சனி, 20 ஆகஸ்ட், 2016

பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் பிறந்த நாள் ஆகஸ்ட் 21


ப. ஜீவானந்தம் ( ஆகஸ்ட் 21 , 1907 -
ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது
ஆண்டுகள் பொது வாழ்க்கையில்
ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த
பொதுவுடமைத் தலைவர் ஆவார்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில்
கழித்தவர். காந்தியவாதியாக,
சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப்
பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக
ஒரு பொதுவுடைமை இயக்கத்
தலைவராக படிப்படியாக உயர்ந்தவர்.
தம்மை நாத்திகராக அறிவித்துக்
கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா
பெரும் இலக்கியவாதியாகவும்,
பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர்.
குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி,
தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும்
ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
பாரதியின் பாதையைப் பின்பற்றி
பாமரர்களை எழுச்சி பெறச்
செய்த பாடல்கள் பலவற்றைப்
பாடியவர். பொதுவுடைமை கட்சிக்
கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ்
இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க்
கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம்
தீண்டாமை இயக்கம் , சுயமரியாதை
இயக்கம் போன்றவைகளில் தனிப்
பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு
வண்ணாரப்பேட்டை தொகுதியில்
சட்டமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற
ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் -
உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப்
பிறந்தார். பெற்றோர்
இட்டபெயர் சொரிமுத்து.
ஐயனார் என்ற கிராம
தெய்வத்தின் பெயர்தான்
சொரிமுத்து.
இளம் வயதில் அவரைக் கவர்ந்தது
மகாத்மா காந்தியின்
கொள்கைகள். அந்த நாளில்
நாடகம் நடத்திவந்த
அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத
தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப்
பழகினார். சில நாடகங்களையும்
அவருக்காக எழுதிக்
கொடுத்தார். நாடகம் எழுதித்
தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது
படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.
அந்தக் கவிதை காந்தியையும், கதரையும்
பற்றியது.
பத்தாம் வகுப்பு
படித்துக்கொண்டிருந்தபோது
"சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்"
என்ற நாவலை எழுதினார்.
"ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை
அவரே எழுதித் தயாரித்து
அரங்கேற்றினார். அந்த நாடகத்தில்
நடிக்கவும் செய்தார். காந்திய
வெளியீடுகளைப் படித்தார்.
ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில்
இருந்த காமரஜரால் பெரிதும்
மதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரத்திற்குப்
பிற்காலங்களில் உடுத்த மாற்றுடை
இல்லாத வறுமை நிலையிலும் வாழ்ந்தவர்.
[1]
ஒத்துழையாமை இயக்கத்தில்
இணைதல்
காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க
அழைப்பு வந்தது. காந்திஜியின்
கட்டளைப்படி அன்னியத் துணிகள்
அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ்,
திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர்
திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி
எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம்
நடைபெற்றது. அவருடைய பேச்சு
ஜீவாவைக் கவர்ந்தது. அது முதல் அவர்
கதர் அணியத் தொடங்கினார்.
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது.
வன்முறையில்
நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத்
சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை
அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி
எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு
இளைஞர்களைக் கவர்ந்தது.
சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு
எழுதிய "நான் ஏன்
நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில்
மொழிபெயர்த்தார்
ஜீவா.
ஈ.வெ.ரா. பெரியார் அதை
வெளியிட்டார். அதற்காக
ஜீவாவைக் கைதுசெய்து, கை -
கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக
இழுத்துச் சென்று திருச்சி சிறையில்
அடைத்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு
ஜீவா முழுக்க முழுக்க சோசலிசக்
கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை
அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை
உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை
எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை
மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை.
இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது. தன் கொள்கையைத்
துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில்
அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு
வெளியேறினார். அப்போது அவருக்கு
வயது 17.
வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில்
இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர்
பணி ஏற்றிருந்தார். ஐயரின் தீண்டாமைக்
கொள்கையை ஏற்கவில்லை. அந்த
ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு
அருகில், சிராவயல் என்ற ஊரில்
காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.
கடலூர் சட்டமன்றத் தொகுதி
ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ்
எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத்
திருமணம்
செய்துகொண்டார்.
ஆனால், அந்த அம்மையார் குமுதா
என்ற பெண் மகவைப்
பெற்றெடுத்த சில நாள்களில்
காலமானார். அதன்பிறகு 1948ஆம்
ஆண்டு பத்மாவதி என்னும்
பெண்ணை கலப்புத் திருமணம்
செய்துகொண்டார்.
உஷா, உமா என்ற இரு பெண்
குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும்
பிறந்தனர்.
இதழாசிரியராக
ஜீவாவின் இறுதிக்காலச்
செயல்பாடுகளில் முதன்மையாகக்
கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப்
பெருமன்றம்’ உருவாக்கம் என்று
கூறமுடியும் (1961). கொள்கையைப்
பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத்
தொடங்கிய ஜீவா, "தாமரை"
என்ற இலக்கிய இதழை 1959 இல்
தொடங்கினார். அதில்,
பொதுவுடமைக் கொள்கைக்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
"தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி
கவிதைகள் எழுதினார். 1933 இல் ஜீவா
எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி"
என்ற கவிதை நூல் வெளிவந்தது.
இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.
அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை
அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில்
தொழிலாளர்கள்
போராட்டங்களில் ஜீவா எழுதிய
பாடல்கள், தொழிலாளர்களை
எழுச்சி பெறச்செய்தன.
பொதுவுடமைக்
கட்சியில் இணைதல்
ஜீவா
பொதுவுடமைவாதியாகச்
செயல்படுவதற்கு அடிப்படையாக
அமைந்த காலச்சூழல் 1935 -39 ஆகும்.
இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’
இதழ் உருவாக்கப்பட்டது (1937).
‘தொழிலாளர் பாதுகாப்புக்
கழகம்’ எனும் பெயரில்
கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின்
மூலம் பல்வேறு தொழிற்சங்க
அமைப்புகள் உருவாயின. இவற்றின்
மூலம் தொழிலாளர்கள் தங்கள்
உரிமைகளுக்காகப் போராடினர்.
இரண்டாம் உலகப்போர்
உருவாவதற்கான ‘பெரும்
அழுத்தம்’ உருவாகும் சூழலில்
கம்யூனிஸ்டுகளால்
முன்னெடுக்கப்பட்ட
தொழிலாளர், விவசாய
இயக்கங்களின் எழுச்சி பிரித்தானிய
அரசு எந்திரத்தைத்
தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை
உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில்
சாத்தியப்படுத்தியவர்களாகக்
கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை
இயக்கத்தவனாகவும்
அடையாளப்படுத்திக்
கொண்டார். இந்தியக்
காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை
இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில்
அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட்
தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை
ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை
மாற்றியது. ‘சிறையிலிருந்து நான்
வெளிவரும்போது, கம்யூனிசக்
கோட்பாடுகளை
ஏற்றுக்கொண்டவனாகவே
வெளியே வந்தேன்’ என்று ஜீவா
எழுதுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி
வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை
எதிர்த்துக் கடும் பிரசாரம்
செய்தார். சீன சோஷலிச அரசு
இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை
ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின்
தேசியக் கவுன்சிலில் தீர்மானம்
நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய
பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட
காலங்களில் (1939-42) பம்பாயிலும்
சிறையிலும் தனது பெரும்பகுதியான
நாள்களை ஜீவா கழித்தார்.
இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட்
கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக்
கட்டுவதற்கான செயல்பாடுகளில்
தோழர்களோடு இணைந்து தீவிரமாகச்
செயல்பட்டார். 1948 இல்
கம்யூனிஸ்ட் கட்சித்தடை
செய்யப்பட்டபோது இலங்கைக்குச்
சென்று செயல்பட்டார்.
இக்காலங்களில் மார்க்சியக் கல்வி
பயிலுவதை முதன்மைப்படுத்திக்
கொண்டார். சோசலிசச் சரித்திரம்,
சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை
வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில்
அப்பொருண்மை குறித்து
எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில்
சொல்வதற்கு ஜீவா பல புதிய
சொல்லாட்சிகளை
உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி
ஐம்பதுகளின் தொடக்கத்தில்
ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும்
‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத்
தொடர்ந்து அத்துறை சார்ந்த
சோவியத் நூல்கள் தமிழில்
மொழியாக்கம்
செய்யப்பட்டன.
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும்
அதன் தொழிலாளர்
பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை
சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப்
பொறுப்பேற்க வேண்டிய சூழல்
ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’,
‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின்
ஆசிரியர் பொறுப்பையும்
இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
ஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட
சூழலில் தோழர்கள் அ. ராகவன்,
நீலாவதி, இராமநாதன்
உள்ளிட்டவர்களோடு இணைந்து
‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை
உருவாக்கினார். அவ்வியக்கத்தின்
இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும்
‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன.
அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில்
நடைபெற்றது (1936), டாங்கே
அம்மாநாட்டின் தலைமையுரையை
நிகழ்த்தினார். இவ்வகையில்
காங்கிரசிலிருந்து வெளியே வந்து,
சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த
சுயமரியாதை இயக்கத்தைக்
கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா
விரும்பினார். இதற்கு முரணாக
ஈ.வெ.ரா. செயல்படுவதாகக்
கருதினார். குறிப்பாக
அக்காலங்களில் நடைபெற்ற
தேர்தலில், நீதிக்கட்சியுடன்
ஈ.வெ.ரா. கொண்டிருந்த
தொடர்பை, ஜீவா
ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு
எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ்
தேர்தலில் வெற்றிபெற
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச்
செயல்பட்டார். இந்தப்
பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்,
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின்
பெயரில் ஜனசக்தியை வார
இதழாக வெளிக்கொண்டு
வந்தது (1937).
சட்டமன்றத்தில் ஜீவா
சென்னை வண்ணாரப்பேட்டைத்
தொகுதியிலிருந்து வென்று
சட்டமன்றத்திற்கு சென்றார்
ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர்
சட்டமன்ற உறுப்பினராக
இருந்தார்.1957, 1962 சட்டமன்ற
தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும்
வெற்றிப்பெற முடியவில்லை. [2]
மதுவிலக்கு பற்றிய விவாதம்
1952 ஜூலையில் மதுவிலக்கு பற்றிய
விவாதம் சபையில் நடந்தது. மது அருந்தக்
கூடாது என்று காந்திஜி கூறினார்
என்றார்கள் காங்கிரஸ்காரர்கள்.
ஜீவாவோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வள்ளுவர் கூறியிருக்கிறார் என்றார்.
நஞ்சுண்பார்கள் உண்பவர் என்கிற
குறளைக் கையாண்டார். அதே நேரத்தில்,
பிரச்சனையை தர்க்க ரீதியாகவும், நடைமுறை
சார்ந்தும் அலசினார். பல
நூற்றாண்டுகளாக இப்படி மதுவிலக்கு
வற்புறுத்தப்பட்டும் ஏன் அதை ஒழிக்க
முடியவில்லை என்கிற கேள்வியை
எழுப்பினார். இவ்வளவு காலமாக
முடியாதது ஒரு சட்டத்தால் மட்டும்
முடிந்து விடுமா என்றார். முடியவில்லை
என்பதற்கு அரசு தரப்பில் தரப்பட்டிருந்த
புள்ளி விபரங்களைச் சுட்டிக் காட்டினார்.
மதுவிலக்கு சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை
ஆண்டுதோறும் கூடி வருவதை எடுத்துக்
காட்டினார். [2]
பிச்சைக்காரர்கள் பற்றி
ராஜாஜி ஆட்சிக் காலத்தில்
தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது,
பிச்சைக்காரர்கள் பெருகிப்
போனார்கள். இது பற்றி சட்டமன்றத்தில்
காரசாரமான விவாதம்
நடைபெற்றது. அப்போது தலையிட்டு பேசிய
ராஜாஜி தனது ஆட்சிக்கு முன்பு ஊரில்
பிச்சைக்காரர்களே இல்லையோ என்று
கேலியாகக் கேட்டார். [2] அதற்கு ஜீவா
கூறியது -
ராஜாஜியின் ஆட்சிக்கு
முன்பும் பிச்சைக்காரர்கள்
இருந்தார்கள். திருவள்ளுவர்
காலத்திலிருந்து
பிச்சைக்காரர்கள்
இருக்கிறார்கள். அதற்கு
முன்பிருந்தும் பிச்சைக்காரர்கள்
இருந்தார்கள். ஆனால்,
திருவள்ளுவர் காலத்தில்
இருந்தவர்கள் எப்படி
இருந்தார்கள் என்று
கவனிக்க வேண்டும். இரந்தும்
உயிர்வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக
உலகியற்றியான் என்று
வள்ளுவர் சொன்னதை
ராஜாஜி அவர்களுடைய
கவனத்திற்குக்
கொண்டு வர
விரும்புகிறேன்.
—ப. ஜீவானந்தம், சட்டப்
பேரவையில் ஜீவா /
தொகுப்பு : கே.
ஜீவபாரதி
எம்.ஆர். ராதாவுக்கு ஆதரவாக
குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட
எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி
பதவி விலக, 1954 ஏப்ரலில் காமராஜர்
முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு
இறுதியில் நாடகங்களை
நெறிப்படுத்துவதாகச்
சொல்லி அரசு ஒரு மசோதாவைச்
சபையில் தாக்கல் செய்தது.
குறிப்பாக நடிகவேள்
எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை
செய்வதற்காகவே
இப்படியொரு மசோதாவைக்
கொண்டு வந்தார்கள்.
புனிதமானவர்கள் என்றும்,
தெய்வாம்சம் என்றும் பலரால்
நெடுங்காலமாகப் போற்றப்பட்ட
புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை
மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத்
தடுப்பதே மசோதாவின் நோக்கம்என்று அரசு
தரப்பில் கூறப்பட்டது. [2] இதற்கு ஜீவா
தந்த பதிலடி மிக நுணுக்கமானது .
கண்ணாடிக்கு முன்போய் நின்ற
மூக்கரையன் கண்ணாடியில்
தன் கோரமான முகத்தைப்
பார்த்துக் கொண்ட
போது தன் உருவம் எவ்வளவு
கோரமானது என்று சிந்தித்துப்
பார்க்காது, கண்ணாடியை
உடைத்தெறிந்தது போல,
புராணங்களில் உள்ள
ஆபாசத்தை எடுத்துச்
சொன்னால்,
இதிகாசங்களில் உள்ள
ஊழல்களை எடுத்துக்
காட்டினால்
காட்டுபவர்களின் மேல்
சீற்றப்படுகிறார்கள் சிலர்.
(சிரிப்பு) காரணம், அவர்கள்
மனம் புண்படுகிறதாம்.
வாஸ்தவம். புண்படத்தானே
செய்யும். ஆனால்,
எங்கள் மனம் மாத்திரம்
புண்படவில்லையா?
இவ்வளவு
ஆபாசமானவைகள்
எல்லாம் எங்கள் மதத்தில்
இருக்கின்றனவே என்று
எண்ணும்போது எங்கள் மனம்
மாத்திரம் புண்படவில்லையா
என்று கேட்கிறேன்.
—ப. ஜீவானந்தம், சட்டப்
பேரவையில் ஜீவா /
தொகுப்பு : கே.
ஜீவபாரதி.
ஜீவாவின் நூல்கள்
மதமும் மனித வாழ்வும்
சோஷலிஸ்ட் தத்துவங்கள்
புதுமைப்பெண் இலக்கியச்சுவை
சங்க இலக்கியத்தில்
சமுதாயக்காட்சிகள்
மொழியைப்பற்றி
ஜீவாவின் பாடல்கள்
தொகுப்பு
மேடையில் ஜீவா (தொகுப்பு)
சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
கலை இலக்கியத்தின் புதிய பார்வை
தேசத்தின் சொத்து
(தொகுப்பு)
ஜீவாவின் கூற்றுக்கள்
“ எனக்கு உங்களுடைய அபின்
தேவையில்லை. காரணம், அடக்கி
ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய
துன்பங்களையும் துயரங்களையும்
நிலை நிறுத்த அல்ல, ஆனால்
ஆளும் வர்க்கத்தாருடைய மீத
மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய
சமுதாய அமைப்பைப் படைக்கவே
நான் விரும்புகிறேன். அழகும்
நிறைவும் கொண்ட ஒரு
வாழ்வை சுவர்க்கத்திலன்று,
இந்த மாநிலத்திலேயே
நிர்மாணிப்பதற்காவே நான்
பணிபுரிகிறேன்.
எல்லாவிதமான அடக்கல்,
ஒடுக்கல், அடிமைத்தனங்களையும்,
சுரண்டல் சூறையாட்டங்களையும்
இந்தப் பூமண்டலத்திலிருந்து
துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய
சிறந்த இன்பத்திற்கும்,
வளர்ச்சிக்கும் இன்றியமையாத
பெளதிகச் சூழ்நிலைகளையும்,
சாதனங்களையும் படைக்கவே
நான் போராடுகிறேன். மனிதத்
தன்மையின் மாண்புகளைக்
காலடியில் தள்ளி மிதித்துத்
துவைக்கும் எல்லா பிற்போக்குத்
தீமைகளுக்கும் எதிர்டையான இந்த
அறப்போரில் எனது
பொருள்முதல்வாதமும்,
எனது நாத்திகவாதமும்
மாபெரும் சக்தியையும்,
உணர்ச்சிப் பெருக்கையும்
ஊட்டுகின்றன. நான் ஒரு
நாத்திகன், காரணம், நான்
மனிதனை நேசிக்கிறேன்.
நான் ஒரு நாத்திகன் - ஜீவா
நினைவகங்கள்
தமிழ்நாடு அரசு ப.ஜீவானந்தம்
நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி
மாவட்டம் நாகர்கோயிலில்
பொதுவுடைமை வீரர்
ப.ஜீவானந்தம் மணிமண்டபம்
அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தம்
மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கை வரலாறு
தொடர்பான புகைப்படங்கள்
கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது.
ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி,
புதுச்சேரி
இவரின் பெயரால் புதுச்சேரியில்
ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி
பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக