வெள்ளி, 30 செப்டம்பர், 2016

உலக முதியோர் தினம் அக்டோபர் 01.


உலக முதியோர் தினம் அக்டோபர் 1.

ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி
சர்வதேச முதியோர் தினம் ( International Day of
Older Persons ) உலகம் முழுவதும் அக்டோபர் 1-
ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நோக்கம்
உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை
மதிக்கவும், மரியாதையை செலுத்தவும்,
குடும்பம் , சமூகம் மற்றும் நாட்டுக்கு
அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும்
வகையிலும், அவர்களின் அறிவு , ஆற்றல்
மற்றும் சாதனைகளை பார்த்துக்
கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு
எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.
முதியோர் நலன்
பொதுவாக 60 வயதை கடந்த
ஆண், பெண் அனைவரும் மூத்த
குடிமக்கள் அல்லது முதியோர் என்று
கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை
பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை
மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகின்றன.
உலக அளவில்
1991 -ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை
அறிவுறுத்தலின் படி, கீழ்க்கண்டவை
முதியோர்களுக்கான அத்தியாவசிய
விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை,
இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள்
போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
வாழ்வதற்க்கான நல்ல சூழலை
உருவாக்கிக் கொள்ள
அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட
வேண்டும்.
அவர்களை பாதிக்ககூடிய எந்த
கொள்கை முடிவுகளிலும் அவர்களின்
கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க
வேண்டும்.
சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள்
கொடுக்கப்பட வேண்டும்.
சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள்
அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை
அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும்
பொதுவான வரைமுறை ஆகும்.
இந்திய அளவில்
பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள்
நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007,
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின்
தேவையான பராமரிப்பை உறுதி
செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள்,
அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும்
இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில்
13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர்,
கோவா, குஜராத், ஹரியானா,
கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம்,
மகாராஷ்டிரா, ஓடிசா,
ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா,
மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு
யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை
இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி
உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் /
யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின்
விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை
நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை
எடுக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
இந்த சட்டம் வழங்குவது :
தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான
மற்றும் கட்டாயமான குழந்தைகள் /
உற்றார் மூலம் பெற்றோர் மற்றும்
மூத்தோர் நலன். பராமரிப்பு
உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த
குடிமக்களின் சொத்துக்களை
மீண்டும் ஒப்படைத்தல்.
கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு
சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு
இல்லங்கள் நிறுவுதல்.
மூத்த குடிமக்களின் சொத்துக்கள்
மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு
மருந்துகள் கிடைக்க செய்தல்.
தமிழ் நாட்டில் முதியோர்
நலத்திட்டங்கள்
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக
தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும்
முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள்
நடைபெறுகின்றன.
65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத
மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை
உதவித்தொகையாக
வழங்கப்படுகிறது.
இலவச மத்திய உணவு திட்டமும், இலவச
அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக
வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு
தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி
செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.
......................
பள்ளி விடுமுறைக்கு
தாத்தா, பாட்டி
வீட்டுக்கு போகிறோம்
என்று
சொன்னாலே குழந்தைகள் குதூகலம்
ஆகிவிடுவார்கள். காரணம்
அதிகப்படியான பாசத்தை தாத்தா வீட்டில்
தான் காணமுடியும்.
இப்படிப்பட்ட அன்புக்குரிய எல்லா
தாத்தா, பாட்டிகளின் மேன்மையையும்
உணர்த்துவதற்காகவும்,
உணர்வதற்காகவும் அனுசரிக்கப்படும் தினம்
- அக்டோபர் 1: உலக முதியோர்கள் தினம்.
கடந்த 1982-ம் ஆண்டில் ஐ.நா. அமைப்பால்
உருவாக்கப்பட்ட கமிட்டியின் மூலம்
முதியோர்களின் தேவைகள், அவர்களின் பங்களிப்பு
மற்றும் அவர்களை பாதுகாப்பது போன்றவை
தொடர்பாக ஆராயப்பட்டு 1990-ம்
ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இனி உலக
முதியோர்கள் தினம் என பிரகடனப்படுத்தியது.
முதியோர்களை பாதுகாப்பதில் இந்தியர்கள்
அதிக கவனம் செலுத்துபவர்கள். நமது
கூட்டுக் குடும்ப கலாசாரத்தைப் பார்த்து
அந்நியர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
படிப்பதற்காக, சுற்றுலாவுக்காக என
இந்தியா வரும் அயல்நாட்டவர்கள்,
இந்தியர்கள் உறவுகளோடு ஒன்றாக
வாழ்வதை பார்த்து இங்கே திருமணம்
செய்து கொண்டு செட்டில்
ஆவதையும் பார்த்திருக்கிறோம்.
அத்தனை பெருமைக்குறிய இந்தியாவில்,
அதுவும் தமிழ்நாட்டில்தான் பத்து மாதம்
சுமந்து பெற்ற தாயையும் கஷ்டப்பட்டு
வளர்த்த தந்தையையும் வீட்டில் வைத்து பராமரிக்க
முடியாமல் ரோட்டுக்கு அனுப்பும் அவலமும்
நடக்கிறது.
அதேபோல், பெற்றோர்களை பாதுகாக்காத
பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்
உருவாக்கும் அளவுக்கு தமிழ்நாடு
தள்ளப்பட்டது.
ஏன் இந்த நிலை?
திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும்
பெண் வீட்டார் முதலில் போடும்
கண்டிஷன், 'கல்யாணத்துக்கு அப்பறம்
பொண்ணும் மாப்பிள்ளையும் தனிக்
குடித்தனம் வைச்சுடணும்' என்பது தான்.
பிரச்னையே இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.
'அத்தனை வருடங்கள் வளர்த்து ஆளாக்கும்
பெத்தவங்களை விட்டுட்டு நாங்க மட்டும்
புகுந்த வீட்டுக்கு வர்றோம்.. ஏன் நீங்க வந்தா
என்ன தப்பு?' என புரியாமல் பேசும்
பெண்களை என்னவென்று
சொல்வது.
தனக்கும் அப்பா, அம்மா இருக்கிறார்கள்
அவர்களின் நிலை என்ன ஆகும் என நினைத்து
பார்ப்பதில்லை. பருவ வயதிலிருந்து ஓட
ஆரம்பித்து திருமணம், குழந்தைகள் வளர்ப்பு,
அவர்களது படிப்பு, திருமணம் என அனைத்து
கடமைகளும் முடித்துவிட்டு நிம்மதியாக கடைசி
காலத்தை பெத்த பிள்ளைகள், அவர்களின்
பேரக்குழந்தைகளுடன் கழிக்கலாம் என
நினைக்கும் பல முதியவர்களின் நினைப்பில்
மண்ணை அள்ளிப் போடும் பிள்ளைகள் தான்
இங்கே இருக்கிறார்கள்.
இன்றைய தலைமுறையினர் தங்கள் குழந்தைக்கு
பள்ளிப் போக, மற்ற விஷயங்களை கற்றுத்தர
இன்டர்நெட் போதும் என நினைக்கின்றனர்.
தொழில்நுட்பத்தை கற்றுத்தரும்
இணையதளம் கலாச்சாரம், பண்பாடு,
ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத் தராது.
ஆனால், வீட்டில் முதியவர்கள் இருந்தால்
ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது
அனுபவங்களை பகிர்ந்து
கொள்வார்கள். குழந்தைகளை
மட்டுமல்ல உங்களையும் வழிநடத்தும் என்பதில்
எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
வயதாக ஆக முதியவர்களின் உடல் மற்றும்
மனதும் குழந்தைப் பருவம் போன்று ஆகிவிடும்.
இதையே 'செகண்ட் சைல்ட்வுட்' என்பார்
ஷேக்ஸ்பியர். எனவே தான் முதியவர்கள் சக
குழந்தைகளுடன் மிக அன்பாக பழகுகின்றனர்.
பொக்கிஷமாக பாதுகாக்க
வேண்டிய முதியவர்களை வீட்டில் வைத்து
பாதுகாப்பது நமது முக்கிய கடமை. நீங்களும்
ஒருநாள் தாத்தா பாட்டி ஆவீர்கள்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இனியாவது சிந்திப்பீர்களா?
சரி இனி பேருந்தில் நின்று கொண்டு
வரும் முதியவர்களுக்காவது இடம்
கொடுப்பீர்கள் தானே?

******************"****************
அக்டோபர் 1ஆம் தேதி “உலக முதியோர் தினமாக”
கொண்டாடப்பட்டு வருகிறது. 1990
ஆம் ஆண்டிலிருந்து இந்த “சர்வதேச முதியோர்
தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் எனக்கு இம்மாதிரி
தினங்களை கொண்டாடுவதில்
உடன்பாடில்லை. ஆனால் இன்றைய அவசர
உலகில் இம்மாதிரியான தினங்கள்
அவசியம் தான் என்ற எண்ணம் தோன்ற
ஆரம்பித்து விட்டது. குறைந்தபட்சம்
இம்மாதிரியான தினங்களை ஒரு
விழிப்புணர்வு தினமாகவாவது நினைக்க
தோன்றுகிறது. “பெண்கள் தினம்”,
“ஆண்கள் தினம்” (இந்த தினம் அதிகம்
பிரபலமடையவில்லை – ஆண்கள்
எல்லாத்திலும் விட்டுக்கொடுத்து
போவது தான், பிரபலமடையாமல் இருப்பதற்கு
காரணம்), “அன்னையர் தினம்”, “தந்தையார்
தினம்” என்கிற வரிசையில் “முதியோர் தினமும்”
சேர்ந்து விட்டது. இன்றைக்கு இந்த விழிப்புணர்வு
தினம், மிகவும் அவசியம் தான்.
பெற்றோர்கள் தங்களின் கடமையாக
பிள்ளைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில்
அவர்கள் முன்னேற வழி வகுக்கிறார்கள்.
ஆனால், பிள்ளைகளோ, வளர்ந்த பின்பு,
பெற்றோர்களை பாதுக்காப்பது தங்களின்
கடமை என்பதை மறந்து, அவர்களை முதியோர்
இல்லத்தில் சேர்ப்பதும், அவர்களின் தேவைகளை
பூர்த்தி செய்யாமல் இருப்பதும்,
இன்னும் ஒரு சில பிள்ளைகளோ, தங்களின்
தேவைக்கு அந்த வயதான பெற்றோர்களை
வேலைக்கு அனுப்புவதும் உலகம் முழுவதிலும்
நடந்து கொண்டு தான்
இருக்கின்றன.
இங்கு சிட்னியிலும், நான் அலுவலகத்துக்கு
செல்லும் வழியில், ஒரு சில முதியவர்கள்
சாலையோரத்தில் உட்கார்ந்து, பிச்சை எடுக்கும்
அவலத்தை பார்த்திருக்கிறேன். அவர்கள்
பக்கத்தில் ஒரு அட்டையில் “Domestic Violence.
Homeless now.Help needed” என்கிற
வாசகங்கள் இருக்கும். அவர்களிடம்
சென்று அனுமதி பெற்று புகைப்படம்
எடுக்கலாம் என்று எண்ணுவேன். ஏனோ,
அவர்களை காட்சிப் பொருளாக
ஆக்குவதற்கு மனம் இடம்
கொடுத்ததில்லை.
இங்கும் முதியோர் இல்லங்கள் நம் நாட்டைப் போல்
நிறைய இருக்கின்றன. ஓவியாவின் முதல்
பிறந்த நாளை, இந்த மாதிரி ஏதாவது ஒரு
முதியோர் இல்லத்துக்கு சென்று
அவர்களுடன் கொண்டாடலாம்
என்று நினைத்தோம். ஆனால் வெளி
மனிதர்கள் யார் வேண்டுமானாலும்
முதியோர் இல்லங்களுக்கு சென்று இந்த
மாதிரி நிகழ்வுகளை கொண்டாட
முடியாது, முதியோர் இல்லத்தில்
இருப்பவர்களின்
சொந்தக்காரர்கள் மட்டும் தான்,
இந்த மாதிரி நிகழ்வுகளை
கொண்டாடமுடியும் என்று
சொல்லிவிட்டார்கள். அந்த
சமயத்தில் தான், அடாடா, நாம் நம்
நாட்டில் இல்லாமல் போய்விட்டோமே என்ற
ஏக்கம் ஏற்பட்டது.
அன்றைக்கு கூட்டுக்குடும்பமாக இருந்த கால
கட்டத்தில், இவ்வளவு வியாதிகள்
வந்ததில்லை. மேலும் எதற்கெடுத்தாலும்
மருத்துவரிடம் சென்றதுமில்லை. அதற்கு
காரணம் பெரியவர்கள் கூறும் “பாட்டி
வைத்தியம்” தான். இன்றைக்கு அந்த பாட்டி
வைத்தியம், மறைந்து கொண்டு வருகிறது.
நாம் சாதாரண சளி பிடித்தால் கூட
மருத்துவரிடம் செல்வது பழகிவிட்டது.
இன்றைய நவநாகரிக உலகில், பாட்டி,
தாத்தாவுடன் வளரும் குழந்தைகள் மிகவும்
கொடுத்து வைத்தவர்கள். இந்த
தலைமுறையினர் தான் கூட்டுக்கும்ப
வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து
விட்டார்கள். அடுத்த தலைமுறையினராவது,
அந்த முற்றுப்புள்ளியை அழிப்பார்களா
என்று தெரியவில்லை.
முதியவர்களின் அருமைகைளை தெரிந்து,
அவர்களுக்கு உரிய மதிப்பை அளித்து அவர்களை
குழந்தைகளைப் போல் பாதுக்காப்பதே
பிள்ளைகளின் முக்கிய கடமையாகும். நாம்
வாழ்க்கையில் வேற எந்த நற்செயலை
செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை, முதியவர்களை புறக்கணிக்கும்
தீய செயலை செய்யாமல்
இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றி
பெற முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக