சனி, 17 செப்டம்பர், 2016

பெரியார் 25

செப்.17: பெரியார் பிறந்த தின சிறப்பு பகிர்வு.. பெரியார் 25.

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது! 
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக