திங்கள், 8 ஆகஸ்ட், 2016

உலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.


உலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.
உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.தொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை 2005-15 காலக்கட்டத்தை மரபின மக்களின்(ஆதிவாசிகள்) தசாப்தமாக கடைப்பிடிக்கிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி சர்வதேச ஆதிவாசிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“Indigenous Media, Empowering Indigenous Voices” (சுதேச ஊடகங்கள் மரபின மக்களின் குரல்களை பலப்படுத்துதல்) என்ற முழக்கத்தை இவ்வாண்டு முழக்கமாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. ஆதிவாசி சமூகங்களின் பொருளாதார-சமூக முன்னேற்றம், கலாச்சார-சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, சுகாதாரம் பேணல், மனித உரிமைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதே இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

ஆதிவாசிகளின் பிரச்சனைகளை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் உள்ளூர் ஊடகங்கள் நல்லதொரு பங்கினை ஆற்றி வருகின்றன. கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி பிரிவுகள் உலக முழுவதும் வாழ்கின்றனர். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மரபின பிரிவினரின் மக்கள் தொகை எட்டரை கோடிக்கும் அதிகமாகும். தமிழகத்தில் பழங்குடி மக்கள் இன்றைக்கும் மலைத் தொடர்களில் வனங்களில் நிறைந்து வாழ்கின்றார்கள். இயற்கை எழில் மிக்க மேற்கு மலைச்சாரலில், கிழக்குமலைத் தொடரிலும் வாழ்ந்து வருகிறார்கள்
கானா பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஃபார் சோசியல் பாலிசி’ நடத்திய ஆய்வில் உலகில் அதிகரித்து வரும் நகர மயமாக்கலே ஆதிவாசி மக்களை ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் 2002-ஆம் ஆண்டு மனித உரிமை கமிஷன் தயாரித்த அறிக்கையில் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசி மக்களின் இறையாண்மையின் மீதான அத்துமீறலே மனித உரிமை மீறலுக்கு வழிவகுப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை இரண்டையும் ஆராயும் பொழுது வளர்ச்சியடைந்த சமூகத்தின் கலாச்சாரத்தை இவர்கள் மீது திணிக்க முயல்வது ஆபத்தானது என்பத நாம் புரிந்துகொள்ள முடியும்.

உலகமெங்கும் உள்ள ஆதிவாசிகள் வாழ்வதற்காக போராடி வருகின்றார்கள்.

ஆதிவாசி மக்களின் இருப்பு, வாழ்க்கை சூழல், பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலைக் கொள்கிறது. உலகில் வறுமையில் வாடுவோரில் 15 சதவீதமும் பழங்குடியினர் ஆவர்.

இந்தியாவில் மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரால் ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம்,
சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு அநியாயமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

1990 களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை. தொழிற்சாலை வளர்ச்சி. தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற ‘வளர்ச்சி திட்டம்’ என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.
இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச் செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும் நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டது.

அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன் மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்கு தடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யும் என அஞ்சப்படுகிறது.

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது.
அதாவது “ஏழையைக் கொல்வோம். ஏழ்மையை அல்ல” என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது. இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும், இத்தகைய முயற்சியில் குறுகிய கால வெற்றியும் கூட சந்தேகத்திற்கு உரியதாயினும் சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும். எனவே இந்திய அரசு ராணுவ படைகளை உடனே வாபஸ் வாங்கி. ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம் பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகை செய்யக் கூடிய திறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை உடனே கைவிட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களான அருந்ததி ராய், நோம் சோம்ஸ்கி, மைக்கேல் லெபோவிட்ஸ் போன்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினர்.
ஆனால் இந்திய நடுவண் அரசும், மாநில அரசுகளும் இவற்றையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அதன் உச்சக்கட்ட நடவடிக்கைதான் கடந்த ஜூன் 28-ஆம் தேதி சட்டீஷ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம் கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமத்தில் 19 அப்பாவி பழங்குடியின மக்கள் கொடூரமாக சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவமாகும்.

இவ்வாண்டின் விதைப்பு திருவிழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என கூடி பேசிக்கொண்டிருந்த பழங்குடியின மக்களை பயங்கர மாவோயிஸ்டுகள் என கூறி மத்திய ரிசர்வ் படை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது. மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை இதுதான் என்றும், இது மிகப் பெரிய வெற்றி என்றும் அறிவித்து, மத்திய ரிசர்வ் போலீசுப் படை பெருமிதம் கொண்டது.  அதற்கு ஒத்து ஊதினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், உண்மைச் சம்பவத்தை உள்ளூர் ஊடகங்கள் கசியவிட்டன. அப்பொழுதுதான் அந்த பயங்கரம் உலகிற்கு தெரியவந்தது. இச்சம்பவத்தை பார்க்கும் பொழுது நமது அரசு சீருடை அணிவித்து ஆயுதங்களை கொடுத்து மாதம் தோறும் சம்பளமும் அளித்து மனநோயால் பீடிக்கப்பட்ட பயங்கரவாதிகளை மாவோயிஸ்ட் வேட்டைக்கு அனுப்பியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.

செவ்விந்திய பழங்குடி மக்களின் இரத்தத்தை குடித்து இன சுத்திகரிப்பை அரங்கேற்றிவிட்டு உருவானதுதான் அமெரிக்கா என்ற தேசம். இன்று அமெரிக்கா-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யெமன் போன்ற நாடுகளில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில்  தீவிரவாத வேட்டை என்ற பெயரால் தாக்குதல்களை நடத்தி அப்பாவிகளை கொன்று குவித்து வருகிறது.

மரபின மக்களை குறித்து ஆண்டுக்கு ஒரு தினம் மட்டுமே கவலைக் கொள்ளும் ஐ.நா, இத்தாக்குதல்கல் குறித்தெல்லாம் வெறும் ஒரு பார்வையாளராகவே இருந்து வருவது துரதிர்ஷ்ட வசமானதாகும்.

இலாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட உலமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளினால் பெரும் நிறுவனங்கள் தங்களின் சந்தைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் நடத்தும் படையெடுப்புகளால் பாரம்பரியமாக கட்டி காத்துவரும் வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் வாழ்வதற்காக போராடும் மரபின மக்களுக்கு ஆதரவாக மனிதநேயத்தை விரும்புவோர் களமிறங்க வேண்டும் என்பதே இத்தினத்தில் நாம் வைக்கும் கோரிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக