வெள்ளி, 16 செப்டம்பர், 2016

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் செப்டம்பர் 17,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் செப்டம்பர் 17,

நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.

குடும்பம்

நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014-ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார்.

இளமைப் பருவம்

இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார்.

குசராத்தின் முதல்வர்

அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

சர்ச்சைகள்

மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர். இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவிற்குள்ளும் பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார்.கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாடப்பட்டுள்ளது. குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தல்

பரப்புரை

இந்தியப் பொதுத் தேர்தல், 2014 நடந்த போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்பிரல் 2014 முதல் மே 2014 முடிய இரண்டு மாதங்களில் நாடெங்கும் எட்டு திக்குகளில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

பிரதமர் பதவி வேட்பாளர்

2014ம் ஆண்டு 16ஆம் மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். 

வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாரணாசி தொகுதியிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜகவின் மக்களவைத் தலைவர்

பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார்.

இந்தியப் பிரதமர்

மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

ஆட்சி முறை

அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பயணம்

அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கான மொத்த செலவு 37 கோடிகள் ஆகும். இதில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இதில் அதிக செலவாக ஆஸ்திரோலியா சென்றதற்கு 8.91 கோடிகளும், குறைந்த செலவாக பூடான் சென்று வந்ததற்காக 41.33 லட்சங்களும் செலவிடப்பட்டுள்ளது.

நூல்கள்

சக்தி பாவ் (2015)

சமூக நல்லிணக்கம் (2015)

ஜோதி பூனா (2015)

'சமூக நல்லிணக்கம்' குஜராத்தி மொழியில் 'சமாஜிக் சம்ரஸ்தா' (2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக