சனி, 16 டிசம்பர், 2017

உழவர்பெருந்தலைவர் ஐயா சி.நாராயணசாமி நாயுடு: நினைவு தினம் டிசம்பர் 21 .



உழவர்பெருந்தலைவர் ஐயா சி.நாராயணசாமி நாயுடு:  நினைவு தினம் டிசம்பர் 21 .

விவசாயிகளின் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு.

விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய தலைவர்கள் பலர். அவர்களில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த சி. நாராயணசாமி நாயுடு மிகவும் முக்கியமானவர். கோவைக்கு அருகில் உள்ள செங்காலிபாளையம் என்ற கிராமத்தில் 06.02.1925 அன்று பிறந்த நாராயணசாமி நாயுடு, பிறந்த 40 நாட்களிலேயே தாயை இழந்தார். தாயின் அரவணைப்பில்லாத வாழ்க்கையை இளமைக் காலத்தில் அனுபவித்த இவர், பள்ளிப் படிப்பை இடிகரை உயர்நிலைப் பள்ளியிலும், கோவை யூனியன் பள்ளியிலும் கற்றார்.

திருமணத்துக்குப் பிறகு விவசாயத்தில் ஈடுபட்ட நாராயணசாமி, ஒரு விவசாயியாக இருப்பது எவ்வளவு பெரிய போராட்டம் என்பதை உணர்ந்தார். 1950-களின் தொடக்கத்தில் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட இடர்களினாலும், அரசின் தொழிற்துறைக்கு ஆதரவான நிலைப்பாட்டாலும் விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு 16 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. நீர் பாய்ச்ச வழியின்றி பயிர்கள் வாடின. இதை எதிர்த்து 1957-ல் நாராயணசாமி நாயுடு கோவைப் பகுதி விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தியதோடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்துறை அமைச்சரைச் சந்தித்து விவசாயிகள் படும் துன்பத்தை விளக்கி, மீண்டும் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மின்சாரத்தைப் பாசனத்துக்குப் பெற்றுத்தந்தார். இதுதான் நாராயணசாமி நாயுடு நடத்திய முதல் வெற்றிப் போராட்டம்.

முழுநேர இயக்கப் பணி

அடுத்தடுத்து ஏற்பட்ட தந்தை மற்றும் மனைவியின் மரணம், தன் குடும்பப் பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு, விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டார் நாராயணசாமி நாயுடு. 1970-ல் அன்றைய தமிழக அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோவை ஜில்லா விவ சாயிகள் சங்கம் தொடர் போராட்டம் நடத்தியது. 1970-ம் ஆண்டு மே 9-ல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் கோவை நகரில் பேரணி நடத்தினார்கள். நகரம் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15-ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல் படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள். 15.04. 1972-க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடு விதித்தார்கள்.

மே 9-ல் மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் நுகரும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதே நோக்கம்.

மாட்டு வண்டிப் போராட்டம்

இதற்குப் பின்னும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972-ல் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி ‘மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த பல தலைவர்களில் நாராயணசாமி நாயுடுவும், டாக்டர் சிவசாமியும் குறிப்பிடத் தக்கவர்கள்.

போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.

தமிழக விவசாய சங்கத் தோற்றம்

இந்த வெற்றி நாராயணசாமி நாயுடுவை தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக உயர்த்தியது. தனது பேச்சு, தலைமைப் பண்பு, வாதத் திறமை, போராட்ட உத்திகளை நிர்மாணிப்பது, விவசாயிகளை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக ஒன்றுசேர்த்தல் போன்ற ஆற்றல்களால் பிரசித்தி பெற்றார். தனக்குக் கிடைத்த அங்கீகாரத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளின் மாநாடுகளை நடத்தினார். சாதி, மத பேதங்களைத் தாண்டி, தமிழக விவசாயிகள் அனைவரும் ஓரணியில் திரண்டதைப் பயன்படுத்தி, ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 13.11.1973-ல் தொடங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

உழவர் மற்றும் உழைப்பாளர் கட்சி

1982-ல் விவசாயிகளிடம் தீவிரக் கடன் வசூல் வேட்டையை அரசு நடத்தியது. எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தமிழகம் முழுவதும் காவல்துறையால் தாக்கப்பட்டார்கள். லட்சக் கணக்கான விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பொய் வழக்குகள் போடப்பட்டன. தமிழகத்தின் வாக்காளர்களில் பெரும்பான்மையினர் விவசாயிகள். எனவே, ஒட்டுமொத்த விவசாயிகள் ஒன்றுபட்டால் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற உணர்வு அவர்கள் மனதில் எழுந்தது. இதுகுறித்து 1982 மே மாதம் 20 முதல் 22-ம் தேதி வரை விவசாயத் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதித்தார்கள். விவாதத்தின் அடிப்படையில் 7.7. 1982-ல் இந்திய உழவர் மற்றும் உழைப்பாளர் கட்சி என்ற அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கட்சி, 1982 செப்டம்பரில் நடந்த பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும், 1984-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுப் பெரும் தோல்வியடைந்தது. தங்கள் துயர் துடைக்க ஒன்றுபட்டுப் போராடிய விவசாயிகள் சாதி, மதம், அரசியல் போன்றவற்றுக்கு மயங்கித் தங்கள் கட்சியையே தோற்கடித்தார்கள்.

இவ்வளவு பெரிய பிரளயத்தை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்திய நாராயணசாமி நாயுடு, கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, ஓய்வெடுத்த நிலையில் 21.12.1984-ல் மாரடைப்பால் மரணமடைந்தார். ஆனால், அவர் முன்வைத்த விவசாயிகளின் முன்னேற்றத்துக்கான கோரிக்கைகள் மட்டும் மறையாமல் அப்படியே இருந்தன. 1989-ல் விவசாயிகளுக்கான மின் கட்டணம் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டு இலவசமாக்கப்பட்டது. விவசாயிகளின் கடன்களும் ரத்துசெய்யப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை விவசாயிகள் தங்கள் பாசனத்துக்கு இலவச மின்சாரம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கியமான காரணம் நாராயணசாமி நாயுடுதான்.

*ஐயா நாராயணசாமிநாயுடு அவர்களால் ஈர்க்கபட்டு தனது பேராசிரியர் பணியை துறந்து அவரின் போர்படை தளபதியாக செயல்பட்ட நினைவில் வாழும் உழவர் இன காவலர் பேராசிரியர் N.S.பழனிச்சாமி MA Ex MLA அவர்களால் நிறுவபட்ட *கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்* மற்றும் *ஏர்முனை இளைஞர் அணி* *உழவர்களின் உரிமைக்காக இளைஞர் சக்தியை திரட்டி  நாயுடு அவர்களின் லட்சியத்தை அடைய போராடும் என உறுதியேற்கிறது*

தகவல் உதவி
சே.கணேஷ்ராம்

இவண்
*கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்*
&
*ஏர்முனை இளைஞர் அணி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக