கொடி நாள் டிசம்பர் 07.
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.
இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.
இந்திய தேசியக் கொடி! சில நினைவுகள்
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா முதன்முதலாக இந்தியாவிற்கான தேசியக்கொடியை உருவாக்க முயற்சித்தார். சகோதரி நிவேதிதா உருவாக்கிய கொடியில் சிவப்பும், மஞ்சள் நிறமும் இருந்தன. சிவப்பு நிறப் பின்னணியில் 108 ஜோதிகள் இருந்தன. மஞ்சள் நிறத்தில் வஜ்ராயுதம் ஒன்றும், கொடியின் இரு புறங்களில் ஒரு பகுதியில் ‘வந்தே’ என்ற சொல்லும் இன்னொரு புறத்தில் ‘மாதரம்’ என்ற சொல்லும் வங்க மொழியில் எழுதப்பட்டிருந்தன. இதுதான் இந்திய தேசியக் கொடி உருவானதற்கான ஆரம்ப கட்டம்.
வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்த காலகட்டத்தில் 1906ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மூவர்ணக்கொடி ஒன்று ஏற்றப்பட்டது. இதில், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் பட்டைகள் இருந்தன. பச்சைப்பட்டையில் இதழ் விரிந்த தாமரைப் பூக்கள் எட்டும், மஞ்சள் பட்டையில் ஊதா வண்ணத்தில் எழுதப்பட்ட ‘வந்தே மாதரம்’ என்ற எழுத்துக்களும் இருந்தன.
கீழே இருந்த சிவப்புப் பட்டையில் வெள்ளை நிறத்தில் சூரியனும், சந்திரனும் சித்தரிக்கப்பட்டிருந்தன. சச்சிந்திர பிரசாத் போஸ், சுகுமார் மித்ரா ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்தக் கொடியை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டதுடன் அந்தக் கொடியின் பயன்பாடும் முடிந்துவிட்டது.
1907ம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாலகங்காதர திலகரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்திய மக்களுக்கான ஒரு கொடி தேவை என்பதை பல தேசியவாதிகள் உணர ஆரம்பித்தனர். அவ்வகையில் பிகாஜி ருஸ்தம் காமா (Bikaji Rustum Cama) என்ற பெண்மணி, இந்தியர்களுக்கான பொதுவான கொடி ஒன்றை உருவாக்க விரும்பினார். பம்பாயில் வாழ்ந்த இவர், சுதந்திரப் போரில் பங்குகொள்ள தேசாபிமானிகளைச் சந்தித்தார்.
தன் உடல்நிலை காரணமாக லண்டன் சென்ற பிகாஜி காமா அங்கேயே தங்கிவிட்டார். ஆனால், இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெளிநாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு தேசியக்கொடி ஒன்றைத் தயாரித்தார், பிகாஜி காமா அம்மையார். வெளிநாட்டில் இருந்து கொண்டு, மற்ற அந்நிய நாடுகளில் தான் தயாரித்த இந்தியக் கொடியை ஏற்றிய பெருமை அவரையே சாரும். பிகாஜி காமா உருவாக்கிய கொடி, வண்ணங்களில் பட்டைகளாக இருந்தது. பச்சை, பொன்னிறக்காவி மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் அவை இருந்தன.
இஸ்லாமியர்களின் புனித வண்ணமான பச்சை மற்றும் இந்துக்களுக்கு புனித நிறமான காவி மற்றும் சிவப்பு ஆகியவற்றை தனது கொடியில் காமா அம்மையார் வடிவமைத் திருந்தார். பச்சை வண்ணப்பட்டையில் இந்தியாவின் எட்டு மாகாணங்களைக் குறிப்பிடும் வகையில் எட்டு தாமரைகள் வரையப்பட்டு இருந்தன. நடுவில் இருந்த பொன்னிறக் காவிப்பட்டையில் ‘வந்தே மாதரம்’ என்ற சொல் இருந்தது. கீழே இருந்த சிவப்புப் பட்டையில் சூரியன் கொடி பறக்கும் பகுதியிலும், பிறைச் சந்திரன் கம்பப் பகுதியும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது.
காமா அம்மையார் ஆலோசனைப்படி ஹேமசந்திரதாஸ் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் இந்தக் கொடியை வடிவமைத்தார். காமா அம்மையார், தயாரித்த கொடியை உலக நாடுகள் அறியச் செய்யவும், இந்திய மக்களின் சுதந்திர வேட்கையை உணர்த்தவும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். 1907ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் நாள் ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் என்னும் இடத்தில் இரண்டாவது சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிகாஜி காமா அம்மையார் தான் தயாரித்த மூவர்ணக் கொடியை ஏற்றி, ‘‘இதுதான் இந்தியாவின் தேசியக் கொடி’’ என்று வீர முழக்கமிட்டார்.
1935ம் ஆண்டு உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த பிகாஜி காமா, தான் தயாரித்த இந்திய தேசியக் கொடி எப்பொழுதும் பறந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆகவே, பாரீஸில் இருந்து அந்தக் கொடி இந்திய தேசாபிமானி ஒருவரால் கடத்திக் கொண்டுவரப்பட்டது. (ஏனெனில், ஆங்கிலேய அரசு இந்தக் கொடியை இந்தியாவிற்குள் அனுமதிக்கவில்லை.) ஆங்கிலேய அரசுக்குத் தெரியாமல் கொண்டு வரப்பட்ட அந்தக் கொடியை 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் புனாவில் வீர் சவார்க்கர் ஏற்றினார்.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் மிக முக்கியமான நாளாக இருந்தது. ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துள்ளதை அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு அறிவித்த நாள். இதைத் தொடர்ந்து எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்புடையதான கொடி ஒன்று அவசியம் என்பதைத் தலைவர்கள் உணர்ந்தனர். அனைவருக்கும் ஏற்புடையதான தேசியக் கொடி ஒன்றை உருவாக்க, ஜூன் 23ம் நாள் கொடிக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
இக்கமிட்டிக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைவர். ராஜாஜி, டாக்டர் அம்பேத்கர், சரோஜினி நாயுடு போன்ற பல தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் 14ம் நாள் அந்தக் கமிட்டி தனது பரிந்துரைகளை அளித்தது. அதன்படி காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் பட்டைகள் நெடுக்குவாட்டில் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்றும், நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் அசோகச் சக்கரம் இருக்க வேண்டும் என்றும் அக்கமிட்டி கூறியது. கொடியின் மாதிரி வடிவம் ஒன்று தயாரிக்கப்பட்டு 1947ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் நாள் அரசியல் சட்ட நிர்ணய சபையின் முன் அதன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
1947 ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் நள்ளிரவு இந்தியாவின் புதிய அரசு பதவியேற்றது. இது, வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் தங்கியிருந்த மாளிகையில் நடைபெற்றது. அங்கிருந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மறுநாள் ஆகஸ்ட் 15. டெல்லியில் உள்ள செங்கோட்டைக் கொத்தளத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
மிக உயர்ந்த தேசியக் கொடி !
முதல் முதலாக...
ஆகஸ்டு7,1906-ம் தேதி, கல்கத்தாவில் உள்ள பார்சி பகன் ஸ்கொயர் என்னும் பூங்காவில் தான் முதன் முதலாக, இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
மற்ற கொடிகள் எதற்கு?
1971-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் சமஸ்தான கொடிகள் அனைத்தையும் கைவிடுமாறு அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லா கொடிகளும் நடைமுறையிலிருந்து மறைந்தன. அரசியல் சட்டம் 370-ன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் தேசியக் கொடியுடன் அம்மாநில கொடியும் பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
பிற நாட்டு கொடிகள்!
இந்திய தேசியக் கொடியை பிற நாட்டுக் கொடிகளுடன் ஏற்றினால், முதலில் இந்திய தேசியக் கொடியை உயர்த்தி கடைசியில் தான், கீழே இறக்க வேண்டும். பிறநாட்டு கொடிகள் பறக்கும்போது இந்திய தேசிய கொடியை எக்காரணம் கொண்டும் கீழே இறக்கக்கூடாது.
ஏழு வரும் பறந்த அன்னிய கொடி!
லட்சத்தீவுகளும், மினிக்காய் தீவுகளும் இந்தியாவை சேர்ந்தவை.அங்குள்ள கலங்கரை விளக்கத்தில் 1954-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்தது. அங்கு உள்ளவர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற தகவல் இதுவரை தெரியாமல் இருந்ததே, இதற்கு காரணம்.
கொடிக்கான நிர்ணயங்கள்!
நமது தேசியக்கொடி ஜூலை 22, 1947-ல் நிர்ணயிக்கப்பட்டு, ஆகஸ்டு 14, 1947 நள்ளிரவில் கூடிய சபையில் வழங்கப்பட்டது. தேசியக் கொடியானது, இந்தியத் தர நிர்ணய கழகம் நிர்ணயித்திருக்கிற தரங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். தேசியக் கொடியை பொதுக்கூட்டங்களில் பறக்க விடுவாதல், பருவ நிலை எப்படி இருந்தாலும் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை, அது பறந்து கொண்டிருக்க வேண்டும். தேசியக் கொடியை ஏற்றும் போது விரைவாக ஏற்ற வேண்டும். இறக்கும்போது மெதுவாக இறக்க வேண்டும். ஊர்வலம் அல்லது அணி வகுப்பில் கொடியை ஏந்தி செல்லும்போது வலது பக்கத்தில் ஏந்தி செல்ல வேண்டும்.
கொடியை பணிவோம், புகழ்வோம்!
தாயின் மணிக்கொடி பாரீர்; அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்று, மகாகவி பாரதியார் பாடினார். அவரது அழைப்பு நமது கொடியை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு நம் சிந்தனையை தூண்டுகிறது. நாட்டு உணர்வே தேசியம் எனப்படும். நாட்டுணர்வை, புலப்படுத்தும் முறையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே கொடியும், சின்னமும், மலரும், விலங்கும், பறவையும், குறிக்கோளும் உள்ளன. நமது பாரதப் பெருநாட்டின் தேசிய கொடி மூவண்ணங்களால் அமைந்தது.
கொடியின் அமைப்பு!
நமது தேசியக் கொடி மூன்று வண்ணங்களுடன் அமைந்தது. மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்டது. மூன்று வண்ணங்களும் சம அளவில் பட்டையாக நீளவாக்கில் அமைந்து இருக்கும். மேற்புறம் காவி நிறமும், இடையில் தூய வெண்மை நிறமும், அடியில் பசுமை நிறமும் அமைந்து இருக்கும். இடையில் உள்ள வெள்ளை நிறத்தின் நடுவில் அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும். கொடியின் மேற்பகுதியில் உள்ள காவி நிறம் நம் நாட்டின் விடுதலைக்காக தம் உடல், உயிர், உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூர்ந்து செய்ய வேண்டிய தியாகத்தை உணர்த்துகிறது. நடுவில் உள்ள வெள்ளை நிறம் தூய்மையை உணர்த்துகிறது. நாட்டு மக்கள் உள்ளத் தூய்மையும் வாய்மையும் பண்பாடும் ஒழுக்கமும் உடையவர்களாக திகழ வேண்டும், என்னும் கருத்தை விளக்கும் வகையில், வெண்மை நிறம் அமைந்துள்ளது. கீழே உள்ள பசுமை நிறம் நம் நாட்டின் வளத்தை உணர்த்துகிறது. நீர்வளமும், நீலவளமும், மலை வளமும், கடல் வளமும், தொழில் வளமும் நிறைந்து வறுமையற்ற நாடே உயர்ந்த நாடாகும். வளமற்ற நாட்டில் ஒழுக்கம் நிலவாது என்னும் உண்மையை உணர்த்தும் வகையிலேயே கீழ்ப்பகுதியில் பச்சை நிறம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தின் நடுவில் இருபத்து நான்கு தர்மங்களை குறிக்கும் வகையில் 24 ஆரங்களை கொண்ட அசோகச் சக்கரம் நீல நிறத்தில் அமைந்துள்ளது.அறம் நிறைந்த அரசாட்சியில் தான் தியாகமும் தூய்மையும் வளமும் நிலவும் என்னும் உண்மையை உணர்த்தும் வகையில், அறத்தின் சின்னமாகிய தர்மச் சக்கரம் நடுநாயகமாக அமைந்துள்ளது.
கொடியை போற்றுவோம்!
தேசியக்கொடியை எல்லா இடங்களிலும் பறக்க விடக்கூடாது. அரசு அலுவலங்களிலும், அமைச்சர்களின் இருப்பிடங்களிலும் மட்டுமே, பறக்கவிட வேண்டும். விடுதலை நாள், குடியரசு நாள் ஆகிய தேசிய விழா நாள்களில் மட்டுமே, பொது இடங்களில் கொடியை ஏற்றி பறக்க விடலாம்.காலையில் சூரியன் உதித்தவுடன் கொடியை ஏற்றி மாலையில் சூரியன் மறையும் முன், கொடியை இறக்கி விட வேண்டும். ஊர்வலத்தின் போது முன் வரிசையில் கொடியை வலதுத்தோள் பக்கமாக உயர்த்தி பிடித்து செல்ல வேண்டும். கொடியை ஏற்றும்போதும், இறக்கும்போதும் நாம் அசையாமல் நிமிர்ந்து நின்று, கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடக்கூடாது. அது துக்கத்தின் அடையாளம். தேசத் தலைவர்கள் மறைந்த நாள்களில் மட்டுமே, அரைக்கம்பத்தில் பறக்க விடலாம். மழையில் நனைய விடக்கூடாது. காற்றில் கிழிய விடக் கூடாது. கொடியை மேசை விரிப்பாகவோ, ஆடைகளில் நெய்தோ பயன்படுத்தக்கூடாது.
உயிரினும் மேலான கொடி!
அடிமை அரசாக இருந்த இந்தியா தானும் ஒரு விடுதலை அரசு என, தலை நிமிர்ந்தபடி நின்ற திருநாள்தான் குடியரசு தினமான ஜனவரி-26. குடியரசின் சின்னம் நாம் சுதந்திர மக்கள் உலகில் யாருக்கும் அடிமை அல்ல; என்பதின் சின்னம் நமது பெருமைக்குரிய தேசியக்கொடி. இந்தியர்களாகிய நாம், கொடி உணர்த்தும் தத்துவங்களை கருத்தில் கொண்டு இன்னுயிர் தந்தேனும் தேசியக்கொடியை காப்போம். நாட்டுப்பற்றை வளர்ப்போம். நாட்டின் வளம் பெருக உழைப்போம். நாட்டின் நலனுக்காக தியாகம் செய்வோம். அன்னை நாட்டை காப்போம். எந்நெந்த நிலையில் இருக்கிறோமோ, அந்தந்த நிலையில் மிக சிறப்பாய் பணி புரிவோம். எந்தெந்த நிலையில் இருக்கிறோமோ அந்தந்த நிலையிலிருந்து முன்னேறுவோம்.
வாழ்க தேசியக்கொடி! வாழ்க பாரதம்!
# Indian national flag
#இந்திய தேசியக் கொடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக