கார்போவ், காஸ்பரோவ், கிராம்னிக் போன்ற சாம்பியன்கள் எல்லாம் போட்வினிக் ஸ்கூலில் இருந்து வந்தவர்களே. இன்று 17 வயதுக்குள் கார்ல்சனைப் போன்றவர்கள் ரஷ்யாவிலிருந்து வராத போதும், சதுரங்க உலகைக் கோலாச்சவில்லையா என்று கேட்கலாம். அதற்கான பதில், இன்று இருக்கும் கணினியும், இணையமும் அன்றிருக்கவில்லை. சக்தி வாய்ந்த கம்ப்யூடர் எஞ்சின்கள், எண்ணற்ற ஆட்டங்களின் திரட்டல்கள் என்று விரல் சொடுக்கும் நேரத்தில் கணினி கொடுக்கும் விவரங்கள் குவிந்து கிடக்கும் இந்நாளில் ரஷ்யரல்லாத ஒருவர் முன்னணி ஆட்டக்காரராக இருப்பது ஆச்சரியம் இல்லை. தகவல்கள் அதிகம் கிடைக்காத சமயத்தில், ரஷ்யாவில் சாம்பியன்களிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் வசமே சதுரங்கப் பட்டம் நிலைத்து நின்றது. ரஷ்யரல்லாத ஒரே சாம்பியன், அந்தக் காலத்தில் பாபி ஃபிஷர்தான். அவரும் கூட அமெரிக்கா போன்ற ஒரு பணக்கார நாட்டிலிருந்து வந்தவர்.

இந்தியாவில் பிறக்காமல் ரஷ்யாவில் பிறந்திருந்தால் ஆனந்த் என்னவாகியிருப்பார்? அதற்கு ஆனந்த் கூறிய பதில்:

“சோவியத் யூனியனில் வளர்ந்திருந்தால், நான் வேறு விதமாக வளர்ந்திருப்பேன். பயிற்சிக்கான வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்தியனாக இருந்ததில் பல சாதகங்கள் இருந்தன. எட்டாவது சிறந்த ரஷ்யன் என்னைவிட நல்ல பயிற்சியைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால், அவனுக்குப் பெரிய போட்டிகளில் விளையாட அழைப்பு கிடைக்க அவன் முதல் மூன்று இடங்களுக்குள்ளாகவாவது வர வேண்டியிருக்கும். அந்த அளவு பயிற்சி இல்லாத போதும், நான் ‘சிறந்த இந்தியன்’ என்பதாலேயே எனக்குப் பல போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை நான் சரி வரப் பயன்படுத்திக் கொண்டேன்.”

சில புத்தகங்களையும், Tal club-ல் விளயாடக் கிடைக்கும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் வளர்ந்த சிறுவன் உலக ஜூனியர் பட்டம் வெல்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை, அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும் போது உணர முடியும். 1991-க்கு முற்பட்ட இந்தியாவில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவத்தை பின்வருமாறு ஆனந்த் ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தேவையான அன்னியச் செலாவணியை வாங்க முதலில் டில்லிக்குச் சென்று விளையாட்டி அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்குப் பின், Civil aviation ministry-க்குச் சென்றால், அவர்கள் ஏர் இண்டியாவில் டிக்கெட் கொடுப்பார்கள். அந்த டிக்கெட் இருந்தால்தான் அன்னியச் செலாவணியைப் பெற முடியும். அதை வாங்க டில்லியில் ஒரு ஸ்டேட் பாங்க் கிளையும், ஒரு தாமஸ் குக் கிளையும் இருந்தன.  ஏர் இண்டியா டிக்கட் மாலை ஐந்து மணிக்குத்தான் கிடைக்கும். அதற்குள் SBI மூடிவிடும். அதனால் தாம்ஸ் குக் செல்வோம். அன்னியச் செலாவணியைப் பெறவே இரவு 9 மணி ஆகிவிடும். இரவு 11 மணிக்கு விமானம் ஏற வேண்டியிருக்கும். சென்னையிலிருந்து கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட, டில்லி சென்று ஒப்புதல் பெற்றுதான் ஸ்ரீலங்கா செல்ல முடியும். சில சமயங்களில் அமைச்சகங்களிலிருந்து வர வேண்டிய ஒப்புதலில் நிகழ்ந்த தாமதங்களால், போட்டிகள் தொடங்கிய பின் கூடச் சென்று விளையாடியிருக்கிறேன்.”

1987 உலக ஜூனியர் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே, டில்லியிலும் கோயம்பத்தூரிலும் வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் தகுதியையும் ஆனந்த் பெற்றார். அதன்பின் எண்ணற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்று, லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பை முடிக்கும் போது உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருந்தார். உலக அளவில் ஆடும் போதும், பயங்கர வேகத்தில் காய்களை நகர்த்திய ஆனந்தை ‘Tiger from Madras’ என்றழைத்தனர். 1991-ல் அறிமுகமான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற பெருமையும் ஆனந்தை வந்தடைந்தது.

அப்போது செஸ் உலகு, Fide, PCA என்ற இரு அமைப்புகளாக பிளவுண்டிருந்தது. ஒரு பக்கம் கார்போவ் சாம்பியன். மறு பக்கம் காஸ்பரோவ் சாம்பியன். இவர்களை எதிர்த்து விளையாட இரு அமைப்புகளும் தகுதிச் சுற்றுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தன. 1994-ல் FIDE cycle-ன் காலிறுதிப் போட்டியில் காம்ஸ்கியை எதிர்த்து விளையாடினார் ஆனந்த். இந்தியாவில் நடந்த அந்த ஆட்டத்தில், மளமளவென வெற்றிகளைக் குவித்தார். அவர் பெற்ற வெற்றிகளே அவருக்கு எமனாகின. காம்ஸ்கியை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இருக்கும் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதுமான நிலையில், ரொம்பவே தற்காப்பாக ஆடியதால் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது. வெற்றியின் விளிம்பிலிருந்த ஆனந்த், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஆட்டத்தை இழந்தார்.

anand-kasparov1995-ல் PCA Cycle-லிலும் ஆனந்தும் காம்ஸ்கியும் பல வெற்றிகளைக் குவித்தனர். Candidates இறுதிப்போட்டி ஆனந்துக்கும் காம்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்டது. இம்முறை ஆனந்த் சுலபமாக வென்று, உலக சாம்பியன் பட்டத்துக்காக காஸ்பரோவுடன் மோதினார். நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நடை பெற்ற அந்தப் போட்டியில் முதல் எட்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஒன்பதாவது ஆட்டத்தை ஆனந்த் வென்ற போதும், அடுத்த ஐந்து ஆட்டங்களில் நான்கைத் தோற்றார். 10.5-7.5 என்ற வித்தியாசத்தில் காஸ்பரோவ் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனந்தின் சதுரங்க வாழ்வின் மிகப் பெரிய சறுக்கல் என்றே அதைக் கூற வேண்டும். “சில ஆட்டங்களில் நான் நன்றாக விளையாடவில்லை. ஆனால் இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிடவில்லை”, என்று ஆனந்த் சொன்னதை, என்னைப் போன்ற தீவிர ஆனந்த் ரசிகர்கள்தான் நம்பியிருக்கக் கூடும்.  ஆனால், சொன்ன படியே செய்து காட்டி உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக 1996-ல் இடம் பிடித்தார்.

1997-ல் ஆனந்தின் ஏறுமுகம் மீண்டும் தொடங்கியது. பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிக் கொண்ட போதும், உலக சாம்பியன் என்ற பட்டம் பெற ஆனந்த் 2000 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 2000-ல், தெஹரானில் நடந்த இறுதிப் போட்டியில் 3.5-0.5 என்ற வித்தியாசத்தில் ஷிரோவை வென்றதன் மூலம் உலக சாம்பியன் ஆனார். ஒரு உலக சாம்பியன் கிடைத்துவிட்டதை எண்ணி இந்தியா மகிழ்ந்திருந்த போதிலும், ‘Knock-out’ முறையில் நடத்தப்பட்ட போட்டியை, ஏற்காத பலரும் இருந்தனர். ”128 பேரில் ஆரம்பித்து, கடைசியில் ஒருவர் ஜெயிப்பதை விட, இருவர் பல ஆட்டங்கள் விளையாடி, கடைசியில் ஒருவர் ஜெயிக்கும் முறையில்தான் அனைத்து பெயர் பெற்ற சாம்பியன்களும் பட்டத்தை வென்றிருக்கின்றனர். அப்படி ஜெயிக்காத ஒருவர் உண்மையான சாம்பியன் ஆக முடியாது. காலிஃப்மென், பொனோமரியோவ் போன்ற FIDE knock out சாம்பியன்கள் வரிசையில் ‘also ran’-ஆகத்தான் ஆனந்தைக் கொள்ள முடியும்.” என்ற வாதமும் அப்போது பரவி இருந்தது. குறிப்பாக, அப்போது நம்பர் 1-ஆக இருந்த காஸ்பரோவை எதிர்த்து விளையாடாமல் ஆனந்த் பெற்ற வெற்றியின் மூலம் அவரை சாம்பியனாகக் கொள்ள முடியாது என்ற வாதமும் வலுவாக இருந்தது. இவற்றை எல்லாம் ஆனந்த் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஜெயித்த போதும் தோற்ற போதும் சலனமில்லாமல் இருப்பதே ஆனந்தின் நெடுநாள் வெற்றிக்கு முக்கிய காரணம்.

2002-ல் FIDE champion பட்டத்தை இழந்த பிறகு, Classical Chess-ல்fide-champion ஆனந்துக்கு அவ்வப்போது சறுக்கல்கள் ஏற்பட்ட போதும், Rapid Chess-ல் முடிசூடா மன்னன் இவர்தான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் போல், சதுரங்கத்தில், Dortmund, Linares மற்றும் Corus Tournaments-ஐ கொள்ளலாம். இந்த மூன்று போட்டிகளையும் மூன்று முறையாவது வென்ற பெருமை ஆனந்தைச் சேரும். 64 என்ற சதுரங்கப் பத்திரிகை அளிக்கும் செஸ் ஆஸ்கர் என்ற விருது, உலக ஆட்டக்காரர்கள், செஸ் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் வழங்கப் படும் விருது. 1997-ல் தொடங்கி, இந்த விருதினை ஆறு முறை பெற்ற ரஷ்யரல்லாதவர் ஆனந்த் ஒருவர்தான். (காஸ்பரோவும் கார்போவும் ஆனந்தை விட அதிக முறை இந்த விருதினைப் பெற்றவர்கள்.)  2000-ல் பத்ம பூஷண் விருதும் அவருக்குக் கிடைத்தது.

ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும். இப்படிப்பட்ட விபரீதமான முறையில் விளையாடிய போதும், பல வெற்றிகளைக் குவித்ததோடன்றி, எதிர்த்து விளையாடுபவரின் complicated home preparation-ஐ கூட துல்லியமாக defend செய்யக் கூடிய ஆனந்தின் ஆற்றல் வியப்பானது!

கணினியின் வருகை சதுரங்க உலகையே கலக்கிப் போட்டது. ‘Deep Blue’ என்ற செஸ் கணினியிடம் காஸ்பரோவ் தோற்ற போது பெரும் அதிர்ச்சி அலை எழும்பியது. காலப்போக்கில் கணினியின் பயனை வீரர்கள் உணர ஆரம்பித்தனர். கணினி இல்லாத காலத்தில் தொடங்கினாலும், வலிமை வாய்ந்த கணினிகள் துணை கொண்டு ஆய்வுகள் புரியக் கூடிய காலத்திற்கு ஏற்ப, தன் ஆட்டத்தை ஆனந்த் மாற்றிக் கொண்டது தனிச் சிறப்பு. காஸ்பரோவ் அறிமுகம் செய்த ‘Advanced Chess’ என்ற வகை ஆட்டத்தில், போட்டியின் போதே கணினியின் உதவியை நாடலாம். இந்த வகை ஆட்டம் நடை பெறும் Leon Tournament-ஐ பல முறை வென்ற பெருமையும் ஆனந்தைச் சாரும்.

2007-ல் Linares போட்டியை வென்ற போது, உலக தர வரிசையில் ஆனந்த் முதல் இடத்தைப் பெற்றார். ELO Rating-ல் 2800 புள்ளிகளைத் தாண்டியுள்ள சொற்பமானவர்களில் ஆனந்தும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. அந்த வருடம் அவருக்கு ‘பத்ம விபூஷண்’ அளித்ததன் மூலம் ஜனாதிபதி பெருமை தேடிக் கொண்டார்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். அப்போது ஒவ்வொரு ஆட்டத்தையும் இரவு எவ்வளவு நேரமானாலும் இணையத்தின் வழி ரசித்த எண்ணற்ற சதுரங்க ரசிகர்களுள் நானும் ஒருவன்.

மீண்டும், இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக்  சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார்.  மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா?  என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.


ஆனந்த் - க்ராம்னிக் 'Final Handshake'

இம்முறை யாராலும் அவரது பட்டத்தைக் குறை சொல்ல முடியவில்லை. “மேதை என்றால் மனப்பிறழ்வு  (eccentricity) இருக்க வேண்டும். நல்ல ஆட்டக்காரர் என்றால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டும்”, என்பவை செஸ் உலகின் நிதர்சன நியதிகள். இது வரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக் கொள்ளாத ஆனந்த், “Nice guys always come second”, என்பதைத் தன் விடாமுயற்சியால் பொய்யாக்கியவர்.

“Knock out format”, “Tournament Format”, “Match Format” ஆகிய மூன்றிலும் வெற்றி வாகை சூடிய ஒரே சாம்பியன் ஆனந்த்தான்.

நாற்பது வயதைத் தாண்டியும் விளையாடிக் கொண்டிருந்த இவான்சுக்கும் சில வாரங்கள் முன் தன் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், தன்னை விட பாதி வயதானவர்கள் பலருடன் இன்னும் உற்சாகமாய்ப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார் ஆனந்த். தரவரிசையில் முதல் பத்து இடங்களில் மூத்தவர் ஆனந்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் பல்கேரியாவைச் சேர்ந்த டொபலோவுடன், தன் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மோதுகிறார்.

1996-ல் தொடங்கி இன்று வரை (2008-ல் சில மாதங்கள் தவிர) உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக இருக்கும் ஆனந்த் வாழும் போதே நானும் வாழ்ந்து, அவர் ஆட்டங்களை ரசிக்கக் கொடுத்து வைத்திருப்பது எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக