செவ்வாய், 5 டிசம்பர், 2017

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் டிசம்பர் 6, 1956.



இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்  டிசம்பர் 6, 1956.

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 14, 1891
இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா
பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்
இறப்பு: டிசம்பர் 6, 1956
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.
1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.
உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்
பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

சமூகப்பணிகள்

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”
இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்
வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.
விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.


பெளத்த சமயம் மீது பற்று

தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.
அம்பேத்கரின் பொன்மொழிகள்
“ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
“சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”

இறப்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.


அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

எ வன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்.
– டாக்டர் அம்பேத்கர்.

”அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது. காரல் மார்க்சுக்கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் குழந்தைகளை வறுமையின் காரணமாக பலி கொடுத்தவர்கள். அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு, ரூபாய் குறித்தது என்பதும் ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?.
ஆனால் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். முன்பே சொன்னதுபோல் காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, வரலாறு குறித்த புதிய பார்வைகளை உருவாக்கியது மனித குல வரலாற்றை வர்க்கங்களின் வரலாறாக வாசித்து, மக்கள் முன் அளித்தவர் மார்க்ஸ். இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அம்பேத்கர்.

அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார். ''உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனிதனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது” என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.
“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார். இத்தகைய இழிநிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
''மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாய் இருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்த அளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விஷயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்? பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள்” என்றார்.
எனவே கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார். ஆனால் அதே சமகாலத்தில் வாழ்ந்த காந்தி என்ற இன்னொரு ஆளுமையை எதிர்க்க வேண்டிய வரலாற்று அவசியம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் நிறைவேறியது. அதற்குப் பிறகு இறுதிவரை அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார். காந்தி மிகப்பெரிய புனித பிம்பமாக நிலைத்து நின்ற காலத்தில் அம்பேத்கர் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஏனென்றால் அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதாக இருந்தால், ''அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்”
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுவதற்கு அம்பேத்கர் நம்பிய சில வழிகள் கல்வி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், சமவாய்ப்புகளை உருவாக்குதல், மதமாற்றம் ஆகியன. அவர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னதில் உள்ள கல்வி என்பது வெறுமனே பொருளாதார ரீதியாக உயர்வதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் கல்வி மட்டுமில்லை. அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பதுதான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப்படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது.
பெண்களும் இப்படித்தான். “ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்” என்பதைப் பெரும்பாலான பெண்களே ஒப்புக்கொள்வதில்லை. இந்த வகையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்ட மசோதா’வில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸில் இருந்த சனாதனிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா நிறைவேறாமல் போனது. அம்பேத்கரும் பதவி விலகினார். பதவி விலகியபோது அம்பேத்கர் ஆற்றிய உரை, அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.
அம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.
அம்பேத்கரை நினைவு கூர்வது என்பது நம் மனசாட்சியை நாமே பரிசீலிப்பதுதான்.



அம்பேத்கர் தனது மக்களுக்காக மட்டுமின்றி, எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் சிந்தித்தார்.
- பி.ஏ. கிருஷ்ணன்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபைக்கு எதிராகவே முதலில் இருந்தார். கிரிப்ஸ் தலைமையில் 1942-ல் வந்த குழுவிடம் “எங்கள் கைகள், கால்களைக் கட்டி சாதி இந்துக்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள்” என்று முறையிட்ட அவர், இந்திய விடுதலை உறுதியானதும் தனது நாட்டுக்கும் தனது மக்களுக்கும் மிகச் சிறந்த அரசியல் அமைப்புச் சட்டம் தேவை என்பதை உடனடியாக உணர்ந்தார்.
எதிர்த்தரப்பில் இருப்பதாலேயே எல்லாவற்றையும் எதிர்க்கக் கூடாது என்ற கொள்கையில் திடமாக இருந்த அவர், நமது அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார் என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. வரைவுக் குழுவில் பல புகழ் பெற்ற சட்ட வல்லுநர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் அம்பேத்கரின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள்.
நிறைவேறாத கனவு
அவர் நினைத்ததெல்லாம் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆனால், அம்பேத்கர் தனது மக்களுக்காக மட்டுமின்றி, எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் சிந்தித்தார். அவர் அரசியல் நிர்ணய சபைக்கு விரிவான அடிப்படை உரிமைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்தார். அந்தப் பட்டியலுடன் ஒரு சமுதாயத் திட்டமும் இருந்தது. அந்தத் திட்டம் எல்லா முக்கியமான தொழில்களும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, நாட்டின் நிலங்கள் அனைத்தையும் அரசு எடுத்துக்கொண்டு, விவசாயத்தையும் அரசுத் தொழிலாக மாற்ற வேண்டும் என்றது.
எல்லா இந்தியர்களுக்கும் கட்டாயக் காப்புரிமை இருக்க வேண்டும் என்பதையும் அது சொன்னது. பல தடவைகள் அவரது திட்டத்தின் மீது விவாதங்கள் நடந்தன. ஆனால், அது நிறைவேறாத கனவாகவே முடிந்தது. இது போன்று பல தடைகளை அவர் சந்தித்தாலும், அரசியல் சட்டத்தின் பல முக்கியமான பிரிவுகள் அவரது திறமையான வாதங்களினாலேயே சட்டங்களாக மாறின.
அடிப்படை உரிமைகள்
நமக்குப் பல அடிப்படை உரிமைகள் இருக்கலாம். அவற்றை எவ்வாறு பாதுகாப்பது? அரசுக்கோ அரசு சார்ந்த நிறுவனங்களுக்கோ அவை செய்ய வேண்டிய காரியங்களை எழுத்து மூலம் செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. நமக்கு நன்றாகத் தெரிந்த ரிட் மனுக்களின் மீது நீதிமன்றங்கள் நாள்தோறும் ஆணை பிறப்பிக்கும் உரிமையை நமது அரசியல் அமைப்புச் சட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர்.
நீதிமன்றங்களுக்குத் தரப்பட்ட இந்த உரிமையே, இந்தியர்கள் இன்று சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்று பல அரசியல் சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், அம்பேத்கர் அடிப்படை உரிமைகளுக்கு வரையறை இருக்கக் கூடாது என்று கருதவில்லை. அரசு நெருக்கடிக் காலங்களில் இந்த உரிமைகளைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறலாம் என்ற சட்டத்தையும் அவர்தான் முன்னின்று கொண்டுவந்தார். இதே போன்று நாட்டு நலனுக்காக மக்களைக் கட்டாயப் பணி செய்யுமாறு (ராணுவப் பயிற்சி உள்ளிட்ட) ஆணை பிறப்பிக்கும் உரிமையை அரசுக்கு அளிக்கவும் அவர் முன்வந்தார். மக்களுக்கு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமையை அளிக்க வேண்டுமா என்பதுபற்றி பலத்த விவாதங்கள் நடந்தன. சிலர் இதுபற்றி முடிவு செய்யும் உரிமையை மாநிலங்களுக்கு விட்டுவிட வேண்டும் என்றனர்.
அம்பேத்கர் சொன்னார், “ஒரு மாநிலம் மறு மாநிலத்துக்கு எதிராக மக்களை ஆயுதம் திரட்டச் செய்தால் என்ன செய்வது? நாடு முழுவதும் இதுபற்றி ஒரே சட்டம் இருக்க வேண்டும்.” அமெரிக்காவில் சில மாநிலங்களில் இருப்பதைப் போன்று இந்தியாவிலும் ஆயுதம் வைத்துக்கொள்ளும் சட்டம் இருந்திருந்தால், வன்முறை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
இந்திய ஒருமைப்பாடு
இந்தியா ஒரு வலுவான நாடாக உருப்பெற வேண்டுமானால், அதிலிருந்து பிரிந்து போகும் உரிமையை மாநிலங்களுக்கு அளிக்கக் கூடாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். “ இந்தக் கூட்டமைப்பு (ஃபெடரேஷன்), மாநிலங்களெல்லாம் சேர்ந்து கூட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று ஒப்புதல் அளித்ததால் ஏற்பட்டதல்ல. எனவே, மாநிலங் களுக்குப் பிரிந்து போகும் உரிமை கிடையாது” என்று தனது உரையில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஒருமைப்பாட்டின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை, மற்றொரு சமயத்தில் ‘தேவைப்பட்டால், இந்தியா ஒற்றையாட்சி அரசாகக்கூட (யூனிட்டரி ஸ்டேட்) மாறலாம்” என்று அவர் குறிப்பிட்ட திலிருந்து அறியலாம்.
மற்றொரு தருணத்தில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர், விகிதாச்சார முறைப்படி பிரதிநிதித்துவம் வேண்டும், இல்லையென்றால் நடைபெறப்போவது பெரும் பான்மையினரின் அடக்குமுறை என்று வாதிட்டபோது, அம்பேத்கர் அது அரசைப் பலவீனப்படுத்திவிடும் என்றார். “இந்தியாவுக்குத் தேவை சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் ஒரு நிலையான அரசு” என்று அவர் சொன்னபோது, உறுப்பினர்கள் பலத்த ஆரவாரத்தோடு உடன்பட்டனர். ஆனால், சிறுபான்மையினரின் உரிமையைக் காப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
சிறுபான்மையினரின் உரிமையைப் பறிப்பது என்பது ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் அழிவுப்பாதை என்று கருதிய அவர், அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைச் சொல்லும் உறுப்புகளுக்கு (ஆர்ட்டிக்கில்ஸ்) முழு ஆதரவு அளித்தார்.
வலுவான மத்திய ஆட்சியை நம்பியதால், அவர் மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்க நினைத்தார் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதனுடைய எல்லைக்குள் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும் நல்லாட்சி அளிக்கவும் மாநிலத்துக்கு இறையாண்மை இருக்கிறது என்று அவர் சொன்னார். மத்திய அரசு, மாநில அரசு விவகாரங்களில் தலையிடுவது ‘மோசமான ஆக்கிரமிப்பு’ என்று குறிப்பிடவும் அவர் தயங்கவில்லை.
ஆட்சிமொழி
அரசியல் சட்ட நிர்ணய சபையில் இந்தி வெறியர்கள் பலர் இருந்தார்கள். இந்தியை உடனே தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவே அரசு மொழியாக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதை எதிர்த்தவர்களும் பலர் இருந்ததால் விவாதங்கள் மிகவும் சூடாக இருந்தன. சூட்டைத் தணித்தவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர். ஆட்சிமொழி இந்தியாக இருக்கும். ஆனால், முதல் 15 வருடங்கள் ஆங்கிலமும் தொடர்ந்து இயங்கும். நாடாளுமன்றம் விரும்பினால், ஆங்கிலம் மேலும் இயங்கலாம் என்ற அரசியல் சட்டம் அவரது வழிகாட்டலில் உருவானது.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்ததே அம்பேத்கர்தான். அதுவே, பின்னால் அரசியல் சட்டமாக மலர்ந்தது. ஆனால், அவர் குடியரசுத் தலைவருக்கு அளவற்ற அதிகாரங்களைத் தர விரும்பவில்லை. பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அறிவுரைகளை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இந்த நாட்டை உண்மையாக ஆள்பவர்கள் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்.
மாற்ற முடியாத அரசியல் சட்டமா?
இந்திய அரசியல் சட்டம் மிகவும் இறுக்கமானது, விரிவாக எழுதப்பட்டதால் மாற்றங்கள் செய்யக் கூடிய சாத்தியங்களை வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டை ஜென்னிங்க்ஸ் போன்ற அரசியல் சட்ட வல்லுநர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால், “விரிவாக எழுதப்படாவிட்டால் அதை மிக எளிதாக அரசினால் உள்ளறுப்புச் செய்ய முடியும்” என்று அம்பேத்கர் சொன்னார். அரசியல் சட்டத்தைத் திருத்துவதையும் எளிதாக்க அவர் விரும்பவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரப்போகும் நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமையை அளிக்க வேண்டும் என்று நேரு விரும்பினார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், அம்பேத்கர் சொன்னார் “அரசியல் அமைப்புச் சட்டம் ஓர் அடிப்படை ஆவணம். அதை நாடாளுமன்றம் பெரும்பான்மை பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திருத்த முடிந்தால் ஏற்படப்போவது பெரும் குழப்பம்.” இவ்வளவு தெளிவாக எழுதப்பட்ட பிறகும் இதுவரை நடைபெற்றிருக்கும் உள்ளறுப்பு வேலைகளை நாம் கவனித்தால் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் மகத்துவம் நமக்கு விளங்கும்.
அம்பேத்கர் தலித் மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி என்பது எல்லா மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாரதியின் வாக்கில் சொல்வதானால் அம்பேத்கரின் “எண்ணம் எலாம் நெய்யாக எம் உயிரின் உள் வளர்ந்த வண்ண விளக்கு.” அது ஒளி விட்டு எரியும் வரை அவர் புகழும் குன்றாது.
,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக