வியாழன், 8 செப்டம்பர், 2016

தலித் தலைவர் இளையபெருமாள் நினைவு தினம் செப்டம்பர் 09,


தலித் தலைவர் இளையபெருமாள் நினைவு தினம் செப்டம்பர் 09,
இளையபெருமாள் லட்சுமணன் (L. Ilayaperumal, ஜூன் 26, 1924 - செப்டம்பர் 9, 2005) தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் (1952 - ) நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய மனித உரிமைக்கட்சி ஆரம்பித்து மக்களுக்காக போராடியவர்.

வாழ்க்கை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்த வந்த இரு குவளை முறை நீக்கப்பட்டது.

சாதிய எதிர்ப்பு போராட்டம்
இளையபெருமாள் 1945ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1946ல் காட்டுமன்னார்கோவிலுக்கு திரும்பும் போது ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு இரு நாள் செல்லாத தலித் ஒருவர், பண்ணையார் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர். பல தலித்துகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். துன்புறுத்திய அந்த பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதம் பெற்று தரும்வரை இளையபெருமாள் ஓயவில்லை.

நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், இடைநிலை சாதியினர் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக மட்டுமே தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். மேல்சாதி மக்களால் போலிக்குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைபட்டார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு இவருடைய சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி உருவாக்கம்
இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார். இவர் 1962 முதல் 1967 வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார். மேலும் 1979-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தார். 1980-ல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1984-ல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.

இளையபெருமாள் கமிட்டி அறிக்கை
காந்தி பிறந்த ஊரில், பிரதமர் இந்திராகாந்தி தொகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது” என்று 1969 - ல் தனது இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டி தனது நேர்மையினை பதிவு செய்தார் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவரான இளையபெருமாள். ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் அவருடைய காலத்திலேயே புறக்கணிக்கப்பட்டது தலித் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.

தலைவர்களிடம் நன்மதிப்பு
தந்தை பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர். தோழர் ஜீவாவை தனது ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இளையபெருமாள். சாதி இந்துக்களால் புறக்கணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார் என்கிற காரணத்தாலே தென்னாட்டு அம்பேதகர் என அழைக்கப்படுகிறார் இவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக