ஞாயிறு, 3 டிசம்பர், 2017

முன்னாள் குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமன் ( Ramaswamy Venkataraman ), பிறந்த தினம் டிசம்பர் 2 , 1910 .



முன்னாள் குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமன் ( Ramaswamy Venkataraman ),  பிறந்த தினம் டிசம்பர் 2 , 1910 .

இரா. வெங்கட்ராமன் ( Ramaswamy Venkataraman ), ( டிசம்பர் 2 , 1910 - ஜனவரி 27 ,
2009 ) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை , பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர். பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் . அதற்கு முன் நான்கு ஆண்டுகள்
துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.
வாழ்வும்,தொழிலும்
இவர் 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் இராமசாமி ஐயர். பள்ளிப்படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின் உயர் கல்விக்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளர். தொழிலாளர் சட்டத்தில் புலமை பெற்றவர். தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.

அரசியல் வாழ்க்கை

இவர் விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டவர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூரில் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள்,உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கம் அமைத்தவர். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டவர். 1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை.

வகித்த பதவிகள்

நாடாளுமன்ற காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயலாளர்
ஆவடி காங்கிரஸ் மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர்
திட்டக்குழுவில் தொழில் துறை, தொழிலாளர் நலன், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ரயில்வே ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.
நடுவண் நிதியமைச்சர்.(1980-82)
பாதுகாப்பு அமைச்சர் (1982-84)
குடியரசுத் துணைத்தலைவர் (1984)
குடியரசுத் தலைவர் 1987-1992
நோய் மற்றும் மரணம்
2009 சனவரி 12இல், வெங்கட்ராமன் உடல் திசுக்களில் சிறுநீர் கசிவு பிரச்சினையின் காரணமாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 சனவரி 2009 அன்று குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் ஈ.கோலை பாக்டீரியத் தொற்றினால் அவரது உடல்நிலை பாதிப்படைந்தது.
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசு நாளுக்கு மறுநாள் 2009 சனவரி 27 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் தனது 98ஆவது அகவையில் புது தில்லி இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் காலமானார். இவரது மரணத்தின் காரணமாக, முன்பே திட்டமிடப்பட்டிருந்த இந்தியக் குடியரசு நாளுக்கான சில கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இவரது உடல் ராஜ்காட்டிற்கு அருகில் ஏக்தா சிதாலில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக