புதன், 24 ஆகஸ்ட், 2016

கிருஷ்ண ஜெயந்தி



கிருஷ்ண ஜெயந்தி 
கிருஷ்ண ஜெயந்தி (சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி (कृष्ण जन्माष्टमी) ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருஷ்ணர் சிலைகள்
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
வட இந்தியாவில்
ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

தென்னிந்தியாவில்

தென்னிந்திய வீடு ஒன்றில் ஸ்ரீஜெயந்தி கொண்டாடப் படுகிறது.
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.



ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள். தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு உரியவை. தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை. கிருஷ்ணா, முகுந்தா… கிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புமிக்கது. தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம். தர்மன் செய்த தவறு துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார். “என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். “பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள். தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேலை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்”   என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன்  கௌரவர்களை ஜெயித்து இருப்பார். இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, அண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள். அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது. அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம். கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான். கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால் நினைத்தாலேபோதும்,  மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார். பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம்  ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும்,  அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் சொன்னார். தன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார். அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின் உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தன. மிதந்து வந்த கட்டைகளை கொண்டு பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார். ஆனால் எவராலும் அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை.  வருத்தத்தில் இருந்தார் அரசர். அப்போது ஒரு கிழவன், “நான் இந்த கட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன். என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும்?” என்று கேட்க, ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல,  அதற்கு அந்த கிழவன், “சரி. அப்படியே செய்கிறேன். ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும். அதுவரை யாரும் ஆலய கதவை திறக்கக்கூடாது” என்றார். அரசரும் சம்மதித்தார். நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல், ஒருநாள் அவசர அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர். சிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர் அப்படியே மறைந்து விட்டார். கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா என்பதை உணர்ந்தார் அரசர். இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல் இருந்ததை கண்டு, தன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி குரல் ஒலித்தது. “மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்றது அசரீரி. கிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை.
 முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.? 
கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள். ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள். அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள். “நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா?” என்று கேட்டான் அந்த சிறுவன். அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள். “அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள். அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன். “பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன். அந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டால் பாட்டி. “ஏன் சிரித்தாய்?” என கேட்டான் சிறுவன். “அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.?” என்றாள் பாட்டி. “ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையை தா” என்றான் சிறுவன். “நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால் சொல்கிறேன். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்.” என்றாள் பாட்டி. “எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான். மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். “யார் இந்த அசுரனை கொன்றது?” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். பாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள். “இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது.” என்றாள். முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர் ஏற்பட்டது. “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார். அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான். இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம்.

 கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர் 

கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். “எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை. மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். “பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர். கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க. குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். “அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். “அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர்.

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா? 
நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.
கிருஷ்ணஜெயந்தி பூஜைமுறை 
 வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு. நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன். பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்....
 அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Nantri-wikkpedia,Niranjana

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக